மொழி பொய்த்த உணர்வுகள் – 27 EPILOGUE

மொழி பொய்த்த உணர்வுகள் – 27 EPILOGUE
0

மொழி பொய்த்த உணர்வுகள் – 27 EPILOGUE

அந்த திருமண மண்டபம் சுற்றத்தாரால் நிறைந்திருந்தது. சம்பிரதாயங்கள் எல்லாம் பரபரப்பாய் நடந்து கொண்டிருக்க, “ராகிணி இதை பண்ணு”, “ராகிணி அதை கொஞ்சம் பாரு”, “ராகிணி பரணி ரெடியாயிட்டாளா?” என்றவாறு சாந்தாமணியின் குரல் நொடிக்கொருமுறை ராகிணியை தேடியது.

கூடவே, அவரது இயல்பாக அவள் எதை செய்தாலும், “விளக்குக்கு இன்னும் கொஞ்சம் பூ வெச்சிருக்கலாமே!”, “வரவங்களையெல்லாம் சும்மா சிரிச்சுட்டு வரவேற்பு தந்தா ஆச்சா? வாங்கன்னு வாய்நிறைய சொல்ல வேண்டாமா?” என அவளது செய்கைகளை குறை கூறியபடி வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அது அவருடைய இயல்பு என புரிந்ததால் அதை ராகிணி எப்பொழுதும் பெரிது படுத்துவதில்லை.

இன்னமும் ராகிணியால் தனது புகுந்த வீட்டினரின் மனமாற்றத்தை நம்பமுடியவில்லை. சௌபியின் திருமணம் முடிவானதிலிருந்தே அவர்களது ஒதுக்கம் குறைந்திருந்தது. வாய் வார்த்தையாக எதையும் சொல்லாதபோதும் அவளால் அந்த வித்தியாசத்தை தெளிவாக உணரமுடிந்தது.

அதோடு நிச்சயம் நடந்தபொழுது காவேரி தனது மருமகளுக்கு நூறு சவரன் நகை சீரோடு வந்து அமர்க்களப்படுத்தவும், அவ்வளவுதான் அன்றிரவே சாந்தாமணி வினோத்தை பிடிபிடிவென பிடித்துவிட்டார்.

“நல்ல வேலைல தான டா இருக்க. சம்பளம் எதுவும் குறைச்சலா? இல்லை நானும் உன் அப்பாவும் கடனா வாங்கி வெச்சுட்டு உன்னை அடைக்க சொல்லி பாடு படுத்தறோமா? உன் பொண்டாட்டி தான அவ. கல்யாணம் ஆனதுல இருந்து மஞ்ச கயித்துலயே தாலி போட்டுட்டுட்டு இருக்காளே, ஒரு தாலி கொடி வாங்கி தர மாட்ட. என்ன செய்வியோ எனக்கு தெரியாத ஒரு பத்து சவரன்ல ஆச்சும் தாலி கொடி வாங்கி அவளுக்கு போடற” என அதட்டவும்,

வினோத்திற்கு அம்மாவின் மனமாற்றம் அப்பொழுது தான் புரிந்தது. புரிந்த விஷயம் எல்லையற்ற மகிழ்வை தந்தது. அதோடு அவர் கூறிய விஷயங்களில் புன்னகையும் வந்தது. “அம்மா பத்து சவரன்ல போட்டா, கழுத்து வலி தான் வரும். அளவா எடுத்து தரேன். வேற ஏதாவது நகையா வேணும்னா வாங்கி தந்துடறேன்” என புன்னகையோடு கூறியவன், “ஆனாலும், நீ இப்படி ஒரேயடியா மாறிட கூடாதும்மா” என சிரிக்க,

“ஏன்டா சம்மந்தியம்மா எவ்வளவு பெரிய இடம் அவங்களே அவங்க மகன் ஆசைபட்டான்னு எவ்வளவு செஞ்சாங்க. எவ்வளவு தூரம் இறங்கி வந்தாங்க. ஆனா, நாங்க உன்னை புரிஞ்சுக்கவே இல்லையே! ராகிணியும் எவ்வளவு பொறுமையா, அனுசரணையா நடந்துக்கறா. நம்ம பரணிகூட எவ்வளவு இணக்கமா இருக்கறா. எங்க தேடி இருப்பேன் இப்படி ஒரு மருமகளை. வெளில கவனிக்கிறப்ப தானே தெரியுது. பசங்களுக்கு வரன் தேடறது எவ்வளவு கஷ்டம்ன்னு. ப்ச் நாங்கதான் எதுவுமே புரிஞ்சுக்காம வறட்டு பிடிவாதமா இருந்துட்டோம்” என தன் கணவர் மனநிலையையும் சேர்த்து கூற, ராகிணிக்கும், சௌபிக்கும், வினோத்திற்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. இவ்வளவு விரைவில் மனம் மாறி விட்டார்களே!

