மொழி பொய்த்த உணர்வுகள் – 20

மொழி பொய்த்த உணர்வுகள் – 20
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 20

புதுமணப்பெண்களால் அவ்வளவு எளிதில் புகுந்த வீட்டில் பொருத்திக் கொள்ள இயலாது. ஆனால், ராகிணி பெருமுயற்சி செய்தாள் தான் நல்ல மருமகள் என்பதை உணர்த்தும் பொருட்டு. ஆனால், பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

ராகிணி வேண்டாத மருமகள் என்பதால் அவளது செய்கைகள் எதுவுமே பொன்னுசாமிக்கும், சாந்தாமணிக்கும் பிடிப்பதில்லை. சௌபி அத்தனை பக்குவமாய் சமைக்கும் பொழுதே சாந்தாமணி குறையாய் கூறுபவர். இப்பொழுது ராகிணியை விட்டு விடுவாரா? ராகிணி என்ன வேலை செய்தாலும் அவருக்கு திருப்தி இருப்பதில்லை. வாய் வார்த்தையாக எதுவும் பிடிக்கவில்லை என சொல்லிக் கொள்ளாவிடிலும், முகத்தினில் அதிருப்தியை காட்டி விடுவார்.

அன்றையதினம் ராகிணி உறக்கம் கலைந்து எழுந்து வர வழக்கத்தைவிட தாமதமாகிவிட்டது. சாந்தாமணி காலை உணவை தாயார் செய்துவிட்டு, மதிய உணவு சமைப்பதற்கான வேலைகளில் இறங்கி இருந்தார். ராகிணி மிகுந்த சங்கோஜத்துடன், “அலாரம் அடிச்சது கவனிக்கலை அத்தை. அதான்…” என தயங்கி தயங்கி விளக்கம் தர, அதை அவர் கண்டுகொண்டதாகவே இல்லை. சௌபியை இவர்களுக்காக தானே பிரிந்திருக்க வேண்டியிருக்கிறது என்கிற சுணக்கம், மகன் திருமணத்திற்காக ஒப்புதல் கூட கேட்கவில்லையே என்கிற மனவருத்தம் என எல்லாம் சேர்ந்து இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் அவளிடம் நேரடியாக பேசுவதையே தவிர்த்து விடுவார்.

அவர் எதையாவது பேசினால் கூட பரவாயில்லை என்று ராகிணிக்கு தோன்றும். ஏன் இப்படி ஒதுக்கி வைக்கிறார்கள் என்கிற சுணக்கமும் வரும். அத்தையும், மாமாவும் நேரத்திலேயே காஃபி அருந்தியிருப்பார்கள் என்பதால் தனக்கும், கணவன் வினோத்திற்கும் மட்டும் கலந்து கொண்டாள்.

வினோத் வங்கி செல்வதற்காக கிளம்பி வரும் வரையிலும் ஏதேனும் வேலையை செய்து கொண்டிருந்தவள், அவன் வந்ததும் உணவு பரிமாறி அனுப்பி வைத்தாள். அவன் கிளம்பியதும் வீட்டில் ஒருவித நிசப்தம் குடிகொண்டது போல இருந்தது. யாரும் யாருடனும் இன்னமும் இலகுவாக பேசிக் கொள்வதில்லை. அதிலும் சௌபியை பிரிந்து இருக்க வேண்டிய நிலை வந்தது பெற்றவர்களுக்கு மிகுந்த வருத்தம். அது சாந்தாமணியின் மூலம் அவ்வப்பொழுது சிறு சிறு குத்தல் பேச்சுக்களாய் வெளிப்பட்டது.

ராகிணி இதை எதிர்பார்த்தே வந்திருந்தாள் போலும். இயன்றவரை நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடித்தாள். தானாய் விரும்பி ஏற்படுத்திக் கொண்ட திருமணம் அதை சரிப்படுத்தும் முயற்சியில் இருந்தாள். முன்பே ஒப்புதல் பெற்று நடந்திருந்தால் வேறு. இப்பொழுது மாமனார், மாமியாரை சாமாதனமும் செய்ய வேண்டும் என்கிற கடமையும் அவளுக்கு இருந்தது.

வினோத்திற்கு அதில் எல்லாம் எந்த கவலையும் இருப்பதாக தெரியவில்லை. அவனுக்கு நன்கு தெரியும் அவன் கொஞ்சம் இறங்கி வந்தாலும் பெற்றவர்கள் உண்டு இல்லை என ஆக்கி விடுவார்கள் என்று. அதனால் அவன் விரைப்பகவே திரிய புகுந்த வீட்டில் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும் கடமை ராகிணிக்கு வந்துவிட்டது.

