மொழி பொய்த்த உணர்வுகள் – 23

மொழி பொய்த்த உணர்வுகள் – 23
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 23

மனம் நிறைந்த மகிழ்வோடும், முகம் நிறைந்த பூரிப்போடும் பெண்பார்க்க சென்ற அனைவரும் வீட்டிற்கு திரும்பி வர, அவர்களை வரவேற்றபடி நடுநாயகமாக வீற்றிருந்தான் ருத்ரன். அவனை அந்த நேரத்தில் வீட்டில் எதிர்பார்க்காததால் அனைவருமே சிறிது அதிர்ந்தனர். அதுவும் உடைகூட மாற்றாமல் அவன் அமர்ந்திருந்த தோரணையே எதுவோ சரியில்லாததை காவேரிக்கு உணர்த்த அவருக்குள் பயப்பந்து உருண்டது.

“இவன் எதுக்கு இப்போ வந்திருக்கான் காவேரி?” என சரவணவேல் மனைவியின் காதை கடிக்க, “எனக்கு மட்டும் என்ன தெரியுங்க” என்று காவேரி கூறினாலும், மகனின் மீதே அவர் பார்வை இருந்தது. மகனும் சளைக்காமல் தாயை தான் பார்த்திருந்தான்.

“என்ன ஈஸ்வர் நீங்க காலையில வேலைக்கு கிளம்பி போனீங்க” என ருத்ரனின் அண்ணி சாருமதி தான் முதலில் கேட்டாள். அவனுக்கு தெரியாமல் செல்கிறோம் என்பது அவளுக்கு முன்னமே தெரிவிக்கப்பட்டிருந்ததால், இப்பொழுது அனைவரின் அதிர்ச்சியை உணர்ந்து, அவள் பேசி சமாளிக்க நினைத்தாள்.

முகத்தின் அழுத்தம் மாறாமல், “சும்மா தான் அண்ணி…” என ஒருவித இறுக்கத்தோடு சாருமதிக்கு பதில் கூறினாலும், இன்னமும் பார்வை அன்னையை தான் துளைத்தது. இதுவரையிலும் வந்தவர்களை வரவேற்கவில்லை, ஏன் வரவேற்பாய் ஒரு புன்னகையை கூட உதிர்க்கவில்லை… இப்படி அவன் இருந்த தோரணையே அவனுக்கு எதுவோ கோபம் என அனைவருக்கும் புரிய,

ருத்ரனின் பெரியம்மா காவேரியிடம், “பொண்ணு வீட்ல இருந்து வர நேரம் ஆச்சு. நாங்க வீட்ல என்ன பண்ணனும், ஏது பண்ணனும்ன்னு கவனிக்கிறோம். நீ அவனுக்கு என்ன கோபம்ன்னு பாரு. அப்பவே இவருகிட்ட சொன்னேன், பையனுக்கு தெரியாம எதுவும் பண்ண வேண்டாம்ன்னு. கேட்டா தான ஆகும். இப்போ என்ன தெரிஞ்சுக்கிட்டானோ, என்ன கோபமோ?” என அங்கலாய்ப்பாய் கூற,

காவேரி, “சரிங்க அக்கா நான் பேசிக்கிறேன்” என கூறியவர் மகனை நோக்கி சென்றார். அவன் இன்னமும் பார்வையை மாற்றவில்லை. “என்ன ஈஸ்வர்?” அவன் பார்வையை உணர்ந்து அவனிடம் அமர்ந்து ஆதரவாக கேட்க, மற்றவர்கள் அனைவரும் ஏற்பாடுகளை கவனிக்க சென்று விட்டனர்.

இன்னமும் பதில் இல்லை ருத்ரனிடம்… வெறும் கூர்ப்பார்வை மட்டுமே. “என்ன பா? சொன்னா தானே தெரியும்?” என காவேரி மீண்டும் கேட்க, அவன் அசைந்தானில்லை. அவன் சௌபியின் குரலை வைத்தே ஏதாவது கணித்திருப்பான் அல்லது சந்தேகம் கொண்டிருப்பான் என காவேரிக்கு புரிந்தது. அதோடு, இன்னும் சிறிது நேரத்தில் சௌபியின் வீட்டினர் வந்து விடுவார்களே, அனைத்தையும் கருத்தில் கொண்டு அந்த அன்னை அப்ரூவராக மாறிவிட முடிவெடுத்தார்.

