மொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL

மொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 26 FINAL

“ப்ச்… சும்மா எதாவது சொல்லாதீங்க. உங்களுக்கு என்ன கோபம்ன்னு தெரிஞ்சுக்க தான் வந்தேன். ஏன் ஏதேதோ பேசறீங்க?” என தலையை பிடித்துக் கொண்டாள். ஒன்றுமே கூறாமல் புறக்கணித்தான். சரி ஏதாவது அவன் திட்டினால் கூட தேவலாம் என கிளம்பி வந்தால், இப்படி பேசுகிறான். தனக்கு சமாதானம் செய்யவே தெரியவில்லையோ என்னும் எண்ணம் சௌபிக்கு.

சமாதானத்திற்கான எந்த முயற்சியும் அவள் இன்னமும் எடுக்கவில்லையே. அவனை பார்க்க வந்திருக்கிறாள் அவ்வளவே! அவளுக்கும் அது விளங்கியது போலும். தீடீரென சமாதானம் செய்ய ஒரு எண்ணம் தோன்ற, அழகாய் பிராகாசித்து மீண்டும் மங்கி போனாள். ‘ப்ச்… அவ்வளவு தைரியம் எல்லாம் நமக்கு இல்லை’ என சோர்வாக எண்ணிக் கொண்டாள்.

மீண்டும் எதிரில் இருப்பவனை பார்த்தாள். சற்று நேரம் முன்பு கொஞ்சம் இளகியது போல தோன்றியவன், மீண்டும் இறுகி இருப்பது போல தோன்றியது. கொஞ்சம் பயமாக வேறு இருந்தது. இன்னமும் எத்தனை நாட்கள் கோபத்தை இழுத்து பிடிப்பான்? அதுவும் எதையும் சொல்லாமல்.

“உக்காருங்களேன் பேசணும்” என்றாள் கொஞ்சம் பாவமாய் பார்த்து, கூடவே அவனது கட்டிலில் அவனுக்கே இடம் தருபவள் போல தள்ளி வேறு அமர்ந்தாள். அவன் நகரவே இல்லை, “என்ன பேசணும்?” என்றான் சற்று இறுக்கத்துடனே.

“என்ன கோபம்ன்னு சொன்னா தான தெரியும்?” எத்தனை முறை இவனிடம் கேட்பது. மீண்டும் அழுகை வந்துவிட்டது. ஆனால், இம்முறை தலையை தாழ்த்தி மறைத்தாள். கூடவே பசியில் தலை வேறு சுற்றுவது போல இருக்க, ‘ஹையோ எங்கேயாச்சும் விழுந்து வெக்க போறேன்’ என எண்ணம் வர, எழுந்து உரிமையாய் பிரிட்ஜை திறந்து, மீண்டும் ஒரு ஜூஸ் பாட்டிலையும் ஒரு ஆப்பிளையும் எடுத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள். அதை அவள் முடித்த வேகத்திலேயே அவள் பசி புரிந்தது.

இத்தனைக்கும் அவன் எதுவும் பேசாமல் அவளை பார்வையால் தொடர்ந்தபடி இருக்க, ‘சொல்ல மாட்டீங்களா?’ என்பது போல மீண்டும் பார்த்தாள். அவள் வார்த்தைகளுக்கு மௌனம் சாதித்தவன், பார்வைக்கு பதில் தந்தான். “எனக்கென்ன கோபம்? அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றான் விட்டேறியாக. பிறகு மனதின் கோபத்தை மறைக்காமல், “எதுக்கு கோபப்படணும்? பெருசா என்ன உரிமை இருக்கு? எங்க வீட்ல பேசுன சம்பந்தம். கல்யாணத்துக்கு பிறகு உரிமை வரலாம். இப்போ என்ன பேசிட்டு. அதுக்கு நீயே கோபம்ன்னு நினைச்சுட்டா நான் என்ன செய்ய?” என்க,

அவளுக்கு ஆத்திரமாய் வந்தது. “உங்க வீட்ல சும்மாவா தேடி வந்து பேசி இருப்பாங்க?” என்றாள் சூடாக. பின்னே, ஏதோ பெரியவர்கள் பேசி வைத்த திருமணம் போல பேசுகிறான். இவன் சொல்லாமல் இவன் வீட்டில் யாருக்கு தெரிந்திருக்க போகிறது.

