மொழி பொய்த்த உணர்வுகள் – 21

மொழி பொய்த்த உணர்வுகள் – 21
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 21

ருத்ரன் இந்த மூன்று மாதங்களை எப்படி கடந்தான் என அவனே அறியான். ஆரம்பத்தில் சௌபி இல்லாமல் அதீத தடுமாற்றமாய் இருக்க, இப்பொழுதெல்லாம் வேலைகளில் மூழ்கி ஓரளவு தன்னை நிலையாய் வைத்திருந்தான் என சொல்லலாம்.

அவன் சுயமாக செய்து வரும் ஆர்க்கிடெக்ட் தொழிலில் முழு நேரமும் ஈடுபட, அதன் வருமானமும் ஓரளவு அதிகரித்தது. இப்பொழுது அவனது குழப்பம் எல்லாம் சௌபி வீட்டில், திருமணத்திற்கு சம்மதம் பெற மேற்கொண்டு என்ன செய்வது என்பதே! ஏனெனில் அவனும் அறிவான், அவர்கள் இன்னமும் வினோத்தையும், ராகிணியையும் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

இதெல்லாம் ஒருபுறம் என்றால் அனைத்திற்கும் நடுநாயகமாக சௌபி மிகவும் இம்சித்தாள். ‘ஊரை விட்டு சென்றாள் சரி, இன்னமும் என் ஞாபகம் வரவில்லையா? இன்னமும் என்னை தேடி வரவில்லை, என்னை தொடர்பு கொள்ளவும் முயற்சிக்கவில்லை. எப்படி இவ்வாறு இருக்கிறாள்?’ என அவன் மனம் மிகவும் குழம்பியது. அங்கு அவள் புலம்புவது போல, இங்கு இவன் அவளை கடிந்து கொண்டான்.

‘என் ஞாபகம் வரலையா? இல்லை உனக்கு அவ்வளவு செல்ப் கண்ட்ரோலா?’ என எண்ணியவனுக்கு எதிலோ தோற்று போன உணர்வு. ஏற்கனவே ஓரளவு வசதி வாய்ப்புகள் இருந்த பொழுதும் அவனாக முட்டி மோதி தான் சுயதொழிலில் முன்னுக்கு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது காதல் விஷயத்திலும் இத்தனை தடைகளா என்று சற்று எரிச்சலாய் வந்தது. அதிலும் சௌபி செய்ததை அவனால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. அருகில் இருந்தபொழுது பூனைக்குட்டி போல தன்னையே சுற்றி வந்தவளுக்காக மனம் வெகுவாக ஏங்கியது. தன்னை தேடி வந்து விட மாட்டாளா என மனம் பாடு பட்டது.

‘வாயாடி நீ இல்லாம என்னால இருக்கவே முடியலை. ஆனா, என்னை மொத்தமா படுத்திட்டு… சம்மந்தமே இல்லாம எல்லாத்துக்கும் தலை ஆட்டிட்டு… இப்போ முக்கியமான விஷயத்தை என்னை சொல்ல கூட விடாம போயிட்டல்ல… ஏன் அதுக்கும் தலை ஆட்டிடுவோம்ன்னு பயமா? சரி உன்னால மட்டும் எப்படிடி இப்படி இருக்க முடியுது? என்னை விட்டுட்டு… நீ திரும்பி வந்துடேன். என் மொத்த தெம்பும் திரும்பி வந்துடும். எல்லா பிரச்சனையும் உடனே சரி பண்ணிடுவேன்’ என அவனின் மனம் ஓயாமல் அரற்றிக் கொண்டேயிருந்தது.

என்ன முயன்றும் அவள் நினைவுகள் அகல்வதில்லை. எனவே அதனோடே பயணிக்க பழகிக் கொண்டான். இவ்வாறு ருத்ரனும், சௌபியும் தனித்தனியே தவித்த தவிப்புக்கெல்லாம் முற்றுப்புள்ளியாய் அமைந்தது இரு வீட்டினரின் பேச்சு வார்த்தை.

ஆம்! அந்த குடும்பத்தின் மூத்தவர் குருநாதன் அனைத்தையும் வெற்றிகரமாக சாதித்து விட்டார். முதலில் இரு குடும்பத்திற்கும் பொதுவில் ஒரு ஆளைப்பிடித்து சாதாரண பேச்சுவார்த்தையாக தொடங்கியவர், பின் மெல்ல மெல்ல தங்கள் குடும்பத்தின் விருப்பத்தை விளக்கினார்.