“சௌபரணி வீட்டுக்கு தான்பா போனோம். கல்யாணம் பேசிட்டு வர. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீடு பாக்க அவங்க வந்துடுவாங்க. நீ வா. வந்து குளிச்சு தயாராகு. சோந்து தெரியற” என மகனது பார்வைக்கு விளக்கம் தந்து, மகனை துரிதப்படுத்த,

இப்பொழுது சற்று முறைத்து பார்த்தான். “என்னப்பா? எவ்வளவு வேலை இருக்கு. இப்போ போயி பிடிவாதம் பிடிக்கற. என்ன, ஏதுன்னும் சொல்ல மாட்டீங்கற?” சற்று சலிப்போடே காவேரி கேட்டார்.

அவன் இப்பொழுதும் எதுவும் பேசாதிருக்க, ஏதோ பெரிய கோபம் போல என உணர்ந்தவர், சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு, “உன்கிட்ட சொல்லாம போனது தப்பு தான்ப்பா. இது பெரியப்பாவோட முடிவு. அதோட அவர்தான் இந்த ரெண்டு மாசமா அலைஞ்சு திரிஞ்சு பொண்ணு வீட்ல பேசி அவங்ககிட்ட சம்மதம் வாங்குனாரு. எல்லாம் உங்க அப்பா சொல்லி தான் பெரியப்பா இத்தனையும் செஞ்சாரு. பெரியப்பா தான் பொண்ணோட சம்மதம் கேட்டுட்டு மேற்கொண்டு பேசிக்கலாம்ன்னு சொன்னாருப்பா” என நிலவரத்தை சொல்ல, ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் மேலும் கோபம் கொண்டான்.

இத்தனைநேர மௌனத்தை உடைத்து, “ஓ… சம்மதத்தை கேட்டீங்களா?” என பூகம்பத்தை உள்ளடக்கிய குரலில் ருத்ரன் கேட்க,

அது புரியாமல், “என்னப்பா இப்படி கேட்டுட்ட. நான் கூட உன் பெரியப்பா, ‘அந்த பொண்ணு ஈஸ்வரை விட்டு விலகி இருக்கு. அதோட சம்மதம் தெரிஞ்சுக்காம, மேற்கொண்டு பேச வேணாம்ன்னு’ சொன்னப்ப, ஒரு பக்கம் அப்படி இருக்காதுன்னு நினைச்சாலும், மனசுக்குள்ள ஒரு ஓரத்துல பயந்துட்டே தான் இருந்தேன். ஆனா, சௌபரணி என்னை பாத்ததும் எத்தனை சந்தோசப்பட்டா தெரியுமா? முகமே பூரிச்சு போச்சு. உன்னை கட்டிக்க சம்மதமான்னு கேட்டா, அப்படி வெட்கப்படறா… நீ பாத்திருக்கணுமே இன்னைக்கு. புடவையில அத்தனை அழகா இருந்தா. போட்டோ கூட எடுத்துட்டு வந்தேன்” என ருத்ரனின் மனநிலை அறியாமல் எரியும் நெருப்பில் என்னை வார்ப்பதைப் போன்று காவேரி பேசினார்.

‘தன் நேசத்தை சொல்ல கூட விடாதவள், இப்பொழுது வெட்கப்பட்டாளா? ஏன் அதற்கு முன்பு என்னிடமும் சொல்லி இருக்க வேண்டியது தானே! பெண் பார்க்க வரவிருப்பதையேனும் அவள் தெரிவித்திருக்க வேண்டும் தானே?’ மனம் அவளது செய்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்தது.

காவேரியோ இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய், “இந்தா போட்டோ பாக்கறியா. உனக்கு அனுப்பவா?” என அவரின் கைப்பேசியை ருத்ரனிடம் நீட்ட, வலது கையை மறுப்பாக காட்டி, “பரவாயில்லை மா. இருக்கட்டும்” என்று கூறிவிட, இப்பொழுது அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்றே காவேரியால் அனுமானிக்க முடியவில்லை. என்ன பாவம் அவன் குரலில் அவரால் யோசிக்க கூட இயலவில்லை.

காவேரி சமாதானம் (அவராக அதை சமாதானம் என்று நினைத்து விட்டார்) பேசி முடிப்பதற்கே நேரம் எடுத்துக்கொள்ள, அதற்குள் சௌபி வீட்டில் இருந்து வந்துவிட்டனர். வீட்டை பார்க்கப்போகிறோம் என்று நினைத்து வந்தவர்களுக்கு ருத்ரனையும் சேர்ந்து பார்த்தது அத்தனை உவகையாய் இருந்தது. கண் நிறைந்த மாப்பிள்ளை என்னும் பொழுது அவர்களின் உவகைக்கு ஏது குறை?