“விடுங்க மா. உங்க மேலயும் தப்பில்லை” என்றான் மகன் ஆதரவாக. அன்றிலிருந்து ராகிணியை யாரும் ஒதுக்குவதே இல்லை. வேக காற்றில் களையும் மேகக்கூட்டங்கள் போல, அவளது கவலைகளும் களைந்து சென்றிருந்தது.

ராகிணியின் கைப்பேசி சிணுங்கவும் அது யாராக இருக்கும் என புரிந்துவிட்டது. ருத்ரன் தான். சௌபி கைப்பேசி அழைப்பை ஏற்காவிட்டால் அடுத்த அழைப்பு அவளுக்குதான். சௌபியால் சுற்றிலும் ஆட்களை வைத்துக்கொண்டு எடுத்திருக்க இயலாது. இவருக்கு பொறுமை இருந்திருக்காது என புரிய, “சொல்லுங்க அண்ணா…” என்றாள் வாயிற்குள் அதக்கிய புன்னகையோடு.

“என்ன பண்ணறா மா?” என்றான் எதிர்பார்ப்போடு.

“உங்க கையால தாலி வாங்கும்போது அழகா இருக்க வேண்டாமா? அதுதான் தயாராகிட்டு இருக்கா” என்றாள் புன்னகைத்தபடி.

“கொஞ்சம் போட்டோ எடுத்து அனுப்பேன்… முடிஞ்சா அவகிட்ட பேசவும் கொடேன்” என அவன் கேட்க,

“ஹையோ அண்ணா, சுத்தியும் எல்லாரையும் வெச்சுட்டு என்ன பேசுவா? கொஞ்ச நேரத்துல உங்ககிட்டயே ஒப்படைச்சுடறேன். அதுவரை போட்டோ பாருங்க” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு சௌபியை புகைப்படம் எடுக்க தொடங்கினாள்.

அண்ணி புகைப்படம் எடுக்கும்போதே சௌபிக்கு புரிந்துவிட்டது, அது யாருக்கு செல்லும் என்று. என்னவோ அவளுக்கு மிகவும் வெட்கமாக போனது. அப்பொழுது மட்டும் இல்லை மணமேடை செல்லும் வரையிலும் வெட்கம் வெட்கம் வெட்கம் மட்டுமே.

அதிலும் ருத்ரனின் குறுகுறுபார்வை அவளை மேலும் மேலும் சிவக்க வைத்தது. ‘ஹையோ ஏன் இப்படி பார்த்து வைக்கிறார்?’ என மனம் மத்தளமிட, இதழ்களை அழுந்த மூடி அமர்ந்திருந்தாள். இப்பொழுதெல்லாம் அவன் சீண்டல்கள், பேச்சுக்கள் அனைத்தும் அதிகமாகியிருந்தது. அவனிடம் பேச கூட முடியாமல் தினமும் திணற வைத்தான். மறவாமல் வீடியோ கால் வேறு.

இப்பொழுதும் எதையாவது முணுமுணுத்துக் கொண்டும், யாரும் அறியாமல் அவளை சீண்டிக்கொண்டும் அவன் இருக்க, அவளுக்கு தான் தவிப்பாய் போனது. நெளிந்து கொண்டே அவள் இருக்க, பாவம் பார்த்து விட்டுவிட்டான். அதை வார்த்தைகளால் கூறவும், அத்தனை நேரம் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் இருந்தவள், சட்டென்று அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ கண்சிமிட்டி புன்னகைத்தான். மீண்டும் வேகமாய் தலையை தாழ்த்திக் கொண்டாள்.

அந்த இனிய தருணங்கள் பொக்கிஷமாய் அவர்களுக்குள் நிறைந்து வர, முகூர்த்த வேளையில் சுற்றமும், நட்பும் வாழ்த்த, அனைவரின் ஆசையோடும் மங்கள நானை பூட்டி தன் மனம் கவர்ந்தவளை தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் ருத்ரேஸ்வரேன்.