** ருத்ரனின் போக்கே சரியில்லாது கண்டு அவனின் பெற்றவர்கள் அதீத கவலை கொண்டனர். “ஏதாவது சண்டையா இருக்குமாங்க?” என காவேரி தனது கணவனை நச்சரிக்க,

“என்னை கேட்டா எனக்கென்ன தெரியும்? அவன் உன்னை தானே கூட்டிட்டு போயி பொண்ணை காட்டினான். ஏன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா?” என சரவணவேல் சுள்ளென கேட்டார்.

‘இவகிரு கிட்ட போய் கேட்டேன் பாரு. மனுஷனுக்கு அவரை கூட்டிட்டு போயி காட்டலைன்னு பொறாமை. அதை நம்ம மேல காட்ட வேண்டிது’ என மனதோடு முணுமுணுத்தவர், “நான் கார் வாங்க வந்தபோது பாத்தேங்க” என்று கணவனிடம் கூற,

“ஏன்டி எப்பவோ ஒரு நாள் போயிட்டு வந்த உனக்கு காட்டியிருக்கான். அங்கேயே சுத்தறேன் எனக்கு காட்ட மாட்டானா?” என மீண்டும் தனது உரிமை பறிபோனது நினைத்து அவர் கத்த,

“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றார் காவேரியும் சற்று சப்தமாக. ஏற்கனவே மகனுக்கு என்ன பிரச்சனை என தெரியாமல் அவர் கவலையோடு இருக்க, இவர் வேற படுத்தறாரே என்னும் எரிச்சல் வார்த்தைகளாக வந்தது.

“எனக்கென்ன பிரச்சனை? உன் மகனுக்கு தான் பிரச்சனை? ஏதாவது பண்ணலாம்ன்னா என்ன பண்ணறதுன்னும் தெரியல” என மகனுக்காக வருந்தியவரை காவேரி ஆச்சர்யமாய் பார்த்தார்.

காவேரியின் பார்வையை உணர்ந்து, “என்ன?” என சரவணவேலும் கேட்க, “அவன் தொழிலை தொடங்குறதுல கூட தான் பிரச்சனை” என நிதானமாக கூற,

“அவனோட சேர்ந்து உனக்கும் புத்தி வேலை செய்யறதை விட்டுடுச்சா… இது தொழில் தொடங்குற வயசா? ஆனா, அவனுக்கு இது கல்யாண வயசு. அதுனால அதுக்கு எதுவும் முயற்சி செய்யலாம். சும்மா தொழில் தொழில்ன்னு அம்மாவும் மகனும் நச்சரிக்காதீங்க” என்றார் சரவணவேல். மேகங்கள் சூழ்வதும், விலகுவதும் வானில் நிரந்தரமில்லை… வானின் நிறம் என்றும் நீலமாக தான் இருக்கும். சரவணவேலும் அவ்வாறே! அவரைப் பொறுத்த வரையிலும் அவர் எண்ணங்கள் மட்டுமே சரி.

இது காவேரிக்கும் தெரியுமாதலால், “சரி என்ன பண்ணறதுன்னு சொல்லுங்க” என அடுத்த நடவடிக்கைகளில் அக்கறை கொண்டார். கணவர் மகனின் காதல் விஷயத்திலாவது அவன் விருப்பத்தை மதிக்கிறாரே என்பதில் அந்த தாயுள்ளம் மகிழ்ந்தது. தொழில் தொடர்பாக மகனே முட்டி மோதி முன்னுக்கு வந்து விடுவான் என அவருக்கு நம்பிக்கை இருந்தது.

“அண்ணன் கிட்ட ஏற்கனவே பேசி இருக்கேன். அவரு இன்னைக்கு சாயந்தரம் வரேன்னு சொல்லியிருக்காரு. அவருக்கிட்ட பேசிட்டு முடிவு பண்ணுவோம்” என சரவணவேல் கூற, ‘அதானே பாத்தேன். இவருக்கு எங்க இருந்து யோசனை எல்லாம் வர போகுது. யாராவது சொல்லி குடுத்தா செய்வாராச்சே!’ என மனதிற்குள் சலித்துக் கொண்டவர், கணவனோடு சேர்ந்து அவரது அண்ணன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார்.

சரவணவேலின் அண்ணன் குருநாதன் அந்த குடும்பத்தின் மூத்தவர். நல்ல புத்திசாலி, அனுபவசாலியும். அவரிடம் மகனது திருமண விஷயத்தையும், அவனது விருப்பத்தையும் சரவணவேல் கூறியிருக்க, அவர் ருத்ரனின் திருமண விஷயத்தை பார்த்துக் கொண்டார்.

