மொழி பொய்த்த உணர்வுகள் – 22

மொழி பொய்த்த உணர்வுகள் – 22
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 22

“மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டாங்க” என்னும் குரல் அறையினுள் வரும் வரையிலும் ராகிணி சௌபியை விட்டு நகரவேயில்லை. சௌபிக்கு கைப்பேசியை தொட கூட நேரம் கிடைக்கவில்லை. ‘அதை எதுக்கு இப்ப நோண்டற?’ என்னும் அம்மாவின் அதட்டலில்… ரோகிணி, “கால் வந்தா நானே தரேன் பரணி” என வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள்.

அண்ணியை நினைத்தால் சௌபிக்கு அத்தனை ஆச்சர்யமாய் இருந்தது. இந்த மூன்று மாதத்தில் அன்னையிடம் அவள் எவ்வளவு பாடுபட்டிருக்க கூடும் என சௌபியால் புரிந்து கொள்ள முடிந்தது. சாந்தாமணியைப் பற்றி அவளுக்கு தெரியாதா என்ன? அதிலும் ராகிணி காதல் மணம் புரிந்து வந்தவள் வேறு! அத்தனை பாடுபட்டும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ஒவ்வொன்றையும் அதீத அக்கறையோடு பார்த்து பார்த்து செய்கிறாளே! அவளது செய்கைகள் சௌபிக்கு வியப்பாய் இருந்தது. இது எல்லாம் அண்ணன் மீது கொண்ட காதலால் தானே சாத்தியம் என பூரிப்பாய் எண்ணிக் கொண்டே வந்தவளின் மனதினில் ருத்ரனின் நினைவுகள். காதல் என்ற சொல் அவனை மட்டும் தானே நினைவுபடுத்தும்.

‘ச்ச… காலையில நேரமா எழுந்து போன் பேசி இருக்கணும். இல்லாட்டி ராத்திரியே எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லைன்னு… மெஸேஜ் ஆவது அனுப்பி இருக்கணும். இப்போ இப்படி ஒரு வம்புல மாட்டிடோமே!’ என காலங்கடந்த ஞானோதயத்தால் பலனின்றி தவித்தாள். ‘இப்ப என்ன செய்ய?’ என மனம் தவியாய் தவித்தது.

அனைத்து தவிப்புகளும் சிறிது நேரம் தான். ருத்ரனின் வீட்டுப்பக்கம் அவனுடைய பெற்றவர்கள், பெரியப்பா, பெரியம்மா, பெரியப்பாவின் மருமகள் சாருமதி என ஐவர் வந்திருக்க… அனைவரும் உள்ளே வந்து அமர்ந்து பேச தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பெண்ணிற்கு பூவை வைத்துவிடும் சாக்கில் பெண்கள் கூட்டம் சௌபியின் அறைக்கு வந்துவிட்டிருந்தது.

அறையினுள் நுழைந்த காவேரியை அதிர்ச்சி விலகாமல் சௌபி பார்த்துக் கொண்டிருக்க, “எப்படி இருக்கமா?” என அவளது தாடையை பாசாமாய் வருடி காவேரி கேட்டார்.

மெல்லிய புன்னகையுடன் தலையை அசைத்தவளுக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. அதிர்ச்சி மெல்லமாய் கரைய அவள் மூளை கிரகித்த விஷயத்தை அவளால் நம்பவே முடியவில்லை. பூதாகரமாய் நின்ற பிரச்சனைகள் எல்லாம் அதுவாகவே விலகி விட்டதன் மர்மம் புரியாமல் திருதிருத்தாள்.

“என்னமா அப்படி பாக்கிற? பயமா இருக்கா என்ன?” என காவேரி கேட்க, ருத்ரனின் அண்ணி சாருமதியோ, “பயப்படாத… நாங்க ஆடி காட்டு, பாடி காட்டுன்னு எல்லாம் சொல்லவே மாட்டோம்” என கேலியாக கூறி சிரிக்க, மற்றவர்களும் மெலிதாக சிரித்தனர். பின்னர் பூவை வைத்துவிட்டு ருத்ரனின் பெரியம்மாவும், அண்ணியும் முன்னே சென்றுவிட, காவேரி மட்டும் அங்கேயே நின்றார்.