அதன்பிறகு சில சம்பிரதாயங்களில் கலந்து கொண்டவன், மறுவீடு கூட செல்லாமல் அனைவரிடமும் வேறொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறினான்.

“எங்கே போகணும் சொல்லு ஈஸ்வர். பொண்ணு வீட்டுக்கு போகணும் இப்போ” என சரவணவேல் கடுகடுக்க,

“போலாம் ப்பா. அதுக்கு முன்ன ஒரு இடத்துக்கு போயிட்டு போகலாம்” அழுத்தம் திருத்தமாக கூறி நிற்க, அந்த நேரத்தில், அத்தனை உறவினர்கள் முன்னிலையில் திட்டவோ, வாக்கு வாதம் செய்யவோ முடியாமல் சரவணவேல் திண்டாடிப் போனார்.

காவேரி தான் கணவனை சமாதானம் செய்ய, ருத்ரன் கூறிய வணிக வளாகத்திற்கு அனைவரும் சென்றனர். அங்கு சென்ற பிறகு, அவன் செய்து வைத்திருந்த வேலையால் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி. யாருமே இதை சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை.

கோவை காந்திபுரத்தில் இருக்கும் ஒரு பிரமாண்ட வணிக வளாகத்தின் ஒரு பகுதியில், “சௌரூ கான்ஸ்ட்ரக்ஷன்ஸ்” என்ற பெயர் பலகை தங்க வண்ணத்தில் புதிதாய் ஜொலிக்க, அதன் நுழைவாயிலில் பெரிதாக பூக்கோலமும், வெள்ளை மற்றும் நீல வர்ணங்களிலான பலூன்கள் அரைவட்ட வடிவத்திலும் இருந்தது. அங்கு தான் அனைவரையும் அழைத்து வந்திருந்தான்.

“என்ன ஈஸ்வர் இது, திடீர்ன்னு?” என காவேரி ஆச்சர்யமாய் கேட்க,

“சர்ப்ரைஸ் மா” என்றான் மகன் கண்சிமிட்டி. ‘சர்ப்ரைஸ்’ என்று கூறிவிட்டதால் ‘ஏன் முன்பே கூறவில்லை?’ என யாராலும் கேள்வி கேட்க முடியாதபடி வாயடைத்திருந்தான் அந்த சாமர்த்தியசாலி.

“இப்போ எதுக்கு கடன் வாங்கி புது தொழிலை தொடங்கியிருக்க?” கட்டுப்படுத்தவே முடியா கோபத்தில் அவனுக்கு மட்டும் கேட்குமாறு சரவணவேல் கடுகடுப்பாக கேட்க,

“கடன்னு யார் சொன்னாங்க?” என்று பதில் கேள்வி கேட்டு மகன் அவர் வாயை அடைத்தான். பின்னே, இத்தனை ஆண்டுகளாய் சேமித்த பணத்தை போட்டு தொழில் தொடங்கி இருப்பவனிடம் இப்படி கேட்டு வைத்தால் அவனது எதிர்வினை இப்படித்தானே இருக்கும்.

‘ஒரு தொழிலை தொடங்கும் அளவு பணத்தை சேமித்திருக்கிறானா மகன்?’ வாயடைத்து மட்டுமல்ல வியந்து போயிருந்தார் சரவணவேல். ‘மகனை மிகவும் குறைவாக எடை போட்டு விட்டோமோ!’ என அந்த மனிதருக்கு அப்பொழுதுதான் மிகச்சரியாக எண்ணம் பயணித்தது. மகிழ்ச்சி, பூரிப்பு, அதிர்ச்சி, ஆச்சர்யம், குற்றவுணர்வு என்ற கலவையான உணர்வுகளால் ஆட்கொண்டிருந்தார்.

சரவணவேலின் நிலையை உணர்ந்த அவருடைய அண்ணன் குருநாதன் ஆதரவாய் தம்பியின் கரங்களை தட்டிக் கொடுத்தார். “பசங்க வளர்ந்துட்டாங்க, பொறுப்பா இருக்காங்கன்னு நாம தான் புரிஞ்சுக்கணும் சரவணா” என கூற,

“எனக்கு புரிஞ்சுக்க தெரியலையேன்னா” குற்றவுணர்வுடன் சரவணவேலின் பதில் வந்தது. “விடுப்பா முடிஞ்சதை பேசிட்டு…” என சமாதானம் செய்தார் அண்ணன்.

