மொழி பொய்த்த உணர்வுகள் – 25

மொழி பொய்த்த உணர்வுகள் – 25
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 25

சௌபி மதியம் தன்னை மறந்து சிறிது நேரம் உறங்கியிருக்க, அந்த ஓய்வினால் சற்றே தெளிந்திருந்தாள். ‘நம் மேல் தான் அதீத கோபமாய் இருக்கிறான். அதை சரி படுத்த வேண்டும்’ என்றளவு தெளிவு வந்திருந்தது. ஆனால், காரணத்தை கூட கூறாமல் புறக்கணிக்கிறானே, அப்படியென்றால் அவன் மனதில் எவ்வளவு கோபம் இருக்கும் என்ற எண்ணமே அவளுக்குள் என்னவோ போல் இருந்தது. சீக்கிரம் இதை சீர் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

இரவும் எதையும் உண்ண கூட பிடிக்காமல், அதே யோசனையில் படுத்திருந்தவளுக்கு ருத்ரனின் கைப்பேசியிலிருந்து அழைப்பு வரவும், அவன் தானோ என்னும் ஆவலில் மனம் படபடத்தது. கண்ணில் நீர் முட்டிக்கொண்டு நிற்க, கைப்பேசியின் அழைப்பை ஏற்றவளுக்கு மறுபுறம் கேட்ட காவேரியின் குரல் சற்று ஏமாற்றம் தான். அவளிடம் நலம் விசாரித்து விட்டு, தனது கைப்பேசி எண்ணை அவளிடம் தந்து, மறவாமல் அழைக்க வேண்டும் என்று காவேரி அன்பு கட்டளையிட்டார்.

அழகாய் தலையை உருட்டிக் கொண்டிருந்தாள் சௌபி. மனதில், ‘அவரு எங்க இருப்பாரா இருக்கும்? கிட்ட தான் இருப்பாரா?’ என்னும் எண்ணம் தவிப்பாய் இருக்க, ஒருவித எதிர்பார்ப்பு எழாமல் இல்லை.

காவேரி பேசி முடித்ததும் ருத்ரனிடம், “இந்தா சௌபரணி தான் லைன்ல இருக்கா பேசு” என நீட்ட, மறுக்க முடியாது என புரிந்து எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டவன், “ஹலோ…” என்றான். அவன் பேசியதுமே அழுகையே வந்துவிட்டது.

‘அதற்குள் எவ்வளவு தவிக்க விட்டு விட்டான்’ என ஆசுவாசத்தோடு எண்ணிக்கொண்டவள், “ஹலோ…” என்றாள் மென்குரலில். குரல் கரகரத்தது. அது புரிந்தாலும் கண்டு கொள்ளாமல், “தலைவலி எப்படி இருக்கு?” என்றான் பட்டும் படாமலும். என்ன பாவனை அவனது குரலில்? சொல்லப்போனால் எதுவுமே இல்லை தான். அவனுக்கு தேவையானதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தான் செல்ல பிடிவாதத்துடன்.

‘மகன் சௌபரணியிடம் பேசுகிறான்’ என்னும் நிம்மதியில் காவேரி கிளம்பிவிட… சௌபி, “இப்போ பரவாயில்லைங்க. என் மேல என்ன கோபம்?” என நொடியும் தாமதிக்காமல், அவள் கேட்க விரும்பியதை கேட்டிருக்க, அன்னை சென்றதை உறுதிப்படுத்தியவன், அவளுக்கு பதில் எதுவும் கூறாமல் அழைப்பை துண்டித்து விட்டான்.

அழுகை, தவிப்பு எல்லாம் போய் கோபமே வந்துவிட்டது செல்ல பூனைக்கு. ‘அப்படி என்ன கோபம் காரணத்தை கூட சொல்லாம… அறிவு கெட்ட உம்மணாமூஞ்சி?’ மனம் சூடாக அவனை கேள்வி கேட்க, விரல்கள் அதே கேள்வியை அவனது கைப்பேசிக்கு கடத்தி விட்டிருந்தது, கட்டுக்கடங்கா சினத்தினால்.