அவர்கள் இருவரும் சென்றதும், அவளிடம், “உனக்கு ருத்ரனை பிடிக்கும் தானே டா… அதாவது… என்ன கேக்க வரேன்னா… அவனை… அவனை கல்யாணம் செய்ய உனக்கு விருப்பம் தானே?” என தயங்கி தயங்கி காவேரி கேட்க,

அந்தி வான சிவப்பை மிஞ்சும் வண்ணம் பேரழகாய் சிவந்தது சௌபியின் முகம். காதலை மொழி பெயர்க்க தெரியாதவளிடம் சம்மதம் கேட்டு காவேரி நிற்க, அவளது வெட்கம் பேசும் மறுமொழியே அவருக்கு பூரண திருப்தியாய் இருந்தது.

“அப்ப இனியாவது என்னை முறை சொல்லி கூப்பிடுவ தானே?” என்ற காவேரியின் குரலில் ஏக்கம் வெளிப்படையாக தெரிந்தது. அன்று ஆன்ட்டி என்று ஆசையாய் அழைத்த பெண் ருத்ரனைக் கண்டதும் பின் வாங்கி விட்டாளே என்னும் ஏக்கத்தில் இன்று அவர் கேட்டிருக்க, வெட்கம் சுமந்து அமர்ந்திருந்தவளால் பேசவே இயலவில்லை. ஆனாலும் காவேரியின் காத்திருப்பையும், மன சுணக்கத்தையும் உணர்ந்து… மெல்ல இதழ் திறந்து, “கண்டிப்பா அத்தை” என சொல்லி அவரை குளிர்வித்தாள்.

பிறகு அனைவருக்கும் காஃபி தருவதற்காக சௌபியை ராகிணி சமயலறைக்கு அழைத்து சென்றுவிட, காவேரி பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள வரவேற்பறையில் சென்று அமர்ந்து கொண்டார்.

** அலுவலகத்தில் இருந்த ருத்ரனுக்கு எதுவோ உறுத்திக் கொண்டே இருந்தது. ‘என்னவோ சரியில்லை!’ என வீட்டு நினைவில் அவன் மனம் பயணிக்க, என்னவென்று தான் அவனுக்கு விளங்கவில்லை.

சமீப காலாமாய் அடிக்கடி வீட்டிற்கு வருகை தரும் பெரியப்பாவே அவனுள் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தார். முன்பானால், வீட்டின் சூழலை நொடியில் கிரகித்திருப்பான். ஆனால், இப்பொழுதோ சௌபியின் நினைவில் மனம் அலைக்களிப்பதால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இப்பொழுதும் அதனைப் பற்றி சிந்தை சென்றிருக்காது. இன்று காலையில் பெரியம்மாவையும், அண்ணியையும் சற்று அலங்கார தோரணையோடு வீட்டில் பார்த்திராவிட்டால்… நிச்சயம் அவன் பெரிதாக எதையும் அலட்டிக் கொண்டிருக்கவே மாட்டான்.

இன்றோ, அவர்களை வீட்டில் பார்த்ததோடு, வீட்டிலும் ஏதோ ஏற்பாடுகள் நடப்பதையும் கிரகித்ததும்… என்ன நடக்கிறது என புரியாமல், இப்பொழுது மனம் வீட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தது. ஒரு நேரத்திற்கு மேல், அந்த அலைப்புறுதலை தாங்க மாட்டாதவனாய் தன் அன்னைக்கு அழைப்பு விடுத்தான்.

‘இவன் இந்த நேரத்துல கூப்பிட மாட்டானே!’ என்னும் யோசனையோடு சற்று பேச்சு சப்தம் கேட்காதவாறு ஒதுங்கி வந்து நின்று காவேரி கைப்பேசியின் அழைப்பை எடுக்க,

அழைப்பு ஏற்கப்பட்டதும், “அம்மா எங்க இருக்கீங்க?” என விசாரிக்கும் தொணியில் மகன் கேட்டான். “அது… வந்து பா…” என முதலில் தடுமாறியவர், பின் உடனே சுதாரித்து, “ஏன் ஈஸ்வர் என்ன ஆச்சு? ஏன் திடீர்ன்னு கேட்கிற?” என அவனிடம் பதில் கேள்வி கேட்டார்.