சௌபிக்கு முன்னமே தெரியும் என்பதால் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை. அந்த பெயர் மட்டும் தான் அவளுக்கு புதிது. அதை பார்த்து பார்தது மகிழ்ந்தாள். தனக்குள் சொல்லி சொல்லி கரைந்தாள். “சௌரூ” இருவரின் பெயரில் இருக்கும் முதல் எழுத்துக்களும் அழகாய் பொருந்தியிருப்பதை எண்ணி பூரிப்பில் இருந்தாள். மனதிற்குள் உச்சரிக்கும் போதே தித்தித்தது.

மனதின் மகிழ்வு அவளை பரவசப்படுத்த, தன் மணவாளனை ஓரவிழியால் ரசித்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த மற்ற ஏற்பாடுகளை சரிபார்த்துக் கொண்டிருந்த கணவனை கண்களுக்குள் நிறைத்து மனப்பெட்டகத்தில் சேமித்துக் கொண்டிருந்தாள்.

ருத்ரன் சௌபியின் பார்வையை உணர்ந்திருப்பான் போலும், தனது பேச்சுவார்த்தையினூடே அவளைப்பார்த்து கண்சிமிட்டி ‘என்ன?’ என்பதாய் புருவங்களை உயர்த்த, பரவசம் குறைந்து ‘கண்டுகொண்டானே!’ என்னும் படபடப்பு வந்தது செல்ல பூனைக்கு.

அனைத்து ஏற்பாடுகளையும் சரிபார்த்தவன், அவள் கைகளால் அலுவலகத்தை திறந்து வைக்க கேட்க, அவளோ அவளது மாமனார், மாமியாரைப் பார்த்து நின்றாள். ‘பெரியவர்கள் இருக்கும்பொழுது தான் எப்படி?’ என்னும் தவிப்பு அவளுக்கு.

அதை உணர்ந்த காவேரியோ, “நீ தான் திறக்கணும் பரணி. உங்க மாமா கூட என்னை தான் ‘கோவை ஹூண்டாய்’ திறக்க சொன்னாரு. தயங்காம வாங்கிக்கோ மா” என ஊக்கம் தர,

மெல்லிய புன்னகையுடன் அந்த சிகப்பு ரிப்பனை தன் கணவன் கைகளோடு சேர்த்து வெட்டி, உள்ளே சென்று குத்து விளக்குகளை ஏற்றினாள். அதன்பிறகு அங்கிருந்த ஐயர் சில சம்பிரதாய பூஜைகளை செய்ய, ருத்ரனின் தொழில் சிறப்பாக வர வேண்டும் என்று அனைவரும் மனதார பிரார்த்தித்தனர்.

பிறகு, வந்தவர்கள் அனைவருக்கும் குளிர்பானங்களும், சிற்றுண்டிகளும் கொடுக்கப்பட, அனைவரும் சிறு சிறு கூட்டங்களாய் நின்று பேசியபடி உண்டனர். சௌபியை தனதருகிலேயே நிறுத்திக் கொண்ட ருத்ரன், அருகில் யாரும் இல்லாத நேரம், “யாரோ என்னை சைட் அடிச்ச மாதிரி இருந்தது” என முணுமுணுக்க, அவளது கன்னங்கள் சிவந்தது. யாரும் பார்க்கவில்லை என்றெண்ணியவன் அவளது கன்னங்களை நோக்கி குனிய, “மச்சானுக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணுமாம்” என்று சத்தமாக கூறினான் வினோத். அதில் சௌபி மேலும் சிவக்க, ருத்ரன் அசடு வழிந்தான்.

இன்று தன் நேசத்தில் சாதித்த ருத்ரன், கூடிய விரைவில் தொழிலும் பெரிதாக சாதிப்பான் என்னும் நம்பிக்கையோடு நாம் விடைபெறுவோம்.

** சுபம் **

3 Likes

:heart::dancer::dancer::dancer::dancer: semma semma akka andha machanuku seekiram veetuku ponumam moment semma kala kala vera level epilogue ithu…:ok_hand::ok_hand::ok_hand:

1 Like