பொன்னுசாமியாலும், சாந்தாமணியாலும் முகத்தில் அடித்தாற் போல மறுக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் பெண் கேட்பவர்கள் தங்களை விட பெரிய இடம் என்பதோடு, இடையில் பேச்சுவார்த்தைக்கு வந்தவரும் ஊரில் மரியாதையானவர், இவர்களுக்கும் மிகவும் வேண்டப்பட்ட பெரிய மனிதர். ஆகவே, நேரடியாக மறுக்க முடியாமல், தயங்கி ஒதுங்கியவர்களிடம், குருநாதன் தான் தொடர்ந்து சென்று பேசி, புரிய வைத்து அவர்களின் மன சுணக்கங்களை களைந்து இறுதியில் அவர்களிடம் ஒப்புதலே வாங்கி விட்டார்.

மொத்தத்தில் குருநாதன் ருத்ரனின் குருவைப் போன்று செயல்பட்டார். அவரது விடாமுயற்சிக்கு நல்ல வெற்றியும் கிடைத்தது.

இதற்கிடையில் காரணமே இல்லாமல் உருண்டதென்னவோ ராகிணியின் தலை தான். “இப்போ உனக்கு சந்தோஷமா? உன்னை கட்டிக்கிட்டு வந்ததால, மகளுக்கும் வேற இனத்துல இருந்து சம்மந்தம் வருது. எங்க நிலைமையை பாத்தியா? எல்லாம் உன்னால” என சாந்தாமணி தனக்கு இருந்த கோபத்தில் நேரடியாகவே ராகிணியை சாடி விட, ‘இதென்னடா புது வம்பு! நமக்கு இருக்கிற பிரச்சனை போதாதா? புதுசா எவனோ கிளப்பி விடறானே!’ என மனதிற்குள் மட்டும் புலம்பி அப்பாவி போல முகத்தை வைத்து நின்றாள் ராகிணி.

இப்படி பார்ப்பவளை மேற்கொண்டு திட்டவா முடியும்? சன்னமாக முணுமுணுத்துவிட்டு சாந்தாமணி சென்று விடுவார்.

ஆனால், சாந்தாமணியே எதிர்பாராதது குருநாதன் தொடர்ந்து வந்ததும், இந்த சம்மந்தத்தில் தீவிரமாய் இருந்ததும், இறுதியில் கணவனையே சம்மதிக்க வைத்ததும். சௌபிக்கு திருமணம். அதுவும் வேற்று இன பையனிடம், அதுவும் கணவனின் முழு ஒப்புதலோடு. இது சாந்தாமணிக்கு பேரதிர்ச்சி தான். அவரால் நம்பவே முடியவில்லை.

எப்படியோ அனைத்தும் நல்லபடியாக நடந்தால் சரி என தாயுள்ளம் பிரார்த்தித்தது. எங்கே மகனின் கலப்பு திருமணத்தால் மகளது திருமணத்தில் குழப்பம் விழைந்து விடுமோ என்று பயந்தவருக்கு நல்ல சம்பந்தமாய் அமையவும் தான் மனமே ஆசுவாசப் பட்டது. கலப்பு திருமணம் என்பது சுணக்கம் தான் என்றாலும் இப்பொழுது பல இடங்களிலும் நடப்பது தானே, என மனதை தேற்றிக் கொண்டார்.

அனைத்து பேச்சு வார்த்தைகளும் நல்லபடியாக முடிய, ஒரு நாள் குருநாதன் பொன்னுசாமியை அழைத்தவர், “உங்க பக்கம் ஜாதகம் பாத்துட்டீங்களா?” என விசாரித்தார். பொன்னுசாமியும் திருப்தியான பதிலை கூறவும்,

“ரொம்ப சந்தோஷம்ங்க. வர வெள்ளிக்கிழமை காலையில நாங்க வரோம். பொண்ணை பாக்கிறதுக்கு. முதல்ல பொண்ணை நாங்க பாத்துக்கறோம். நீங்களும் அன்னைக்கு சாயந்தரமே வந்து எங்க வீட்டை பாத்துடுங்க. அப்பறம் ஒரு நல்ல நாளுல பையனை கூட்டிட்டு சொந்த பந்தத்தோட வரோம்” என குருநாதன் கேட்க,

“சரிங்க அப்படியே செஞ்சுடலாம்” என்று ஒப்புதல் தந்தார் பொன்னுசாமி. குருநாதன் இந்த விஷயங்களை சரவணவேல், காவேரியிடமும் பகிர்ந்து கொள்ள, “ஏனுங்கண்ணா ஈஸ்வரை இப்போவே அழைச்சிட்டு போயிடலாமே!” என சரவணவேல் கேட்க,

