மொழி பொய்த்த உணர்வுகள் – 18

மொழி பொய்த்த உணர்வுகள் – 18
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 18

என்னவோ அந்த ஆண்மகனை இந்த வீராங்கனை ஒற்றை கைக்கொண்டு நிறுத்தி விடுபவள் போல தடுக்க, அவனுக்கு வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. அவளிடம் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து அவன் நேசத்தை கூறுவதற்காகவே அவளருகே வந்தான்.

அவளால் ஒப்புக்கொள்ளவே முடியாது என தெரியும். ஆனாலும், அவன் மனதை அவளிடம் கூற வேண்டுமே! அவளுக்கு ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் களைய வேண்டுமே! அதோடு நேசத்தை வெளிப்படுத்தும் போது… அவளது விழிகள் என்ன மொழி பேசும்? எதை தனக்கு உணர்த்தும்? என்னிடம் என்ன வேண்டி நிற்கும்? எல்லாம் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமே! அதைக்கொண்டே அவளருகே வந்தான்.

ஆனால், பின்னோக்கி நடந்து இந்த விளையாட்டை தொடங்கி வைத்தது பெண்ணவள் தான். செல்ல பூனையாக அவன் பாராமுகம் தாங்காமல் அவனையே சுற்றி வந்தபொழுது குழந்தையாக தெரிந்தவள், இப்பொழுது பின்னோக்கி நடந்து தான் ஒரு குமரி என உணர்த்தினாள். இந்த நிமிடத்தில் இத்தனை நெருக்கத்தில் அவனை ஆண் எனவும் உணர்த்தினாள்.

இதழ் திறந்து காதலை மொழி பெயர்க்க நினைத்தவன், இப்பொழுது இதழ்களை பிரிக்காமலேயே காதலை உணர்த்த நினைக்க, அவனுக்கே அவன் எண்ணவோட்டம் மெல்லிய பதற்றத்தை தந்தது. அதனை சமாளிக்கும் பொருட்டு, “எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நீயே வரவெச்சுடுவ போல?” அவளது கரங்களை பார்வையால் வருடியபடியே ருத்ரன் கூற, அவனை ஏறிட்டு பார்த்தவள் மெல்ல கைகளை விலக்கியபடி விழிகளை தாழ்த்தி கொண்டாள்.

“பொம்மு என்னை நிமிர்ந்து பாரு. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என ருத்ரன் கூற, முதன்முதலில் அழைக்கும் பிரத்யேக அழைப்பெல்லாம் அவள் மனதில் பதியவேயில்லை. அவன் சொல்லிவிடப்போகிறான் என்னும் அச்சமே பிரதானமாய் இருந்தது.

அவன் கேட்டு அவள் மறுப்பதா? அது அவளால் முடியுமா? ஆனால், அவளால் ஏற்கவும் முடியாதே! அம்மா, மணமாகாத அண்ணன், இவர்கள் அனைவரையும் தாண்டி அப்பா? அவர் நிச்சயம் ஒப்புக்கொள்ளவே மாட்டாரே! மனம் கலங்க, அதை முகம் பிரதிபலிக்க… மொத்தத்தில் அவள் அவன் கூறியதற்கிணங்க நிமிர மட்டும் இல்லை.

“சௌபி…” இந்த முறை அவள் கலக்கம் பொறுக்காமல் சிறு அதட்டலோடு அழைத்தான். அந்த அதட்டல் சற்று வேலை செய்ய, அதில் அவள் நிமிர்ந்து பார்க்க, அவளிடம் சொல்லிவிட எண்ணியவன், “நான் உன்…” என தொடங்க, அவசரமாக அவன் இதழ்களை அவள் தன் கரம் கொண்டு மூடினாள். நடுங்கிக் கொண்டிருந்த விரல்கள் அவளது அச்சத்தையும், பதற்றத்தையும் அவனுக்கு தெளிவாக உணர்த்தியது.

யோசனையாக அவன் புருவம் சுருக்க, “நேரம் ஆயிடுச்சு. நான்… நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றாள் நிலம் பார்த்து. அவனது சிவந்த விழிகளை காணவில்லை. கண்டிருந்தால், பெண்ணவளின் வார்த்தைகள் உறைந்து போயிருக்கும். ஆனால், வழக்கம்போல இம்முறை கோபத்தை மௌனத்தில் காட்ட அவனுக்கு மனமில்லை போலும்.