வினோத் ருத்ரனிடம் பேச்சு கொடுக்க, உள்ளுக்குள் சினத்தை வைத்துக் கொண்டு அதை அவர்களிடம் காட்டவா முடியும்? ஆயிரம் இருந்தாலும் அவன் நேசத்தோடு, கோபத்தையும் உரிமை கொண்டாட ஒரே ஒருத்திக்கு தானே ஏகபோக உரிமை. தனது கோபங்களை அவளுக்காக சேமித்து வைத்துவிட்டு, இவர்களிடம் முகம் மாறாமல் இயன்றவரை இன்முகத்தோடு பேசினான்.

ஏற்கனவே மாப்பிள்ளையின் தோற்றத்தில் மயங்கியவர்கள், அவனது இணக்கமான பேச்சில் இன்னும் குளிர்ந்தார்கள். சௌபியின் பெற்றவர்களுக்கு தங்களை விட செல்வ செழிப்பானவர்களாக இருக்கிறார்களே என்றிருந்த தயக்கம், மாப்பிள்ளை வீட்டினர் இன்முகமாக பழகியதை பார்த்ததும் முற்றிலும் விலகிவிட்டது.

மனநிறைவோடு மற்ற பேச்சு வார்த்தைகளையும் பேசி முடித்தவர்கள், ருத்ரனோடு பெண் பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வருவதாக பேசி முடிவெடுத்தார்கள். ருத்ரன் சௌபியின் வீட்டினரிடம் நல்ல முறையில் பேசியதாலும், காவேரி பேசி விஷயத்தை விளக்கி இருப்பார் என்றதாலும் அவனிடம் யாரும் தனிப்பட்ட ஒப்புதல் என எதுவும் வாங்கவில்லை.

சௌபியின் வீட்டினர்கள் விடைப்பெற்று செல்ல, குருநாதன் ருத்ரனிடம், “ரொம்ப நல்ல பொண்ணுப்பா. எங்க எல்லாருக்கும் பூரண திருப்தி. எல்லாம் சரியான பின்னாடி உன்கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சோம். எங்க மேல வருத்தம் எதுவும் இல்லையே!” என அவன் முன்பு கோபமாக இருந்தானே என்பதால் தன் செயல்களுக்கு விளக்கம் தந்துவிட்டு கேட்க,

ருத்ரன் முகம் மாறாமல், “அதெல்லாம் எதுவும் இல்லைங்க பெரியப்பா. எனக்கு சந்தோசம் தான். ரொம்ப தேங்க்ஸ்” என மெலிதாக புன்னகைத்து வைத்தான். ஆனால், குரலில் துளி கூட புத்துணர்வு இல்லை.

“சரிப்பா நாளன்னைக்கு பொண்ணு பாக்க போலாம் தானே? உனக்கு சௌகரியப்படுமா? அவங்க முன்ன கேட்டா நல்லா இருக்காது, ஒவ்வொருத்தங்க சங்கடப்படுவாங்க. அதான் அவங்க கிளம்புனதும் கேக்கிறேன்” என அதற்கும் அவர்புற நியாயத்தை விளக்கி அவர் கேட்க,

“அச்சோ பெரிப்பா… என்ன நீங்க, இதெல்லாம் என்கிட்ட கேட்டுட்டு. பாத்து நல்லபடியா செய்ங்க” என்று அவருக்கு திருப்தியான பதில் தந்து அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டான்.

வெளியில் இயல்பாக காட்டிக் கொண்டாலும், அவன் பதில் எல்லாம் பட்டும் படாமலும் தான் இருந்தது. அவன் மனம் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது. அது யாருக்கும் புரியவில்லை. காவேரிக்கு மட்டும் அவன் இயல்பாக இல்லையோ என அடிக்கடி தோன்றியது.

அனைவரும் எதிர்பார்த்த ஞாயிற்றுகிழமையும் அழகாய் விடிய, இந்த இரண்டு தினங்களில் கைப்பேசியை பார்த்து பார்த்து ஓய்ந்து போனது என்னவோ சௌபி தான். வெள்ளிக்கிழமை ருத்ரனின் வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்து குடும்பத்தினர் அனைவரும் அந்த வீட்டின் பெருமையையும், வீட்டு மனிதர்களின் பெருமையையும், வரப்போகும் மாப்பிள்ளையின் பெருமையையும் பேசி ஓய, இவள் மிகுந்த ஆவலானாள்.