ருத்ரனுடைய மனமே அவனது செய்கைகளுக்கு ஆதரவாக இல்லை. ‘அவளை பத்தியும், அவ குடும்பத்தை பத்தியும் உனக்கு தெரியும் தான? இவ்வளவு கோபம் அவசியமா?’ என்ற மனதின் கேள்வியை புறக்கணிப்பது அவனுக்கு மிகவும் கடினமாய் இருந்தது.

‘நீ காலையிலிருந்து படுத்துன பாடுல தான் தலைவலியே வந்திருக்கும். இப்பவும் நீ இப்படி பேசுனா கண்டிப்பா அழுவா…’ என அவனது மனம் மீண்டும் கண்டிக்க, அவனுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. அதையும் தாண்டிய கோபம், ஏனோ அவனை சமாதானம் ஆகவே விடவில்லை. எதையும் யோசிக்க மனம் தயாராய் இல்லை. எதையுமே ஆற போடாதவன், முதன் முறை அவள் மேல் உள்ள கோபத்தை காட்டாமல் ஆறப்போட்டான்.

இத்தனை நாட்களும் பிரிந்திருந்ததால் கலக்கத்தில் உறங்காமல் தவித்தவர்கள், இன்று தடைகளை எல்லாம் கடந்தும் அதை நினைத்து மகிழ முடியாமல்… மன சஞ்சலத்தில் உறங்காமல் தவித்தனர்.

மறுநாளே இதற்கொரு முடிவு கட்ட வேண்டும் என்று சௌபி அவனது அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். ‘அப்படி என்ன கோபம் வரும் உம்மணாமூஞ்சி. எனக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் பிடிக்கவேயில்லை. நீ சொல்லி தான் ஆகணும். இப்படி பண்ணறது சரியே இல்லை!’ ஜாஸ்மினுடன் பயணம் செய்த முப்பது நிமிடங்களும் மனதோடு அவனை திட்டிக் கொண்டே தான் பயணித்தாள்.

அலுவலக வளாகத்தை அடைந்ததும், யார் நினைவும் இல்லை. நண்பர்கள் யாரையும் சந்திக்க தோன்றவில்லை. நேராக சென்றுவிட்டாள் அவன் அறைக்கு. கதவு தட்டும் சப்தத்தில் நிச்சயம் சௌபியை அவன் எதிர்பார்க்கவில்லை. சோர்ந்து வாடிய தோற்றத்தை வெளியில் தெரிவிக்காத வண்ணம் கிளம்பி வந்திருந்தாள். வீட்டினருக்காக சிரமப்பட்டு மேற்பூச்சு செய்திருந்தாள் என்று சொன்னால் சரியாக இருக்கும். இருந்தும் எதுவும் சாப்பிடாமல் இருந்த சோர்வும், அழுதழுது தடித்திருந்த கீழ் இமைகளும் அவன் பார்வைக்கு தப்பாமல் பட்டது.

‘ஒதுக்கி வெச்சிருக்க கூடாதோ!’ முதன்முறை தனது தவறு ருத்ரனுக்கு பூதாகரமாகப் பட்டது. ஆனால், பேசி தீர்க்கும் நேரம் இதுவல்லவே. முக்கியமான சில வேலைகள் அவனது சொந்த நிறுவனத்துடையது நிலுவையில் இருந்தது. அதைதான் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, “போ, சௌபி சாயந்தரம் போன் பண்ணறேன். பேசிக்கலாம்” என்றான் வெகு இயல்பாக. என்னவோ அவர்கள் இருவருக்குள்ளும் எந்த சண்டைகளும் இல்லை என்பது போலிருந்த அவனது தோரணை அவளை வெகுவாக சீண்டியது.