அவளது தாடையைப் பற்றி மேலுயர்த்த அந்த கரங்களின் அழுத்தமே அவன் கோபத்தை பறைசாற்ற, அச்சம் அவளை திண்றது. இதயம் படபடக்க, முகத்தில் கலவரத்தோடு, விழிகளில் கலக்கத்தோடு ருத்ரனை ஏறிட, அவன் மனம் கனிந்தது. அவளை இந்த சூழலில் கஷ்டப்படுத்தவும், அவளிடம் இந்த நிலையில் காதலை தெரிவிக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை.

அவளிடமிருந்து விலகியவன் பேசாமல் அவன் இடம் சென்று அமர்ந்து கொண்டான். தலை பாரமாய் அழுத்த அவனது கரங்கள் தலையை தாங்கியது. இயலாமையோடு அவனை பார்த்தவள், கைக்குட்டையால் முகத்தை துடைத்துவிட்டு அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் பியூன் காஃபியோடு ருத்ரனின் அறையில் இருந்தார்.

சௌபி ருத்ரனை சொல்ல விடாமல் தடுத்த காதல்… காஃபி வடிவில் அவன் முன் அமர்ந்து, அவனைப்பார்த்து கண்சிமிட்டி சிரித்தது. ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. உன்னை எப்படி கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். போடி’ என ருத்ரனின் மனம் செல்லமாய் வீம்பு கொண்டது.

** சௌபிக்கு எதுவும் ரசிக்கவில்லை. ருத்ரனில்லா உலகம் சூனியமாய் இருக்கும் என அவள் எதிர்பார்த்ததே இல்லை. கோவை ஹூண்டாயை விட்டு வந்ததிலிருந்து அப்படிதான் அவளுக்கு இருந்தது.

இந்த இரண்டு வாரமாக அவளது நட்பு வட்டங்கள் அழைத்துக் கொண்டேதான் இருந்தனர். ‘வீட்டில் வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். நான் வேலையில் இணைவது சந்தேகம் தான்’ என்பது போல இவள் சமாளித்து வந்தாள்.

வந்தனா தான், “ஓ அப்ப சீக்கிரமா டும் டும் டும்ன்னு சொல்லு” என கேலி பேச, அவளுக்கு கலக்கமானது. ‘ருத்ரனை மறந்து விட்டு புது வாழ்வை யோசிக்க முடியுமா?’ மனம் முழுவதும் பயம் சூழ அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. ஏதாவது நல்ல வேலை தேடி சென்று விடுவோம், வீட்டில் கேட்டால் “கொஞ்ச நாளைக்கு வேலைக்கு போக வேண்டும்” என சொல்லி இப்போதைக்கு சமாளிப்போம் என முடிவெடுத்தாள். தற்காலிக தீர்வு தான். இதுவே அவளுக்கு தற்போதைக்கு போதுமாய் இருந்தது.

சௌபிக்கு சீனியர் வசந்த் வேலை பார்க்கும் ஈரோட்டில் இருக்கும் கார்மெண்ட்ஸில் இன்டெர்வியூவிற்கான அழைப்பு வந்திருந்தது. “அவ்வளவு தூரம் எதுக்கு?” என தந்தை பொன்னுசாமி மறுக்க, “பக்கத்திலேயே எதுவும் ட்ரை பண்ணு டா” என அண்ணன் வினோத் கூற,

சௌபியின் அன்னை சாந்தாமணியோ, “சும்மா அவ்வளவு காசு கட்டி படிக்க வெச்சுட்டு அங்க விட மாட்டேன், இங்க விட மாட்டேன்னு சொல்லறீங்க. உங்க சித்தி வீடு பெருந்துறையில இருக்கல்ல. அங்க போயி தங்கிக்கலாம். அங்கிருந்து ஈரோடு போயி இன்டெர்வியூ அட்டெண்ட் பண்ணுவியாம். நல்ல படிச்சுட்டு இன்டெர்வியூல செலக்ட் ஆகற வழியை பாரு” என கணவனிடம் தொடங்கி, மகளிடம் முடித்தார்.