“இல்லை சரவணா. பொண்ணு சம்மதத்தை நம்ம போயி கேக்க வேண்டாமா? முறைப்படியே செய்வோம் பா” என்றார். “நம்ம மகனை பிடிக்காம போகுமா ண்ணா” என மனதேயில்லாமல் சரவணவேல் கேட்க,

“அந்த பொண்ணு நம்ம பையன் வேண்டாம்ன்னு தானே ஈரோட்டுக்கு போயிருக்கு. அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? அவங்க பெத்தவங்க சொல்லறதோ, நம்ம பையன் கிட்ட கேக்கறதோ சரி வராது. நாமளே போயி பாப்போம். காவேரி, நீ பொண்ணு கிட்ட தனியா பேசும்போது நீ கேளு, நம்ம புள்ளைய பிடிச்சிருக்கான்னு… அப்பறம் மத்ததை நான் பாத்துக்கறேன்” என பொறுப்பானவராய் குருநாதன் பேச, கணவனுக்கும், மனைவிக்கும் அதுவே சரி என்று பட்டது.

சாந்தாமணியோ, ஒரு நாள் முன்னதாகவே, “பரணி, உன்னை பாக்கணும் போல இருக்கு. ஒரு எட்டு வந்துட்டு போயேன்” என காரணமே கூறாமல் சௌபியை வரவழைத்திருக்க, அவள் இங்கு வந்ததும் தான் அவளுக்கு தெரிந்தது பெண் பார்க்கும் வைபவம் என்று.

அவ்வளவு தான் முகமே விழுந்து விட்டது சௌபிக்கு. அண்ணனின் திருமண பிரச்சனையால் இப்போதைக்கு தனக்கு திருமண பேச்சுவார்த்தை இருக்காது என அவள் எண்ணியிருக்க, இது அவளுக்கு பேரிடி தான்.

விடிந்தால் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் பார்க்க வந்துவிடுவார்கள். சௌபிக்கு எவ்வளவு உருண்டு பிரண்டு படுத்தும் உறக்கம் தழுவவேயில்லை. தன்னால் இதற்கு ஒப்புக்கொள்ளவே இயலாது என்னும் ஞானோதயம் நள்ளிரவிற்கு மேல் வர, படுக்கையில் இருந்து விருட்டென எழுந்தமர்ந்தாள்.

எழுந்த வேகத்தில் ருத்ரனுக்கு அழைப்பு விடுக்க கைப்பேசியை தேடி எடுக்க, அதில் ஒளிர்ந்த நேரத்தை பார்த்து சோர்ந்து போனாள். இந்த நேரத்துல எப்படி கூப்பிட…? என யோசித்தபடியே இருந்தவள், சரி எப்படியும் அவர்கிட்ட சொல்ல தானே போறோம். காலையில நேரத்துல எழுந்து சொலிக்கலாம். இந்த நேரத்துல போன் பண்ணுனா அவரு என்ன நினைப்பாரு? என எண்ணியவள், ருத்ரனிடம் கூறப்போகிறோம் என்னும் நிம்மதியில் உறங்கிப் போனாள்.

தாமதமாக உறங்கியதாலோ என்னவோ, அவளால் காலையில் நேரத்தில் எழ முடியவில்லை. காலையில் அவள் இன்னமும் எழவில்லையே என்பதற்காக சாந்தாமணி அவளை எழுப்ப செல்ல, “அத்தை, எப்படியும் அவளுக்கு எதுவும் இப்ப வேலை இல்லை. நல்லா தூங்கி எழட்டும். அப்ப தான் பிரஷ்ஷா இருப்பா” என ராகிணி கூற, “அவ அவங்க வரதுக்குள்ள கிளம்பி தயாராகனும்” என்னும் முணுமுணுப்போடு அடுத்த வேலையை பார்க்க சாந்தாமணி சென்று விட்டார்.

சாந்தாமணி வழக்கமான வேலைகளை செய்ய, ராகிணியோ வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வாசலில் வண்ணக்கோலம் போட்டு, வரவேற்பறையில் தேவையற்ற பொருட்களை ஒதுக்கி வைத்து, தேவைக்கேற்ப நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்து என சிறுசிறு வேலைகளையும் பார்த்து பார்த்து செய்ய சிறிது நேரத்தில் இல்லம் அழகானது, ஆனால் அதற்கு எதிர்மறையாக அவள் அழுக்கானாள்.