சரவணவேலையும், காவேரியையும் அதிக நேரம் காக்க வைக்காமல் குருநாதன் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிட்டார். பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின், “அந்த பொண்ணு பத்தி விசாரிச்சேன் பா. நல்ல குணம். ஒரு குறையுமில்லை. அவங்க அண்ணனும் பேங்க் வேலைல இருக்கான். குடும்பம் நல்ல நிலைமையில தான் இருக்குது. குடும்பமும் அதிக அலட்டல் இல்லாத மனுஷங்க. தெரிஞ்ச ஒருத்தரை பிடிச்சு ஜாதகத்தையும் நம்ம குடும்ப ஜோசியர் கிட்ட காட்டி பேசிட்டேன். பொருத்தம் நல்லா இருக்கு சொல்லிட்டாங்க…” என திருமண வேலைகளை முதல்கட்டமாக தொடங்க வேண்டிய அனைத்தையும் முடித்து தகவல் அறிக்கை தந்து கொண்டிருந்தார்.

குருநாதன் சொல்வதை ஆர்வத்தோடு கணவன், மனைவி இருவரும் கேட்டுக் கொண்டே வந்தனர். பேசிக்கொண்டே சென்றவர், “என்ன அவங்களுக்கு இந்த கலப்பு திருமணம் எல்லாம் சரியா வராது போல… அதான் யோசனையா இருக்கு…” என கூறவும்,

“இப்ப என்னங்கண்ணா பண்ணறது? ருத்ரனுக்கு அந்த பொண்ணுன்னா ரொம்ப இஷ்டம்” என சரவணவேல் பதற, காவேரிக்கும் அதே கவலை தான்.

குருநாதனோ மெலிதாக சிரித்தவர், “இரு இரு சொல்லி முடிச்சுடறேன். ஆனா, சமீபத்துல அந்த வீட்டு பையன் காதல் கல்யாணம் தான் செய்வேன்னு அடம் பிடிச்சு செஞ்சு இருக்கான்” எனவும்,

மீண்டும் அவசரப்பட்டு இடையிட்ட சரவணவேல், “இப்போதானுங்கண்ணா நிம்மதியா இருக்கு” என ஆசுவாசப்பட,

“முழுசா பேச விடு சரவணா” என்று குரலை உயர்த்தியவர், “மகன் கல்யாணத்துலயே இஷ்டம் இல்லாம, அளவா கூப்பிட்டு தான் முடிச்சு இருக்காங்க. ஏற்கனவே அந்த விஷயத்துல இருந்தே மீளாதவங்க கிட்ட நாம இப்போ போயி எப்படி பேசறதுன்னு யோசிக்கறேன். அதோட நம்ம புள்ளைக்கு தான் அந்த பொண்ணு மேல விருப்பம் போல, அந்த பொண்ணு ஈரோட்டுக்கு வேலைக்கு போயிருக்கு. எனக்கு தெரிஞ்சு அவங்களுக்குள்ள எந்த பேச்சு வார்த்தையும் இல்லை” என யோசனையாக சொல்ல, பெற்றவர்களின் முகம் வாடியது.

“சரி அவங்க வீட்ல பேசி பாப்போம். ஒரு ரெண்டு, மூணு மாசம் போகட்டும். அவங்க அண்ணன் கல்யாணம் ஒரு மாசம் முன்னாடி தான் முடிஞ்சது” என குருநாதன் சொல்ல, இந்த ஒரு மாதத்திலேயே மகன் மிகவும் சோர்ந்து போனான். இன்னும் இரண்டு, மூன்று மாதமா? என பெற்றவர்கள் சோர்ந்து போனார்கள்.

“என்ன ஆச்சு?” என குருநாதன் விசாரிக்க, “இல்லைண்ணா பையன் முகமே சரியில்லை…” என சரவணவேல் கூற, “ஒரு தடவை பேசி பாக்கலாங்களா?” என காவேரியும் கேட்க,

அவர்கள் முகத்தில் என்ன கண்டாரோ, “சரி முயற்சி பண்ணலாம். ஆனா, குறைஞ்சது ஒரு மாசமாவது வேணும். இடையில யாரையும் வெச்சு தான் பேசணும். ரெண்டு குடும்பத்துக்கும் தெரிஞ்சவங்களா அந்த ஊர்ல யாரும் இருந்தா பாக்கறேன்” என சொல்லி ஆறுதல் படுத்தினார்.