“உன் தங்கச்சியை பாக்கணும்ன்னா போயிட்டு வா சாந்தா. அதுக்கு எதுக்கு புள்ளைய அங்க இன்டெர்வியூ அனுப்பற" என பொன்னுசாமி கேட்க,

“ஆமா, இவ ஆறு மாசம் வேலை பாத்தே, இவ வேலை செய்யற அழகுக்கு வேலை தர மாட்டேனுட்டாங்க. இதுல ஒரு நாள் வெக்கிற இன்டெர்வியூல தான் இவளை கூப்பிட போறங்களாக்கும்” என சாந்தாமணி இதுதான் சமயமென மகளை சாட,

“அப்பறம் எதுக்கு புள்ளைய அலைய வெக்கிற?” என பொன்னுசாமியும் கூற, வினோத் சிரித்தான். “வேலை வாங்கிட்டு பேசிக்கறேன்” என அண்ணனை மட்டும் இவள் அம்மா, அப்பாவுக்கு கேட்காமல் கடிந்து கொண்டாள்.

சாந்தாமணியோ கணவனிடம், “போக வேண்டாம்ன்னு சொன்னா அதையே சொல்லி காட்டிட்டு இருப்பாங்க. நான் போயிருந்தா வேலை கிடைச்சிருக்கும். நீங்க தான் அனுப்பலைன்னு சொல்லுவா. அதுனால கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்” என கூறிக் கொண்டிருந்தார். சௌபி வேலை வாங்கவே மாட்டாள் என அனைவரும் நம்ப,

“அம்மா அப்போ எனக்கு வேலை கிடைச்சா…?” என சௌபி இழுக்க, “கிடைச்சா பாக்கலாம்” என்றார் சாந்தாமணி. “வேலைக்கு அனுப்புவீங்களா மா?” என ஆர்வமாக மகள் கேட்க, அன்னைக்கு எதுவோ உறுத்தியது. அவள் கல்லூரிக்கு கூட ஹாஸ்டல் செல்ல விரும்பாததால் தான் சிறிய கல்லூரி என்றபோதிலும் அருகில் இருக்கும் கல்லூரியில் இணைந்தாள். இப்பொழுது ஏன் இப்படி கேட்கிறாள் என யோசித்தார்.

“ஈரோடு பாப்பா. அங்க எப்படி இருப்ப?” என வேண்டுமென்றே சாந்தாமணி போட்டு வாங்க, அம்மாவின் விசாரணையில் சுதாரித்தவள், “ஹையோ அம்மா சும்மா கேட்டேன். வேலை வாங்க முடியாது சொன்னீங்க தானே, வாங்குனா என்ன செய்வீங்கன்னு கேட்டேன். அவ்வளவுதான்” என சமாளித்து பேசினாள். அப்போதைக்கு அந்த பேச்சை அன்னை விட்டுவிட, அம்மாவும், மகளும் மட்டும் பெருந்துறை சென்று வந்தனர். சௌபி நல்லபடியாக இன்டெர்வியூ அட்டெண்ட் செய்திருந்தாள். இன்டெர்வியூவின் முடிவுகள் வர சில நாட்கள் ஆகும் என்று கூறியிருந்தனர்.

வினோத் என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றி கொண்டிருந்தான். ராகிணியின் அக்காவின் திருமணம் நெருங்க, அவளின் அழுகையும் அதிகரித்தது. இருவருக்குமிடையில் சண்டைகள் அதிகமாக வர தொடங்கின. அவளின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் வீட்டில் பேச்சை தொடங்கினான். தொடங்கும் போதே சற்று உறுதியாகவும், இதுதான் என் முடிவு என்பது போலும் பேச, பொன்னுசாமியால் பேசவே முடியவில்லை.

சொந்தத்தில் காதல் திருமணம் என்றாலே, ‘அது எப்படி வேறு இனத்தில்?’ என யோசிப்பவர், ஒத்துக்குபவர். இன்று பெற்ற மகனே, அதுவும் தற்பொழுது குடும்பத்தினை ஏற்று நடத்தும் பொறுப்பில் இருப்பவனே, வேற்று இன பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்று நின்றால் அவரால் என்ன பேச முடியும்? மணமாகாத தங்கையைப் பற்றி கூட யோசிக்க தோன்றவில்லையா? எப்படி இவனால் இப்படி பேச முடிகிறது? அவனது செயலில் மனம் வெறுத்து போனார்.