“அதை அவங்களை தான் கேக்கணும். தொழில் நடத்துவேன்னு நம்பிக்கை இல்லாதவங்க, காதலிச்ச பொண்ணுகிட்ட சம்மதம் வாங்கவும் கையாலாகாதவன்னு நினைச்சாங்களோ என்னவோ?” என்றான். அவன் மனதின் ஆதங்கத்தை வார்த்தையில் கேட்டவள் ஸ்தம்பித்து நின்றாள். என்ன சொல்கிறான் இவன்? என்று.

ருத்ரனோ மேலும் தொடந்து, “எங்க அப்பாக்கு தான் என்மேல நம்பிக்கை இல்லை. உனக்குமா? அவர் என்னை நம்பி தொழிலை தரலை. நீ என்னை நம்பி நம்ம வாழ்க்கையை விடலை. ஏன் எங்க வீட்ல இருந்து பேச வரப்போறாங்கன்னு தெரிஞ்ச பிறகும் கூட, அதை என்கிட்ட சொல்லலை தானே நீ? அதுக்கப்பறம் கூட என்கிட்ட பேச நீ எந்த முயற்சியும் எடுக்கலை. இதுலயே தெரியலை. என்னோட நிலமை என்னன்னு…” அவன் பேசப்பேச அவளுக்கு தொண்டை அடைத்தது.

“ஏன் இப்படி பேசறீங்க?” என்றாள் விசும்பலோடு. கூடவே, “உங்களை நம்பாம யாரை நம்ப போறேன்?” என்றாள். தோலை மட்டும் குலுக்கினான். ‘நீ சொல்வதை நம்ப தயாராய் இல்லை’ என்னும் பாவனையில்.

“உங்க மனசுல இவ்வளவு கோபம் இருக்கும்ன்னு நான் நினைக்கலை. எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க நினைச்சேன். எங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும், வீட்ல அடமா இருந்து உங்களை தான் கட்டிக்குவேன்னு சொல்லலாம்ன்னு இருந்தேன். வீட்ல பேசிட்டு உங்ககிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஆனா… ஆனா… எங்க அண்ணனே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதை என் அப்பா, அம்மா ரெண்டு பேராலையும் தாங்கிக்கவே முடியல. இந்த சூழல்ல நானும் ஒருத்தரை காதலிக்கிறேன்னு எப்படி சொல்ல? அதான் உங்களை விட்டு விலகி இருந்தேன். திடீர்ன்னு வீட்ல அம்மா உன்னை பாக்கணும் போல இருக்கு சொன்னாங்க. நானும் வந்தேன். அப்பறம் உங்க வீட்ல பொண்ணு கேட்டு வந்தாங்க… அப்பவும் உங்களுக்கு சொல்லணும் நினைச்சேன், ஆனா லேட் நைட் எப்படி கூப்பிட தெரியல. கல்யாணம் பேசுனதும் நீங்க கூப்பிடுவீங்கன்னு காத்திருந்தேன். நானா கூப்பிட ரொம்ப வெட்கமா இருந்தது” என்றாள் தேம்பி தேம்பி அழுதபடி. தன்னிலையை மொத்தமாக விளக்கி.

“உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு எப்படி சொல்லறீங்க. உங்க வீட்ல பொண்ணு பாக்க வந்ததால தான் நான் சரின்னு சொன்னேன். அது உங்க மேல இருக்க நம்பிக்கையில தான… ஏன் இப்போ கூட, உங்களுக்கு… உங்களை சமாதானம் செய்ய… நான்… நான்… அன்னைக்கு… நீங்க ஆசைப்பட்டீங்களே… அதான் நான் நம்ம ரெண்டு பேரும் சமாதானமாக…” இந்த முறை அதிகம் திக்கி, முகம் வேறு சிவக்க ஏதோ கூற வர, அத்தனை நேரம் ‘ஐயோ ஏன் இப்படி அழுகிறாள்?’ என பார்த்திருந்தவன், அவளது தடுமாற்றத்தில் சற்று சுவாரஸ்யமாக பார்க்க,