இன்னமும் கைப்பேசியில் அவள் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை வேறு அவன் பார்க்கவில்லை. அதுவும் அவளுக்கு தெரியும் நீல நிற குறியீடு இன்னமும் இரண்டு காட்டவில்லையே. அந்த செய்தியாவது அவனை சீண்டும், நம்மிடம் சண்டையிடுவான் என பார்த்தால், இப்பொழுது கிளம்ப சொல்கிறானே என்றிருந்தது அவளுக்கு. கோபம் குறையாமல், “இல்லை எனக்கு பேசணும்” என்றாள் அவனை பார்க்காது சுவரை வெறித்தபடி.

அவளது பிடிவாதம் அழகாய் இருந்தது. “என்ன பேசணும், அந்த சுவர் கிட்டயா?” என்றான் படு நக்கலாக. எதுவும் பேசவில்லை அவள். அவன் முகத்தையும் பார்க்கவில்லை. அழுத்தமும், பிடிவாதமுமாய் நின்றிருந்தாள்.

“வேலை இருக்கு. இப்போ கிளம்பு. சாயந்தரம் கூப்பிடறேன்” என்றான் மீண்டும். “வேலையை முடிச்சுட்டு சொல்லுங்க” என்று சட்டமாய் அவன் அறையிலேயே அமர்ந்து கொண்டாள். முன்பு பெற்றவர்களுக்கு பயந்தவள் அல்லவே இவள். பெற்றவர்களே ஒப்புக்கொண்டு விட்ட உரிமை, அவள் செய்கைகளில், பிடிவாதத்தில் அழகாய் வெளிப்பட்டது.

‘மனுஷனை கொஞ்சம் கோபப்பட விடறாளா!’ செல்லமாக சலித்துக் கொண்டான். நேற்றைய மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. ஒரே நாளில் சோர்ந்து தெரிகிற அவள் தோற்றத்தில். கூட கூட வாய் பேசுகிறாள் தான், ஆனால், அந்த குரலில் ஒரு சுரத்தே இல்லை. ஏதோ வாடி வதங்கியவள் போல தோன்றினாள். உண்மையில் அதுவும் சரிதான். நேற்று மதியம் இருந்து அவள் எதையும் சரியாக சாப்பிடவே இல்லை. அனைவரின் பார்வையின் முன்பும் சாப்பிடுவது போல பாவனை மட்டும் செய்திருந்தாள். அதோடு அழுகை வேறு அருவி போல கொட்டிக் கொண்டே இருந்தது. மதியம் உறங்கிய சில மணி நேரத்திற்காக, இரவு முழுவதும் உறங்கவே இல்லை. உணவு, உறக்கம் இன்றி அழுது வடிந்தவள் எப்படி தெம்பாக பேச இயலும். இப்பொழுதும் கூட வெயிலில் வந்ததால் வெகு நேரம் நிற்க முடியவில்லை. அதனால் தான் பேசாமல் அமர்ந்து கொண்டாள்.

இப்பொழுதும் அவன் முகம் பார்க்கவில்லை. அழுது மட்டும் விடாதே! என்னும் சுய கட்டளையோடு அமர்ந்து கொண்டிருந்தாள். வீராப்பாய் அமர்ந்திருக்கிறோம் என அவள் நினைத்திருக்க, சோர்ந்து போய் தான் அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு புரிந்து விட்டது. ‘என்ன இவள் இப்படி இருக்கிறாள்?’ என்று தான் தோன்றியது. அவனுடைய நேரடி புறக்கணிப்பின் வலி அவனுக்கு புரியவில்லை. ‘இப்ப எதுக்கு இப்படி இருக்கா? இம்ச’ என்றபடி எண்ணவோட்டம் தான். அனைவரின் எண்ணங்களும், செய்கைகளும் ஒன்று போல இருக்காது. அது புரிந்தாலும், அவளது இந்த நிலை அவனுக்கு தாளவில்லை.