அந்தநேரம் பார்த்து அனைவருக்கும் காஃபி கொடுத்து முடித்திருந்த சௌபி காவேரியின் அருகில் வந்து, “அத்தை… காஃபி” என நீட்டினாள்.

எதிர்பாராமல் திடீரென கேட்ட சௌபியின் குரலில் திருதிருத்த காவேரி சமாளிப்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து காஃபியை வாங்கி கொள்ள, எதிர்முனையில் சௌபியின் குரலை கிரகித்த ருத்ரனுக்கோ ஒரு நிமிடம் என்னவென்றே விளங்கவில்லை.

‘அவள் தானா?’ சில குழப்பங்களோடு மனம் சதிராட, தனது சிந்தையில் மூழ்க தொடங்கியவன், அன்னையிடம் எதுவுமே சொல்லாமல் தன்னையுமறியாமல் அழைப்பை துண்டித்திருந்தான். ‘என்ன வெச்சுட்டான்? எதுக்கு கூப்பிட்டான்னு தெரியலையே!’ என குழம்பிய காவேரி, கணவர் அழைக்கவே பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்கு மீண்டும் சென்று விட்டார்.

சௌபி காலையிலிருந்து எதிர்பார்த்த தனிமை இப்பொழுது கிடைத்திருந்தது. ஆனால், இன்னமும் கைப்பேசி ராகிணியிடம் தான் இருந்தது. அதோடு, அவளிடம் வந்தாலும் பேசும் மனநிலையில் அவள் இல்லை. ஒரே நாளில், எதிர்பாராதவிதமாக ருத்ரனிடம் மொத்த உரிமையும் வந்துவிட இப்பொழுது அவளாக முதலில் பேச வெட்கம் தடுத்தது.

அலுவலகத்தில் ருத்ரன் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தனை வயப்பட்டிருந்தான். ‘அது அவ குரல் தான். சந்தேகமே இல்லை. அம்மா ஈரோடு போக வாய்ப்பில்லை. அப்ப அவ தான் கோயம்புத்தூர் வந்திருக்கணும். ‘காஃபி’ன்னு ஏதோ சொன்னாளே அப்போ, ரெண்டு பேரும் வெளியில எதேர்ச்சையா சந்திச்சுக்கலை. அப்படின்னா அம்மா அவங்க வீட்டுல இருக்காங்களா?

‘அத்தை’ன்னு தானே கூப்பிட்டா? அப்ப என்ன நடக்குது? எதுக்காக அம்மா அவங்க வீட்டுக்கு போயிருக்காங்க? அம்மா மட்டுமா, இல்லை எல்லாருமே அங்க தானா? அங்க எதுக்கு? கல்யாண விஷயம் பேசவா? ஆனா, என்கிட்ட எதையும் சொல்லவே இல்லையே!’ மனம் ஏதேதோ எண்ணங்களோடு பயணிக்க, சந்தோசம் கொள்ளவேண்டிய விஷயம் தான். ஆனால், அவனுக்கு கோபமும், ஆத்திரமும் தான் வந்தது.

ருத்ரன் எப்பொழுதுமே சுயத்தை விரும்புபவன். தன்னிச்சையாக சாதிக்க வேண்டும் என்று துடிப்பவன். அலுவலகத்தில் தந்தையின் கீழ் தான் செயல்பட முடிந்தது. அவனுக்கென்று ஒரு பொறுப்பை பெறவே வெகுவாக போராடி வேண்டியிருந்தது.

சுயதொழில் செய்யலாம் என்றாலும், இன்னமும் சிறிய அளவில் தான் போய்க்கொண்டிருக்கிறது. முட்டி மோதி போராடி வருகிறான். அவன் தந்தையிடம் தொழில் முதலீட்டுக்கு பணம் பெறலாம் தான். முகம் திரும்பினாலும், தராமல் எல்லாம் இருக்க மாட்டார். ஆனால், அப்படி கேட்க அவனது தன்மானம் இடம் தரவில்லை. அவர் குறுக்கீடு இல்லாமலே சாதிக்க வேண்டும் என்னும் வைராக்கியத்தோடு இருக்கிறான்.