“உங்களை சமாதானம் செய்ய, அன்னைக்கு நீங்க… நீங்க ஆசைப்பட்டதை நிறைவேத்த… லாம்ன்னு கூட நினைச்சேன். அதெல்லாம் உங்க மேல நம்பிக்கை இல்லாம தானா?” சொல்லிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியவே ருத்ரனுக்கு சில நொடிகள் ஆனது. ‘என்ன ஆசைப்பட்டேன்?’ என யோசித்தவனுக்கு, ‘இவ கிட்ட கிஸ் வாங்கணும்ன்னு தானே!’ என நொடியில் மின்னல் அடிக்க, ‘அப்போ…’ கோபம் எல்லாம் அவள் அழுகையிலேயே கரைந்து போயிருக்க, இப்பொழுது அவள் கூறியதை எல்லாம் கேட்டதும், அவளருகே வேக எட்டில் நெருங்கி விட்டான். “பொம்மு என்ன சொன்ன?” அவள் முகம் பற்றி கேட்க, இன்னமும் அழுகை தான்.

“ஏய் அழாதடி. வாயாடி, அழுமூஞ்சி. கொஞ்சம் என்னை பாரேன். நிஜமாவே யோசிச்சியா? யோசிச்சிட்டே இருந்தவ தந்திருந்தா கோபம் எப்பவோ போயிருக்குமேடி” என்க, அவளுக்கு ஒரே அழுகை தான். குறையவே இல்லை.

“அச்சோ அழாத பொம்மு. சாரி. சாரி. உன் நிலைமை புரிஞ்சது. இருந்தும் ஏதோ கோபம்? அதெப்படி அவ இப்படி பண்ணலாம்ன்னு. சாரி சாரி” என அவன் தான் அவளிடம் இப்பொழுது மன்னிப்பை வேண்டி நின்றான். அழுகை ஓயவே சிறிது நேரம் ஆக, அவளை பார்க்கவே சிரிப்பாய் வந்தது. முகத்தில் அவளது கண்மை ஈஷிக்கொண்டு, உதடு துடிக்க இருக்க “நிஜமாவே அப்படி யோசிச்சியா?” என ஆர்வமாக கேட்டான் அவனுடைய காரியத்தில் கண்ணாக.

‘அச்சோ உளறிட்டமோ!’ என அவள் விழிக்க, அவன் கைப்பேசி வேற ஓயாமல் கதறியது. அவன் நண்பர்கள் தான், வேலையை முடித்தாயிற்றா? என்று கேட்டு செய்திருந்தனர். “டேய், கரடிங்களா… அப்பறமா செய்யறேன். வெய்யுங்கடா” என கடிந்து போன் காலை கட் செய்ய, அவன் நண்பர்களுக்கு அவனது பதிலில் ஒரே ஆச்சர்யம், கூடவே, ‘எந்த சிவ பூஜை நடக்கிறது?’ என தெரிந்து கொள்ள பேரார்வமும்.

அப்பொழுது தான் கவனித்தான். கைப்பேசியில் எந்த குறுஞ்செய்திகளும் வாசிக்கப் படாமல் இருப்பதை. ‘ஓ மெசேஜ் அனுப்பிட்டு ரிப்ளை செய்யலைன்னு தான் கூப்பிட்டு இருக்கானுகளா?’ என எண்ணியவனின் கைகள், தன்போல வாட்ஸ் ஆஃப்பை ஓபன் செய்ய, சௌபியின் செய்தியை அப்பொழுது தான் படித்தான்.

‘அப்படி என்ன கோபம் காரணத்தை கூட சொல்லாம… அறிவு கெட்ட உம்மணாமூஞ்சி?’ படித்ததும் முதலில் கோபம், பின்னர் சிரிப்பு. “என்ன பொம்மு இது?” என கைப்பேசியை அவள் முகத்தின் முன்னே நீட்ட, அவள் உதட்டை சுளித்து முகத்தை திருப்பிக் கொண்டாள். அவனிடமிருந்து சற்று விலகியும் அமர, அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

“ஓ, கோபமா இருக்கியா?” என கேட்டவன், சற்று நெருங்கி அமர, மீண்டும் தள்ளி போக முயற்சித்தாள். முயற்சி மட்டுமே, அதற்குள் இடையோடு வளைத்திருந்தான். அவன் கரங்கள் தீண்டிய பகுதி கூச, அவளுக்கு மிகவும் அவஸ்த்தையாய் போனது. திருதிருவென விழிக்க, நொடியும் தாமதிக்காமல் இதழ்களை சிறை செய்து விட்டான். எதிர்பார்க்கவே இல்லை அவள். அவனை விலக்கிவிட எத்தனிக்க, ம்ம் ஹ்ம்ம் அசைக்க கூட அவளால் இயலவில்லை.