** அன்று குருநாதன் சொல்லியதற்கிணங்க சௌபி குடும்பத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஒரு மாதம் போதவில்லை. மேலும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டது. இன்னமும் பேச்சுவார்த்தையை தொடங்க முடியவில்லை. வினோத்தின் திருமணம் முடிந்து, அதாவது சௌபி ஈரோடு சென்று மூன்று மாதங்கள் ஆகியிருந்தது.

சௌபி வேலை நேரத்தில் எதையும் யோசிக்க முடியாமல் நிறைய வேலை செய்ய வேண்டியதாய் இருந்தது. வசந்த் இருக்கும் இடத்தில் வேலைக்கு சேர்ந்ததால், அவன் டாக்குமெண்ட் ரெடி செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் இவளிடம் தள்ளிவிட்டு விடுவான்.

“பரணி நீ வந்ததும் தான் கொஞ்சம் வேலை சுலபமா இருக்கு” என நெட்டி முறித்த வசந்த்தை உறுத்து விழித்து பார்த்தவள்,

“ஏன் சொல்ல மாட்டீங்க சீனியர், இதோ இந்த போல்டர்ல நாலு பைல் இருக்கு பாருங்க அது மட்டும் தான் என்னோட வேலை. மீதியிருக்க பதிமூணு பைலும் உங்க வேலை. உக்காந்து மாங்கு மாங்குன்னு நான் டாக்குமெண்ட் டைப் பண்ணறேன்” என சௌபி புலம்பினாள்.

“ஏன் இன்னும் வேலை வேணுமா? வேணும்னா கேட்டு வங்கிக்கோ ஜுனியர். அதுக்காக இப்படி அழக்கூடாது” என்று சொன்னவனை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.

“இதெல்லாம் சிங்கத்தோட வாய்க்குள்ள தலையை நுழைக்கும்போது யோசிச்சிருக்கணும் ஜுனியர்” என கேலி போல வசந்த் சொல்லிவிட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

வசந்த்திற்கும் சௌபிக்கு இத்தனை வேலைகளை தர வேண்டும் என்றெல்லாம் இல்லை. இங்கு வந்ததிலிருந்து வீட்டு நினைவில் வாடி வதங்கி இருப்பவளை அவள் சிந்தனையிலிருந்து வெளிக்கொண்டு வரவே இவ்வாறு செய்கிறான். வீட்டு நினைவு என்பது அவன் கணிப்பு. அது ருத்ரனின் நினைவு என்பதை அவள் மட்டும் தானே அறிவாள்.

வசந்த் டாக்குமெண்ட் தயாரிப்பு போன்று அலுவலகத்திலேயே அமர்ந்து செய்து முடிக்கும் வேலைகளை தான் சௌபிக்கு தருவான். மற்றபடி கார்மெண்ட்ஸில் அவள் பார்த்து குறிப்பெடுக்க வேண்டிய வேலைகளை அவனே செய்து முடித்து விடுவான்.

அவளை கார்மெண்ட்ஸ்ஸில் வேலை பார்க்கும் ஜொள்ளர்களிடமிருந்து காப்பாற்ற இவ்வாறு செய்து வருகிறான். இது சௌபிக்கும் தெரியாமல் இல்லை. இருந்தாலும் சீனியரை வம்பிழுக்காமல் அவள் விடுவதில்லை.

இப்படி தன்னை மறந்து வேலை பார்க்கும் நிலை தான் அவளுக்கும் வேண்டும். இல்லையேல், அவளால் வேலை பார்க்கும் இடத்திலும் இயல்பாய் இருக்க இயலாது.

இப்படி ஓயாமல் வேலை செய்யும்போதே அவ்வப்பொழுது கைப்பேசியை ஆராய்ந்து கொண்டே இருப்பாள். கடந்துவிட்ட மூன்று மாதங்களில் ருத்ரன் ஒருமுறை கூட அவளை அழைக்கவில்லை. ‘அவ்வளவுதானா?!?!’ அவனிடம் மௌனமாய் கேள்விகளை கேட்பாள். பிறகு இவளுக்கு இவளே, “பேசாம இருக்க மாட்ட!” என்னும் அதட்டலை சொல்லி திசை திருப்புவாள்.

இன்றுவரை அவனை தேடும் மனது, அவள் பேச்சுக்கு மதிப்பு தந்து ‘சும்மா’ மட்டும் இருந்ததேயில்லை. அவனை தேடிக்கொண்டே தான் இருக்கிறது அவள் மனம்.

3 Likes