வசந்த கோகிலம் - நிறைவுப் பகுதி

வசந்த கோகிலம் - நிறைவுப் பகுதி
0

அங்கம் 3 காட்சி 3

மாதவராயருடைய மாளிகை.
அக்னி வளர்க்கப் பட்டு இருக்கிறது.
அதற்கு அருகில் மஞ்சள் புடவை உடுத்திக் கொண்டு கோகிலம் நிற்கிறாள். குழந்தை சிசுபாலன் அவளுடைய இடுப்புப் புடவையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். ஸோமேசன் வேறொரு புறமாக நிற்கிறான்.

கோகி : அப்பா! கண்ணே! என்னை விட்டு விடு! நான் சொல்வதைக் கேள். உன் பிதாவுக்கு இவ்வளவு மான ஹானி வந்தபின் நான் இந்த உடம்பை வைத்திருக்கக் கூடாது. வீணாய்த் தடுக்காதே.

சிசு : அம்மா! அப்பாவும் போய் விட்டார். நீங்களும் நெருப்பில் விழுந்து விட்டால் நான் என்ன செய்வேன்? இனி நான் யாரை அம்மாவென்று கூப்பிடுவேன்? நீங்கள் இல்லாமல் நான் எப்படி உயிரோடு இருப்பேன்? என்னை இனிமேல் தினம் யார் கூப்பிட்டு, ஆகாரம் பட்சணம் எல்லாம் கொடுப்பார்கள்! அம்மா! நீங்கள் நெருப்பில் விழக்கூடாது.

ஸோ : அம்மணி! பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியம் பாவத்தைத் தரும். பிராம்மணனுடைய மனைவி தனிக்காஷ்டம் ஏறுவது தவறு என்று நம்முடைய சாஸ்திரங்கள் முறையிடுகின்றன.

கோகி : என்னுடைய நாதனுக்கு வந்த பழிச் சொல்லை கேட்பதைவிட நான் இந்த பாவத்தைச் செய்வதே உத்தமமானது. என்னுடைய குழந்தையை மாத்திரம் தயவு செய்து நீர் அப்பால் அழைத்துக் கொண்டு போம். இவன் என்னைத் தடுக்கிறான்.

ஸோ : அம்மணி! மன்னிக்க வேண்டும். நீங்கள் உயிரை விடத் தீர்மானித்தால், முதலில் நான் விழுவதற்கு அனுமதி தாருங்கள்.

சிசு : அம்மா! நான் முதலில் விழுந்து விடுகிறேன். எல்லாரும் என்னைத் தனியாக இங்கே விட்டுப் போகப் பார்க்கிறீர்களோ?

கோகி : கண்மணி குழந்தாய்! பிடிவாதம் செய்யாதே, நான் சொல்வதைக் கேள். இறந்து போன உன் பிதாவுக்கும், எனக்கும் நீ உயிருடனிருந்து கவனிக்க வேண்டிய கிரியைகள் எவ்வளவோ இருக்கின்றன. நீ இருந்து அவைகளைச் செய்யா விட்டால், எங்களுக்கு நல்ல கதி கிடைக்காது. என் தங்கமே! போ! அப்பால்! நான் சொல்வதைக் கேள்.

(மாதவராயர் முதலிலும் வஸந்தஸேனை, சந்தானகன், கோமளா முதலியோர் பின்னாலும் ஓடி வருகிறார்கள்.)

மாத : (தன் குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறார்) அப்பா கண்ணே! உன்னைத் திரும்பவும் காணக் கிடைத்ததே!

கோகி : ஆஹா! இவர் யார்? அவர்தானே! (உற்றுப் பார்த்து)ஆம், அவரே! என் ஆருயிர்க் கணவரே வந்து விட்டார்.

குழந்தை : (சந்தோஷத்தோடு) அம்மா! இதோ பார் அப்பா வந்து விட்டார். இனிமேல் அழாதே! சந்தோஷமாயிரு!

மாத : (தன் மனைவியை அணைத்துக் கொண்டு) பிரிய சுந்தரி கோகிலம் உன் நாதன் உயிருடன் இருக்கும் பொழுது, நீ உயிரைவிட நினைத்தாயே! என்ன பைத்தியம்! சூரியன் ஆகாயத்தில் பிரகாசிக்கும் வரையில் தாமரைப் புஷ்பம் தன் இதழ்களை மூடுவது உண்டோ?