சற்று நேரத்தில் அவனாகவே விலக, இன்னும் இடையை வளைத்திருந்த கரங்கள் விலகவில்லை. முறைப்பாக பார்த்தாள். “நீ கூட, இப்படி சமாதானம் செய்யணும்ன்னு தானே யோசிச்ச” என அவள் இதழ் வருடி கேட்க, ‘பிசாசு, காரணத்தை பாரு. இவன்கிட்ட போயி உளறினோமே!’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொள்ள, அவன் நெருக்கம் வேறு பெரும் அவஸ்த்தையாய் இருந்தது.

அவள் நெளிய, “அதென்ன பொம்மு குட்டி, ‘உம்மணாமூஞ்சி?’ எனக்கு பயங்கற கோபம். இப்போ நீ என்னை சமாதானம் பண்ணு” என சட்டமாக அவன் கேட்க, முன்னிலும் அதிகம் விழித்தாள். மாட்டேன் என்பதாய் இட வலமாய் தலையசைக்க, “அப்போ நானும் நகர மாட்டேன்” என இன்னும் நெருங்கினான்.

ஏற்கனவே அவன் நெருக்கம் படுத்தியது. இப்பொழுது மேலும் படர, அவனது பிடிவாத முகம் அவளை விட்டு நகர மாட்டேன் என அடமாய் இருந்தது. பாவமாய் பார்த்து வைத்தாள். ஒரு பலனும் இல்லை. அசைவேனா என்னும் அடம் துளியும் குறையவில்லை. இப்பொழுது மேலும் நெருங்கி அமர்ந்தான். எப்படியும் விட மாட்டான் என புரிய, அவன் விழிகளை இவள் கரங்களால் மூடிவிட்டு பட்டும் படாமலும் பிள்ளை முத்தம் தந்தாள் அவன் கன்னங்களுக்கு. தந்ததாக தான் அவள் நினைத்தாள். உண்மையில் அவன் கன்னங்களில் உதடு தீண்டியது அவ்வளவே!

இதற்கே அவனை காண முடியாமல், அவன் நெஞ்சில் முகம் புதைத்து மறைக்க, “இதுக்கு பேரு முத்தம், நீ இதை தந்து என்னை சமாதானம் செய்வியாக்கும்” என காதிற்குள் கேலியாக கேட்டு வைத்தான் ருத்ரன். அவன் நெருக்கத்தில் அவளிடம் மறுமொழியே இல்லை.

“ஓ, இந்த வாயாடியை அமைதியாக்க இதுதான் வழியா?” என மேலும் அணைக்க, அவனை கிள்ளி வைத்தாள். “ஸ்ஸ்…” என்றவன், “சரி சரி பொழைச்சு போ” என பாவம் பார்த்து சற்று விலகி அமர்ந்தான். இப்பொழுதும் அவள் நிமிரவில்லை.

சிறிது நேரம் அவளாகவே தெளியட்டும் என இவன் பார்த்திருக்க, “என் மேல கோபம் போயிடுச்சா?” என்றாள் மென்குரலில். “சாரி பொம்மு” என்றான் அவளை படுத்தி விட்டோம் என புரிந்து.

சௌபி மீண்டும் தயங்கி தயங்கி, “அது ஏன் மாமா உங்களை நம்பலைன்னு சொன்னீங்க” என கேட்டாள். இதை கேட்பது சரியா என தெரியவில்லை. அதற்கேற்றாற்போல அவனும், “இன்னொரு நாள் பேசிக்கலாம் டா” என்றான். பேசாமல் தலையை உருட்டினாள். “ஸ்ஸ் பொம்மு தலையை உருட்டி வெக்காத” என தீவிரமாக ருத்ரன் கூற,

புரியாமல் பார்த்தவளிடம், “அது என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணும்” என்றான் மெல்லிய புன்னகையோடு. பிறகு என்ன நினைத்தானோ, தன் தந்தைக்கும், தனக்குமான கருத்து வேறுபாடுகளை கூறிக் கொண்டே வந்தான். “என்னவோ என்னை அவங்க நம்பாதப்ப ரொம்ப கோபம் வரும், சுயமா நின்னு சாதிச்சு காட்டணும் நினைப்பேன். அதான் என் தொழிலை கூட, அவரோட பணம் இல்லாம நானே சின்ன அளவுல செய்யறேன்” என்றான்.

