மொழி பொய்த்த உணர்வுகள் – 19

மொழி பொய்த்த உணர்வுகள் – 19
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 19

கோவை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்த திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்த மண்டப வளாகத்தில் வளர்ந்திருந்த மரங்களின் கீழே, அணிவகுத்து நின்ற இரு சக்கர வாகனங்களும், பெயருக்கு இருந்த ஒன்றிரண்டு பழைய மாடல் கார்களும் அது நடுத்தர இல்ல திருமணம் என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது. வினோத், ராகிணியின் திருமண வைபவம் தான் அது.

வரவேற்பு பகுதியில் நின்றிருந்த சாந்தாமணி, “பரணி… எங்க போயிட்டு இருக்க? சத்த வரவேற்புல நில்லேன். எம்புட்டு நேரமா கூப்டுட்டு இருக்கேன். நான் போயி உங்க அப்பா என்ன செய்யராருன்னு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடறேன்” என சொல்ல சௌபர்ணிகாவின் முகம் தந்தையை எண்ணி வாடியது.

“இல்லைங்கம்மா அப்பா ஏதோ கோபமா இருக்காங்க போல. ஏதாவது சண்டை வந்துடுமோன்னு பயமா இருக்குங்க மா” என சொல்லும்போதே அழுகைக்கு தயாரானாள். இப்படி சட்டென அழுகைக்கு மாறும் வழக்கம் கொண்டவள் இல்லை தான், இருந்தாலும் இன்றைய நிகழ்வு அவளை அத்தனை பயம் கொள்ள வைத்தது.

சாந்தாவால் சுற்றிலும் ஆட்களை வைத்துக்கொண்டு மகளை அதட்டவும் முடியாமல், “நீயும் உன் பங்குக்கு அழுது மானத்தை வாங்குனா ஆச்சா?” என மெதுவாக அதே சமயம் அழுத்தமாக அதட்ட, அவளுக்கு வந்த அழுகையும் நின்று போனது.

“சரி சிரிச்ச முகமா வரவேற்புல நில்லு. கல்யாண மாப்பிள்ளைக்கு தங்கச்சி நீ. அது ஞாபகத்துல இருக்கோனும். நான் போய் உங்க அப்பாவை பேசி கூட்டியாறேன்” என எடுத்து கூற அவள் வாய் தானாக, “சரிங்கம்மா” என்றிருந்தது. பேசாமல் போய் பாவையாக வரவேற்பில் நின்றிருந்தாள்.

சௌபிக்கு தெரியாதா அவளது தந்தை பொன்னுசாமியைப் பற்றி. அந்த கால மனிதர். காதல் திருமணம், கலப்பு திருமணம் என்று கேள்வி பட்டாலே ஒதுங்கி கொள்வார். ஆனால், நாளை அவரின் சொந்த மகனுக்கே வேறு இனத்தை சேர்ந்த பெண்ணுடன் காதல் கலப்பு திருமணம்.

பொன்னுசாமி வேலையில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து மகனை நம்பி தான் குடும்பம் ஓடுகிறது. அந்த மகன் இவளை தான் மணப்பேன் என ஒற்றை காலில் நிற்கும் பொழுது எதிர்த்தா நிற்க முடியும்? அதுவும் அவன் சம்மதம் கேட்டால் கூட பரவாயில்லை. அவன் தருவதோ தகவல். தந்தை மிகவும் மனமொடிந்து இருக்கிறார் என்பது அவளுக்கும் புரிந்திருந்தது.

வினோத் விரும்பியதாக கூறிய ராகிணியிடமும் அவருக்கு சொல்வதற்கு ஒரு குறையும் இல்லை. ஆனால், இப்படி வேறு இனத்தில் திருமணம் என்பதையெல்லாம் அவரால் யோசிக்க கூட முடியவில்லை. அதுவும் மகளுக்கு திருமணம் முடிந்திராத இந்த சூழலில் அவரால் மகனின் செய்கையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மன சுணக்கம் என்பது இல்லாமல் எப்படி இருக்கும்?

வரவேற்பில் நின்றிருந்த சௌபி அனைவரையும் வரவேற்றபடி இருந்தாலும், அவளுடைய மனம் தந்தையை எண்ணி கலங்கியது. அவள் தந்தை, அவளுக்கு என்றுமே பெருமிதம் தான். குடும்பம் ஆஹா, ஓஹோ என்று வாழாதபோதிலும் ஆண்பிள்ளைகள் மட்டுமல்ல, பெண்பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து சாதித்தவர்.

அவருக்கு இப்பொழுது வேலை இல்லை தான். வருமானமும் இல்லை தான், ஆனாலும் முன்கூட்டியே அவள் படிப்பிற்கென்று ஒரு தொகையை சேமித்து வைத்திருந்தார். சூழல் எப்படி மாறினாலும், அவள் கல்வி தடைப்படக்கூடாது என்பதற்காக. அந்த பணம் கொண்டே சௌபி தனது படிப்பினை முடித்திருந்தாள்.