தொழிலில் தான் இப்படி சுயத்தை நிலைநாட்ட போராட வேண்டி இருக்கிறதென்றால், காதலில்? ஒரு பெண்ணின் மனதை வெல்ல கூடவா தன்னால் முடியாது. காதலிலும் தந்தையின் தலையீட்டால் தான், வெற்றிவாகை சூட முடியுமா? அவனுக்கு இந்த எண்ணமே உவப்பனதாக இல்லை.

அவனே அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து, பெற்றவர்களை பெண் பார்க்கும் படலத்திற்கு அனுப்பி வைத்திருந்தால் இப்படி யோசித்திருக்கவே மாட்டான். ஏனென்றால் அனைத்தையும் சாதித்தது தான் என்னும் நிறைவு இருந்திருக்கும்.

இப்பொழுது அவனுக்கே தெரியாமல் திருமண ஏற்பாடு என்றதும் உச்சகட்ட கோபத்தில் இருந்தான். ஆனால், உண்மையில் அவனது முயற்சியால் தான், இத்தனை இலகுவாக திருமண பேச்சுவார்த்தை முடிந்திருந்தது என்பதை அவன் உணரவில்லை பாவம்.

நடக்கும் செயல்களை யோசிக்க யோசிக்க கோபம் தான் வந்தது. ஆத்திரம் அதிகரிக்க, எதையும் செய்யும் மனநிலையில் இல்லாததால்… அலுவலகத்தில் இருந்து கிளம்பி, பெற்றவர்களை எதிர்கொள்ள வீட்டிற்கு சென்று நடுநாயகமாக அமர்ந்து கொண்டான்.

ருத்ரன் வீட்டில் அமர்ந்திருக்க, வீட்டு பணியாளர்கள் அனைவரும் மும்மரமாக ஏதோ வேலையை செய்து கொண்டிருந்தனர். ‘இப்போ இது எதுக்காம்? என்கிட்ட சொல்லாம இன்னும் என்னவெல்லாம் நடக்குதுன்னு பார்ப்போம்’ என்னும் எண்ணத்தோடு வரவேற்பறையிலேயே சட்டமாக அமர்ந்து கொண்டான்.

அலுவலகம் கிளம்பி சென்ற தோற்றம், உடை கூட மாற்ற தோன்றவில்லை. ‘என்ன செய்கிறீர்கள் எனக்கு தெரியாமல்? எப்படி செய்யலாம் என்னை கேட்காமல்?’ என ருத்ரனின் மனம் கோபத்தில் கனன்று கொண்டிருந்ததில் அங்கிருந்து நகரும் எண்ணமே அவனுக்கு இல்லை.

சௌபி வீட்டை பார்த்துவிட்டு அங்கே பேச வேண்டியதை எல்லாம் பேசி முடித்த திருப்தியோடு, ருத்ரனின் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தனர். இன்னும் சற்று நேரத்தில் சௌபியின் வீட்டினர் மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்கு வந்து விடுவார்களே, அதற்குள் ஏற்கனவே செய்ய சொல்லியிருந்த ஏற்பாடுகளை எல்லாம் மேற்பார்வை பார்க்க வேண்டுமே! அந்த எண்ணங்களோடு வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்றது என்னவோ ருத்ரன் தான். அந்த நேரத்தில் ருத்ரனை வீட்டில் எதிர்பார்த்தவர்கள் சற்று திகைத்து நின்றனர்.

3 Likes

akka, ruthran sir ku sollunga pls, ithellam avarala thannu, enaku avar ennam puriyuthu. sowbi pavam illaya, manasu muluka asaiyoda erupa ipo… next seekiram podunga akka pls :sob::sob::sob::sob:

1 Like

ruthranai sowbi samathanam senjuduva dear :slight_smile:

1 Like