இப்பொழுது அவனிடம் நெருங்கி அமர்ந்து கொண்டாள். “அது… அது… எப்படியும் நீங்க சுயமா எல்லாம் செய்யணும் தானே விருப்பப் படறீங்க. அப்பறம் ஏன், இந்த கம்பெனி பொறுப்பு தரலை, நம்பலைன்னு சொல்லணும். இது என்ன இருந்தாலும் மாமா தொடங்குனது தான. இங்க நீங்க உங்களை நிரூபிக்கறதுக்கும், நீங்களே தொடங்கி இருக்கிற கம்பெனில நிரூபிக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு தானே. அப்பறம் ஏன் அதை பத்தி யோசிக்கறீங்க. அதோட மாமா இந்த வயசுலயே ஏன் இவ்வளவு பொறுப்பு, சமாளிக்க முடியாதுன்னு தான சொல்லறாங்க. ஒரு வேளை அவருக்கு அந்த எண்ணம் தான் பதிஞ்சு இருக்கும் போல, அதுக்காக நீங்க ஏன் கோபப்படணும்? சிலரோட எண்ணங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறாது. அதுக்காக நம்ம தேங்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. சாதிக்க ஒரு வழி மட்டும் தான் இருக்கா என்ன? இந்த தொழிலை உங்க கையில தராட்டியும், உங்க சொந்த தொழிலில் நீங்க நிச்சயம் சாதிப்பீங்க. எனக்கு அந்த நம்பிக்கை நிறைய இருக்கு” என தயங்கி தயங்கி கூறியவளை ஆசையாக பார்த்திருந்தான்.

அவள் பேசி முடித்ததும் , “தேங்க்ஸ்” என்றான் மனமார. கூடவே, “இவ்வளவு நாள் எங்க அம்மா தான் இந்த சமாதானம் செய்யற வேலையை செய்வாங்க. இனி அவங்களுக்கு ரெஸ்ட் தந்துடலாம் போல” என கூற, அவள் முறைத்துப் பார்த்தாள்.

“ஓ கோபமா?” என மீண்டும் அவளை சமாதானம் செய்ய அவன் நெருங்க, “இல்லை இல்லை” என அவசரமாக தலையசைத்து மறுத்தாள். ருத்ரன் அவளது செய்கையில் உல்லாசமாக சிரிக்க, வெட்க மிகுதியால் அவன் மார்பிலேயே தஞ்சம் கொண்டு அவனை செல்லமாய் அடித்தாள் அந்த பூம்பாவை.

சௌபி கூறியதுபோல சிலரது எண்ணங்கள் அவ்வளவு எளிதில் மாறி விடாது. சாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள், மற்றவர்களின் எண்ணங்களால் எப்பொழுதும் தடைபட்டோ, தேங்கியோ நிற்காமல் தங்கள் வாழவின் பயணத்தை தொடர வேண்டும். ருத்ரனைப் போன்று.

இன்று தன் நேசத்தில் சாதித்த ருத்ரன், கூடிய விரைவில் தொழிலும் சாதிப்பான் என்னும் நம்பிக்கையோடு நாம் விடைபெறுவோம்.

** சுபம் **

2 Likes

:see_no_evil::see_no_evil::see_no_evil: kissing scene semma, superb akka fullfill iruku ippo :purple_heart: thank you love you akka.:slightly_smiling_face::slightly_smiling_face:

1 Like

thanks da… yetho… namaku therinja romance vepom :slight_smile:

romba santhosam dear… :slight_smile:

and thanks a lot kathai muluka payanam senju enai encourage panathuku :slight_smile:

1 Like

en kadamai adhu, evlo nalla kadhaiku ithai kuda seiya maataena? thanks for the story :purple_heart:

1 Like