அப்படிப்பட்ட தந்தைக்காகத் தானே அவள் மனதில் மொட்டவிழ்ந்து மலர துடிக்கும் காதலை கூட யாருக்கும் தெரியாமல் பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறாள். மற்றவர்களுக்கு என்ன, அவள் மனதார நேசிக்கும் ருத்ரேஸ்வரனுக்கு கூட இன்னமும் தெரியாதே! இல்லை இல்லை அப்படியும் முழுமையாக சொல்வதற்கில்லை, இவள் தெரிவித்ததில்லை. மற்றபடி இவளுடைய நேசம் அவனுக்கு தெரியாது என நம்பும் அளவு இவள் விவரம் தெரியாத மழலை இல்லை.

அவனுக்கு இவளது நேசம் தெரியும், ஆனால் அது அவனின் அறிவே அன்றி இவளது இளக்கம் இல்லை. இதுவரை பார்வையில் கூட சிறு குறிப்பினை இவள் கொடுத்ததில்லை. அப்படி தான் அவள் நம்பிக் கொண்டிருக்கிறாள். அவனிடம் தான் இளகியதே இல்லை என்பதாக! ஆனால், இவளது சிறுசிறு தடுமாற்றங்கள் போதாதா அந்த பேரறிவாளன் இவள் நேசத்தை உணர?

ஆனால், உண்மையில் தன் நேசத்தை மறைக்க அவள் படும் பாடு, அவளது தவிப்பு, வேதனை என அவளுடைய காதல் சார்ந்த உணர்வுகள் எதையும் விவரிக்க முயற்சித்தால் மொழிகள் கூட பொய்த்து போய்விடுமே! மொழிகளே பொய்த்து போய்விடும் உணர்வுகள் அவளுடையது.

இப்படி தந்தை மனம் நோகும் என்று பார்த்து பார்த்து அவளிருக்க, அண்ணன் இப்படி விட்டேறியாக நடந்து கொள்வது அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. இப்பொழுது வீட்டை வழி நடத்துகிறவன், பணம் சம்பாதிப்பவன் என்பதற்காக தந்தைக்குரிய மரியாதையை தரவில்லையோ என்பது அவள் எண்ணம். குறைந்தபட்சம் அப்பாவிடம் போராடி சம்மதம் வாங்கி இருந்திருக்கலாம், அதை விடுத்து நேரடியாக திருமணம் செய்து வையுங்கள் என்று அடமாய் நின்றவனை என்னவென்று சொல்வது?

இந்த அப்பா கூட, முன்பெல்லாம் அந்த பேச்சு பேசுவாரே இப்பொழுது அவன் சொன்னதும் எதுவும் மறுப்பு சொல்லாமல் ஒப்புக் கொண்டாரே என்றும் சுணக்கமாய் இருந்தது.

ஆயிரம் சுணக்கங்கள் இவளுக்கு இருந்த பொழுதிலும், ‘அப்பா எந்த முக சுணக்கத்தையும், கோபத்தையும் திருமணத்தில் காட்டி விடக்கூடாது. அண்ணன் தான் விரும்பிய பெண்ணை மணந்து நல்லபடியாய் குடும்பம் நடத்த வேண்டும்’ என்று மனதார பிரார்த்தித்தாள். காதலின் வலியை அவளும் அறிவாளே! அதை தன் அண்ணனுக்கும் தர அவளுக்கு விருப்பமில்லை.

‘முன்பாவது அண்ணனுக்கென்று ஒரு திருமணம் முடிந்ததும், வீட்டில் கொஞ்சம் பேசிப்பார்க்கலாம். அம்மா அடிப்பார், அப்பா பேசவே மாட்டார். ஆனாலும் ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம். ருத்ரனை மறக்கவே முடியவில்லை என அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடலாம்’ என்ற சிந்தனைகள் அவ்வப்பொழுது எட்டிப்பார்த்தது. ஆனால், இப்பொழுதோ அண்ணன் நிலையை எண்ணியே மிகவும் வருந்திக் கொண்டிருக்கும் பெற்றவர்களிடம், நானும் ஒருவரை நேசிக்கிறேன் என்று எப்படி சொல்வது என தயங்கினாள். மகன் தான் சொல்பேச்சு கேட்கவில்லை, மகளும் கேட்கவில்லை என்றால் பெற்றவர்கள் மனதொடிந்து போய்விடுவார்களே என மிகவும் வருந்தினாள். மொத்தத்தில் ருத்ரனை நிரந்தரமாய் பிரிவது என்கிற முடிவில் ஸ்திரமாய் நின்றாள். ருத்ரனின் எண்ணங்களுக்கு அப்படியே எதிர்பதமாய்.