சாந்தாமணி தான் மகனிடம் கோபமாகவும், அழுகையாகவும், சமாதனமாகவும் பேசிக் கொண்டிருந்தார். என்ன பேசியும் அவன் அவனது நிலையில் உறுதியாக இருக்க அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

பொன்னுசாமியோ, “என்னால இதெல்லாம் பாக்க முடியாதுபா…” என எதையோ தொடங்க, “அப்பா சும்மா உயிரோட இருக்க மாட்டேன் அது இதுன்னு பொலம்பிடாதீங்க. எனக்கும் சாவை தவிர வேற வழியில்லை. நீங்க மறுத்தா, என் முடிவும் அதுதான்” என அழுத்தம் திருத்தமாக கூற, அண்ணன் ஏன் இப்படி எல்லாம் பேசுகிறான் என சௌபி கவலை கொண்டாள். பெரியவர்கள் பேசும்போது குறுக்கே நுழைவதும் தவறாக தோன்ற, ஒரு ஓரமாக நின்று மூவரின் வாக்குவாதங்களை கேட்டு அழுது கொண்டிருந்தாள்.

வினோத்திற்கும் நெருக்கடியான சூழல். வேறு வழியில்லாமல் தான் கடினமாகவும், பிடிவாதமாகவும் பேசினான். இல்லையெனில் மறுத்து விடுவார்கள் என தெரியும். மொத்தத்தில் அன்றையதினம் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலில் தான் கடந்தது.

அடுத்து வந்த சில தினங்களில் வினோத் இதைப்பற்றி எதையும் பேசவில்லை. பெற்றவர்களாலும் பேச முடியவில்லை. ராகிணியின் அக்கா திருமணம் முடிந்ததும், “அப்பா அவங்க வீட்டுல பேச போகணும்” என்றான் வினோத் அறிவிப்பாக.

சாந்தாமணி தான், “தங்கச்சி கல்யாணம் முடியட்டும் பா” என்று சொல்ல வேண்டியதாய் இருந்தது. “அவங்க வீட்ல பேசிட்டு வந்துடலாம் மா. கல்யாணம் வேணும்னா மெதுவா வெச்சுக்கலாம்” என வினோத்தும் இறங்கி வந்தான். அவனுக்கும் இந்த உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. அவனது பிடிவாதம் பெற்றவர்களுக்கு துளியும் பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் ராகிணியின் வீட்டிற்கு சம்மந்தம் பேச சென்றார்கள்.

ஆனால், ராகிணியின் வீட்டில் திருமணத்தை தள்ளி வைக்க அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. “ஏற்கனவே வேற இனத்துல கல்யாணம். எங்க பொண்ணு ரொம்ப பிடிவாதம் பிடிக்கபோயி தான் ஒத்துக்கறோம். இதை இப்ப பேசி முடிச்சுட்டு அப்பறம் தள்ளி வெச்சா சொந்தபந்தம் எல்லாம் எதுவும் குழப்பம் பண்ணுவாங்க. கையோட கல்யாணத்தை முடிச்சுடலாம்” என ராகிணியின் அப்பா கறாராக பேசிவிட, வினோத்தும் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க, சௌபியின் பெற்றவர்களுக்கு ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

சீக்கிரமாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று வேறு வழியே இல்லாமல் ஒரே மாதத்தில் ஏற்பாடு செய்தனர். பொன்னுசாமிக்கும், சாந்தாமணிக்கும் மகளை குறித்து கவலை அதிகமானது.

3 Likes

sowbi yen akka ippadi panra? ruthran mela nambikka illaya? kadhalai sollavum matta, solla vidavum mattala? pavam ruthran… :neutral_face::neutral_face:

1 Like

hmm s gowri… veetta ninachu worry panara…

1 Like

சீக்கிரம் சேர்த்து வையுங்க அக்கா ருத்ரன் அழகான காதல் உணர்வுகள் பார்க்கணும். கவிதை வாசிக்கரது போல இருக்கு… அழகா… :purple_heart:

1 Like

sure dear :slight_smile:

1 Like