காவேரி வந்து பார்த்த பொழுது அவள் சௌபியை எழுப்ப சென்றிருந்தாள். ராகிணி எழுப்பவும் அறக்க பறக்க எழுந்த சௌபி, ‘ஹையோ இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே! இப்போ எப்படி போன் பேச’ என விழிக்க,

ராகிணியோ, “நல்லா தூங்குனா தான் முகம் நல்லா இருக்கும். அதான் எழுப்பலை. வேகமா போயி குளிச்சுட்டு வா. நான் அலங்காரம் பண்ணி விடறேன்” என்றவள் அவள் குளியலறை செல்லும் வரையிலும் நகரவில்லை.

‘இனி இவங்க முன்ன எப்படி போன் பண்ண?’ என குழம்பியபடியே சௌபி குளிக்க செல்ல, அறையினுள் வந்த சாந்தாவைப் பார்த்து, “நானே எழுப்பிட்டேன் அத்தை. குளிக்க போயிருக்கா” என ராகிணி கூறினாள்.

“அவ கிளம்பறது இருக்கட்டும். நீ எப்போ கிளம்பற?” என சாந்தாமணி கேட்க, அப்பொழுதுதான் ஓவர் டைம் வேலை பார்த்து தான் அழுக்காகி விட்டதையே ராகிணி கவனித்தாள். தூசியும், கலர் கோலப்பொடியுமாய் இருந்தாள்.

அசடு வழிய ராகிணி சிரிக்க, “போயி குளிச்சுட்டு வா” என சாந்தாமணி கூற, மாமியாரின் முதல் கரிசனத்தில் மனம் நெகிழ்ந்து போனாள் அந்த மருமகள்.

மாமியாரின் இணக்கத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, சௌபி குளித்து வெளியே வரும் முன்னர் மின்னல் வேகத்தில் இவள் குளித்து கிளம்பி வந்தாள். இவள் வரவும், சௌபி நீராடி விட்டு வரவும் சரியாய் இருந்தது.

‘அண்ணி அதுக்குள்ள கிளம்பி வந்துட்டாங்க. போன் பண்ண முடியாதோ!’ என சௌபி சோர்ந்து போனாள். ராகிணியோ அவளின் மனநிலையை கவனிக்கும் நிலையில் இல்லை. சௌபியை பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.

சௌபிக்கு இனி இவர்கள் எல்லாரும் சுற்றி இருப்பார்களே எப்படி ருத்ரனுக்கு அழைப்பது என கவலையானது. அவளது கவலையை பார்த்த ராகிணியோ, “என்ன ஆச்சு பரணி?” என கேட்க, ஒன்றும் இல்லை என்பதாய் தலையசைத்து இயன்றவரை தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள முயன்றாள்.

ராகிணியின் கைவண்ணத்தில் சௌபி பேரழகாக ஜொலிக்க, ராகிணியின் மீது சாந்தாமணியின் பார்வையும் மாறியது. சௌபிக்கு நிறைய நகைகளால் அலங்கரித்து விட்டு வெறுமனே இருந்த மருமகளை பார்த்தவர், “நீயும் ஒரு ஆரத்தை போட்டுட்டு நில்லு. அவங்க வர நேரமாச்சு” என கூற, ராகிணி உச்சி குளிர்ந்து போனாள். அவளது காத்திருப்பிற்கான பலன் அவளை தேடி வர தொடங்கியது.

ஆனால், இவர்களின் மனநிலைக்கு எதிர்பதமாய் பயமும், பதற்றமுமாய் சௌபி இருக்க, சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விட்டனர்.

சௌபி சத்தியமாக ருத்ரனின் பெற்றோர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை. மனதின் பாரம் எல்லாம் விலகி, மனம் காற்றாகிட, அது மெல்ல பயணித்தது வான வீதிகளில். இத்தனை நேரமும் வாடியிருந்த சௌபியின் மனமும், முகமும் நொடியில் மலர்ந்து பொலிவுற்றது.

3 Likes

semma semma akka rendu peraiyum pudichu kalyanam panni veinga akka enna chinna pullainga madhiri vilayattu? ippo enna pannuvanga…? :stuck_out_tongue_winking_eye::stuck_out_tongue_winking_eye:
rutharan parents, periappa ellarum super character akka. :star_struck::heart_eyes:
kalappu thirumanam therinju paiyanumkum ponnukum nallathunu ok sonna rendu per parents semma i love this episode very much. :purple_heart:

1 Like

Thanks a lottt dear :bouquet::bouquet:
Hmmm adutha epi - ne expect panarathuku opposite a irukkum :slight_smile:

1 Like