மனம் அதன் போக்கில் ஏதேதோ பயணித்துக் கொண்டிருந்தாலும் விழிகள் வாயிலையே வட்டமிட்டது. அவளவன் முகத்தினை எதிர்பார்த்து. கடைசியாக வேலையை விட்டு வந்த அன்று பார்த்தது. அலுவலகத்திற்கு அண்ணனின் திருமண பத்திரிகை தர சென்றபொழுது கூட, அவன் இல்லாத நேரமாய், மாலை வழக்கமாய் அவன் விளையாட செல்லும் நேரமாய் பார்த்து… அலுவலகம் சென்று அனைவருக்கும் அழைப்பிதழை கொடுத்துவிட்டு வந்திருந்தாள். அவன் அறையிலும் அவன் பார்வையில் விழும்படி ஒரு அழைப்பிதழை வைத்துவிட்டு தான் வந்திருந்தாள். நிச்சயம் பார்த்திருப்பான். எப்படியும் இன்றைய வரவேற்பிற்கோ அல்லது நாளை திருமணத்திற்கோ வந்துவிடுவான் என்னும் நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அவனை நிரந்தரமாய் பிரியப்போகிறோம் என்பதால் அவனை ஒருமுறையேனும் பார்க்க வெகுவாக ஏங்கினாள்.

வினோத்திற்கு திருமணம் என்று முடிவானதுமே, சௌபிக்கு ஈரோட்டில் கிடைத்திருந்த வேலையில் இணைய சொல்லி சாந்தாமணி கூறியிருந்தார். அதற்கான காரணத்தை அன்னை தந்தையிடம் விளக்கியபொழுதே எதேர்ச்சையாக கேட்டு விட்டுருந்தபடியால் இவளும் மறுப்பு எதுவும் சொல்லவில்லை, அதோடு இவளுக்கும் கோவையில் இருப்பது மூச்சு முட்டுவது போல இருந்தது. புது மண தம்பதியர்கள் இருக்கும் இடத்தில், திருமண வயதுப்பெண்ணை வைத்திருந்தால் அது சரியாகி வராது என்று தோன்றியது அந்த அன்னைக்கு.

சௌபி அண்ணனின் திருமணம் இருந்ததால் அடுத்த வாரத்தில் வேலையில் சேரவிருக்கிறாள். ஆகவே, ருத்ரனை இந்த திருமணத்திற்கு வெகுவாக எதிர்பார்த்தாள். ஈரோட்டில் வேலையில் சேர்ந்த பிறகு அவனை எங்கே காண்பது? ஆனால், சௌபியின் எதிர்பார்ப்பு நடக்கவேயில்லை. ருத்ரன் வரவேற்புக்கும் வரவில்லை. திருமணத்திற்கும் தலையை காட்டவில்லை.

ஒருவழியாக எந்தவித தடங்கல்களும் இன்றி, சிலரின் முகசுணக்கங்களோடு, பல உறவினர்களின் ஜாடை பேச்சுகளோடு வினோத், ரோகிணி திருமணம் இனிதே நடந்தது. திருமணம் முடிந்த சில தினங்களிலேயே, மனதே இல்லாமல் சௌபி ஈரோட்டிற்கு சென்று விட்டாள்.

இது ருத்ரன் துளியும் எண்ணிப்பார்க்காத விஷயம். எப்படியும் தன்னை பிரிந்து இருக்க முடியாமல் மீண்டும் வேலையில் வந்து இணைந்து விடுவாள் என்று கணக்கிட்டே இரண்டு மாதங்கள் அவகாசம் தந்து இரண்டு மாதங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் இணையலாம் என வேலை நியமன கடிதத்தில் கூறியிருந்தான்.

ஆனால், சௌபி ஊரை விட்டு சென்றது அவன் துளியும் அனுமானிக்காதது. ‘உங்க அண்ணனுக்கு வந்த தைரியம் உனக்கு வரலையா? என்னை விட்டு உன்னால இருக்க முடியாதுன்னு நினைச்சேன். நீ இருந்துப்பியா?’ என மானசீகமாக அவளிடம் கேட்டு தவித்தான். இது அவனுக்கு, அவனது நேசத்துக்கு பெரிய அடியாகவே தோன்றியது.

உண்மையில் சௌபியால் அவனில்லாமல் இருக்கவே முடியவில்லை. கோவையில் இருந்தால் நிச்சயம் அவனிடம் சென்று விடுவோம் என எண்ணி பயந்தே மனமே இல்லாமல் ஊரை விட்டு சென்றிருந்தாள். அங்கும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவள் தவித்த தவிப்பு, அவள் அழுத அழுகை… எல்லாம் இரவின் இருளில் கரைந்தது. மொத்தத்தில் அந்த பாவை ஊமை பேசும் மொழியாகி போனாள்.

ருத்ரனின் நிலையும் அதுவே! சௌபி இல்லாமல் அவன் அவனாகவே இல்லை. அவள் அருகில் இருந்தபொழுது நினைத்ததை நினைத்தபடி முடித்தவன், அவள் இல்லாததும் போட்டு வைத்த திட்டத்தையே செயல்படுத்த முடியாமல் திணறினான்.

வேலைகள் மந்தமானது. அவளின் புறக்கணிப்பால், அவர்களது திருமண ஏற்பாட்டில் அடுத்த கட்டத்தை யோசிக்கவும், செயல்படுத்தவும் முடியாமல் செயல்கள், எண்ணவோட்டம் என அனைத்தும் மந்த கதியில் இருந்தது.

மொத்தத்தில் அவன் அவனாக இல்லை. அது அவனை சுற்றியிருந்தவர்களுக்கும் கொஞ்சம் புரிய தொடங்கியது.

3 Likes