‘அதுதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சதே… இனி கூப்பிட்டா தான் என்னவாம்?’ மனதோடு அவனிடம் செல்லமாய் கோபித்துக் கொண்டவளால், வெட்க மிகுதியால் அவனுக்கு அழைக்க முடியவில்லை. வெள்ளி மாலையிலிருந்து சனி இரவு வரை பலமுறை அழைக்கலாமா, வேணாமா என யோசித்து, தயக்கம் காரணமாக அழைக்காமலேயே விட்டுவிட்டாள்.

ருத்ரனும் இவளை அழைக்காதிருக்க, ‘இவருக்கு என்னவாம்? கூப்பிட வேண்டிது தானே? அன்னைக்கெல்லாம் கூப்பிட்டு புடவை கட்டிட்டு வான்னு உரிமையா சொல்ல தெரிஞ்சது. இப்போ கூப்பிட தெரியலையாக்கும். இருக்கட்டும், இருக்கட்டும்’ என அவனை விதவிதமாய் திட்டுவதையே வேலையாய் வைத்திருந்தாள்.

‘பேசாம நாளைக்கு புடவை கட்டாம விட்டுடலாம். ஒரு சுடிதார் போட்டுட்டு நிக்கலாம். என்ன செய்யறாருன்னு பாப்போம். அய்யோ அந்த இண்டெர்நேஷனல் உம்மணாமூஞ்சி என்ன செய்யும்? அவ்வளவுதான் நம்ம தீந்தோம்’ என மனதோடு பேசியபடி அடுத்த நாளுக்கான திட்டத்தோடே உறங்கியிருக்க இதோ விடிந்ததும் விட்டது.

இன்றும் ராகிணியே சௌபிக்கு அலங்காரம் செய்ய… வெள்ளிக்கிழமை சோர்ந்து வாடியிருந்த தோற்றம் போய்… இன்று புது மணப்பெண்ணுக்கே உரிய தோரணையோடு… தன்னவனை வெகுநாட்கள் கழித்து சந்திக்கப்போகும் ஆசையோடும், அவனை விழிகளில் நிரப்பும் ஆர்வத்தோடும், அவன் முகம் காணப்போகும் பூரிப்போடும், கொள்ளை வெட்கத்தோடு பேரழகாய் தயாராகி இருந்தாள் சௌபர்ணிகா.

அவளது அழகில் வியந்த ராகிணி, “அன்னைக்கு எங்க அண்ணன் வரலைன்னு தான் இந்த பல்ப் எரியலையா? இன்னைக்கு அவரு வராருன்னு தெரிஞ்சதும் ரொம்ப பிரகாசமா எரியுது போல” என கேலி செய்ய,

“அச்சோ… போங்க அண்ணி” என மேலும் சிவந்தாள் அவள்.

“வீட்ல எல்லாரும் இது அதுவா வந்த சம்மந்தம். உன்னை பிடிச்சு போயி கேக்கறாங்கன்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, உன் வெட்கம் வேற கதை சொல்லுதே பரணி… வாட் எஸ் தி சீக்ரெட்” என ரகசியமாய் ராகிணி கேட்க,

“அண்ணி… போங்க… நீங்க ரொம்பவும் கலாய்க்கறீங்க” என்று சிணுங்கியவள் ராகிணியின் கேள்விக்கு பதில் மட்டும் கூறவில்லை.

“நான் கேள்வி தானே கேட்டேன்? நான் எங்க கலாய்ச்சேன்?” என ராகிணி சரியாக கணித்து கேட்க, சௌபி வாயை திறந்தால் தானே! ஆனானப்பட்ட ருத்ரனிடமே அவளது உணர்வுகளுக்கு மொழிகள் பொய்த்து போய்விடும் என்கையில், ராகிணிக்கு பதில் தந்து விடுவாளா என்ன?

கேளிக்கையும், வெட்கமும், விளையாட்டுமாய் கழிந்த பொழுதுகள்… சிறிது நேரத்தில் எதிர்பதமாய் மாறிவிட போகிறது என அறியாத பெண்ணின் மனம், தன்னவனை ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தது.

3 Likes

semma intersting akka, heart beat la kekuthu pls serthu veinga :pray:

1 Like

gowri … enna patha… negative story eluthara munji mathiriya theriyuthu… :smiley:

oodal … with koodal only dear… :slight_smile:

1 Like

nandri akka :smiley::smile::pray:

1 Like