கோகி : சூரியனைக் கிரஹணம் பிடித்தமையால் அவனை இனிக் காண முடியாது என்னும் எண்ணத்தினால் தாமரை தன் இதழ்களை மூடப்பார்த்தது; அதற்குள் நல்ல காலமாய்க் கிரஹணம் நீங்கியது; இனி அதன் வாட்டமும் ஒழிந்தது.

ஸோமே : இதென்ன கனவோ! என் கண்கள் நிஜமாகவே பார்க்கின்றனவோ! என் ஆப்த நண்பர்தாமோ இவர்! மேன்மை பொருந்திய மனைவியின் பதிவிரதா தர்மம் தலை காத்ததோ? இவள் நெருப்பில் விழ நினைத்ததே இவளைத் தன் புருஷ னுடன் சேர்ப்பித்ததோ! ஆகா!

மாத : ஸோமேசனையும், ஆலிங்கனம் செய்து கொண்டு அப்பா ஸோமேசா! மெச்சினேன்! உன்னைப் போல ஆபத்தில் உதவும் நண்பன் கிடைப்பானோ? உன்னைப் பெற்ற எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்!

கோம : ஸ்வாமீ! நமஸ்காரம். (காலில் விழுகிறாள்)

மாத : கோமளா! எழுந்திரம்மா! (அவள் தோள் மேல் கை வைக்கிறார்) நான் உயிருடன் திரும்பி வராவிட்டால் என் பேரில் பிரியம் வைத்த இத்தனை பேர்களின் நிலைமை என்ன ஆகுமோ! ஈசுவரன் சர்வேக்ஞன் அல்லவா; நல்லது கெட்டது அவனுக்குத் தெரியாதா?

கோகி : (வஸந்ஸேனையைப் பார்த்து) வஸந்தஸேனா! பிரிய சகோதரி! நீ வந்திருப்பதை நான் பார்க்கவில்லை! ஆகா! உயிருடன் திரும்பி வந்தாயே! உன் பேரழகைத் திரும்பவும் நான் பார்க்கப் போகிறேனா என்றல்லவோ ஏங்கி இருந்தேன்.
(இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறார்கள்)

கோகி : வஸந்தஸேனா! உன்னுடைய விருப்பம் இன்னது என்பதை நான் நன்றாய் அறிவேன். அன்றிரவு உனக்கும் என் கணவருக்கும் நடந்த சம்பாஷணை எனக்கு முற்றிலும் தெரியும்.

வஸந்த : அக்காள்! தங்கள் நற்குணத்தைப் போல இந்த உலகில் வேறு எவரிடத்திலும் இருக்குமோ! எந்த விஷயத்திலும் தங்கள் மனம் கோணக் கூடாது என்பதே என்னுடைய ஓயாக் கவலை. என்னைத் தங்களுடைய பணிப்பெண்ணாக நீங்கள் இனி மதிக்க வேண்டுகிறேன்.

கோகி : ஆகா! நல்ல வார்த்தை சொன்னாய். நீ எனக்கு அருமையான சகோதரி அல்லவா! நாம் இருவரும் ஈனி நமது நாதனுக்குப் பணிப்பெண்கள். (வஸந்தஸேனையின் கரத்தைப் பிடித்து மாதவராயர் வலக் கரத்தில் வைத்து) ஸ்வாமீ. வஸந்த ஸேனையையும் இனி என்னைப் போல மனைவியாக ஏற்றுக் கொண்டு எங்கள் இருவரையும் பணிப்பெண்களாக மதிக்க வேண்டும்.

மாத : எல்லாம் வல்லவனும் சர்வ மங்கள ரூபியான சர்வ ஜெகதீசனுக்கு அல்லவோ நாமெல்லோரும் பணம் செலுத்த வேண்டியவர்கள். வாருங்கள். நாம் எல்லோரும் அவருடைய பெருமையைப் பற்றி ஸ்தோத்திரம் செய்து விட்டு பிறகு நம்முடைய புதிய அரசனிடம் போவோம். எனக்கு இந்த இராஜ்யத்தில் முதல் மந்திரி உத்தியோகம் கிடைத்து இருக்கிறதாம்.

கோகி : ஆகா! அப்படியா எல்லாம் ஜெகதீசன் செயல்!

(காட்சி முடிகிறது)
நிறைந்தது