“என்ன சாப்பிட்ட?” என்றான் சரியாக கணித்து. சட்டென பொய் சொல்ல வரவில்லை அவளுக்கு. அதோடு இந்த கேள்வியை அவள் எதிர்ப்பார்க்கவும் இல்லையே! “அது… இ… தோசை சாப்பிட்டேன். வந்து மூணு தோசை. தேங்காய் சட்னி” பொய் பேசுவதை சமாளிக்க அவன் கேட்காத உபரி தகவல்களையும் சேர்த்து தர, அவனுக்கு புரிந்து விட்டது அவள் எதுவும் சாப்பிடவில்லையென.

தனது இருக்கையில் இருந்து எழுந்தவன், “எழுந்திரி…” என்க, “இல்லை பேசிட்டே போறேன். நேரம் ஆனாலும் பரவாயில்லை. வெயிட் பண்ணறேன். இங்க உங்களுக்கு டிஸ்டர்பா இருந்தா வெளில வெயிட் பண்ணறேன்” என்றாள் படபடவென. இன்றும் அவளால் இந்த வலியினை தாங்க இயலாது, அவனிடம் பேசி தீர்த்தே ஆக வேண்டும்.

அவளது படபடப்பைப் பார்த்து, “ஸ்ஸ்… பேச தான், கூட வா” என முன்னே நடக்க, ‘எங்கே?’ என விழித்தவள், ருத்ரன் அவனது தனியறையை திறக்கவும், ‘இங்க ஒரு ரூம் இருக்கா என்ன?’ என வியந்தவள், அவன் பின்னே சென்றாள். அறையை சாற்றி தனது வலிய கரங்களை மார்பின் குறுக்கே கட்டியவன், “என்ன பேசணும்?” என கேட்க,

“ஏன் என் மேல கோபமா இருக்கீங்க?” என்றாள். மனதோடு போட்டு வைத்த கட்டுப்பாட்டினை மீறி, விழிகள் கலங்க தொடங்க, நிற்க வேறு முடியவில்லை. சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அங்கேயே இருந்த பிரிட்ஜை திறந்தவன், ஜூஸ் எடுத்து அவளிடம் நீட்டினான். “பரவாயில்லை…” என அவள் மறுக்க,

“சண்டை போட சாப்பிடாம கிளம்பி வந்தா எப்படி?” என்றான் நக்கலாக. “நான் சண்டை போட வந்தனா?” கோபமாக கேட்க நினைத்தாலும் சோர்வாய் தான் வந்து விழுந்தன வார்த்தைகள்.

அவளையே கூர்பார்வை பார்த்தபடி, “கடைசியா எப்ப சாப்பிட்ட?” என்று கேட்டான். அவன் பார்வை அவளுக்குள் பயத்தை தர, பேசாமல் அவன் தந்த ஜூஸை வாங்கி பருகி விட்டாள். “கேள்விக்கு இன்னும் பதில் வரலை” என்றான் அழுத்தமாக.

அவளுக்கே நினைவில்லை. நேற்று காலையிலும் அவசரத்தில், ஆர்வத்தில் எதையோ கொறித்தாள். அதன்பிறகு சுத்தம். நேற்று இரவும், காலையும் வெறும் நீர் மட்டும் தான். இப்பொழுது தான் பயமே வந்தது. ‘எந்த தைரியத்தில் வண்டியை ஓட்டினேன்? வெயிலுக்கு தலை சுற்றி விழுந்திருந்தால்?’ பாவமாக அவனை பார்த்து வைத்தாள்.

“இதை உன்கிட்ட சுத்தமா எதிர்பார்க்கலை. என்ன பிளாக் மெயில் பண்ணறயா? நீ பேசாட்டி நான் சாப்பிட மாட்டேன்னு… அதை எனக்கு காட்ட தான் இங்க வந்தியா?” என ருத்ரன் பற்களை கடித்தபடி வார்த்தைகளை துப்ப, அவனிடம் இப்படி ஒரு எதிர்வினையை சௌபி சத்தியமாக எதிர்பார்க்காததால் விழி விரித்து நின்றாள். கூடவே, அவனது வார்த்தைகளில் சலிப்பும் வந்தது என்ன பேச்சு இது என்பது போல.

3 Likes