வார்த்தை தவறிவிட்டாய் 10

வார்த்தை தவறிவிட்டாய் 10
0

அத்யாயம் – 10

ஸெல்ப்பிட்டி எனும் கழிவிரக்கம் பயங்கரமான வியாதி. தன்னுடைய நிலைமையைப் பற்றி நினைத்து
அந்தக் கவலையிலேயே உழன்று கொண்டிருக்கும் இவர்கள் உண்மையை எதிர்கொள்ள
மறுக்கிறார்கள். FEAR எனும் ஆங்கில வார்த்தைக்குப் பொருளாக Forget Everything And
Run ( எல்லாவற்றையும் மறந்து ஓடு) என்று அவர்கள் அர்த்தம் கொள்வதற்கு சுய

இரக்கமே காரணம்.ஸெல்ப் பிட்டியைத் தலைமுழுகி விட்டால் Face Everything And
Recover ( எதிர்நோக்கி மீண்டு வா) என்று பிரச்சனையை எதிர்நோக்கும்
எண்ணத்துடன் வீறுகொண்டு கிளம்பிவிடுவார்கள்.
‘அம்மா சொன்ன மாதிரி அவர் வீட்டை விட்டு வெளிய அனுப்பிடுவாரா?’
‘அப்படி மட்டும் அனுப்பிட்டா, பாமாவையும் ஷியாமாவையும் எப்படி காப்பாத்துவேன்’
‘இந்த மாதிரி வெளிய தொரத்துற திட்டத்தோடத்தான் பூர்வஜா என்னை வேலைக்குப் போக
சொல்லி வற்புறுத்தினாளா?’
எதையும் உணரப் பிடிக்காமல் அமர்ந்திருந்தவளைக் கட்டாயப்படுத்தி மதியம் சாப்பிட வைத்தார்
தவ்லத். அந்த இடைவெளியில் பாமாவுக்கும் ஷியாமாவுக்கும் உடம்புக்கு ஊற்றி விட்டு, வேறு உடை
மாற்றி தலைப்பின்னி சாப்பிட வைத்தனர் சாவித்ரியும், தவ்லத்தும்.
“நேத்ரா எங்க மாமி?”
“பானு விஷயத்தைப் பாத்ததுலேருந்து அவளும் பித்து பிடிச்சாப்பில இருந்தா… காலங்காத்தால கிளம்பி
பிரெண்டை பார்த்துட்டு வரேன்னு போயிருக்கா… நீ வீட்டுக் காரியமெல்லாம் முடிச்சுட்டியா”
“சமையலை முடிச்சுட்டேன். யாஸிம் லீவ் விட்டதிலிருந்து சாப்பிடவும் தூங்கவும்தான் வீட்டுக்கு வரான்.
அப்படி எங்கத்தான் சுத்துவானோ தெரியல” இருவரும் பேசியபடியே ஒரு வாய் சாப்பிட்டனர்.

“இப்ப பானுவையும் தேத்தி விடணும்டி. இவ அம்மா ஊருக்கு பத்திரமா போய் சேர்ந்த தகவலைக் கூட
சொல்லல. பானுவோ ஆத்துக்காரன் போன் பண்ணாக்கூட எடுத்து பேச மாட்டிங்கிறா. அவன் பதறிப்
போயி நேத்து மாமாவுக்கு போன் பண்ணிட்டான். நான் பானு போன் ரிப்பேர். இனிமே எனக்கு
பேசுங்கன்னு சமாளிச்சிருக்கேன். இன்னும் மூணு நாள் கழிச்சு பிரகாஷை நேருல பாக்கும்போது இவ
என்ன செய்யப் போறாளோன்னு திகிலா இருக்கு”
சாவித்திரி பேசிக்கொண்டிருக்கும்போதே வாயில் கதவைத் திறந்து புயலென உள்ளே நுழைந்தான்
நாசர்.
“இங்கதான் மாநாடு நடக்குதா? மூணு பொம்பளைங்க இருக்கிங்க… யாரும் இவளை கண்டிக்க
மாட்டிங்களா… “ அனலாய் கொதித்தவன், பின்னால் திரும்பி “உள்ள வா” என்று கோவத்தில்
கத்தினான்.
பயந்தபடியே உள்ளே நுழைந்தாள் நேத்ரா…
“என்னடி செஞ்ச… “ பதறிப்போய் கேட்டார் தவ்லத்.
“ஒரு தப்பும் செய்யல ஆன்ட்டி” என்ற நேத்ராவின் பதிலால் அவ்வளவு நேரம் அடக்கி
வைக்கப்பட்டிருந்த கோவம் வெடிக்க பளாரென நேத்ராவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தான்.
அடியின் வேகத்தில் நிற்க முடியாமல் கீழே விழுந்தாள் நேத்ரா.
“கடங்காரி, நாசர் அடிக்கிற அளவுக்கு என்ன தப்புடி செஞ்ச…”
நினைவு வந்தவனாக “அவனெங்க…” என்று கர்ச்சித்தான் நாசர்.
“உங்களைப் பாத்ததும் ஓடிட்டான்” என்றாள் நேத்ரா.

“யாரந்த பையன்? என் தலைல தீயை வாரிக் கொட்டிட்டேயே… உங்கப்பனுக்கு என்ன பதில்
சொல்லுவேன்” என்றபடி நேத்ராவின் முதுகில் தன் பங்குக்கு நான்கு அடி போட்டார் சாவித்திரி. அவரை
விலக்கிவிட்டவன். அருகில் தரையில் அமர்ந்து கொண்டான்.
“பாட்டி அதெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அப்படி யாராவது ஒருத்தன் கூட பாத்திருந்தா
அவனையும் சேர்த்து மொத்திருப்பேன். நார்த் மெட்ராஸ் ரவுடி ஒருத்தனுக்கு பிஸினெஸ் மக்கள்
அடிக்கடி மொய் எழுதுவோம். அது விஷயமா நான் அந்தப் பக்கம் போனா… இவ அவனைத் தேடி
வந்திருக்கா…
நேத்ரா, சினிமாவைப் பாத்துட்டு அவங்களை எல்லாம் ஹீரோன்னு நெனச்சியா? அந்த மாதிரி ரவுடிக்
கூட்டம் உன்னை மாதிரி அழகான பொண்ணைப் பாத்தா சும்மா விடுவாங்களா? உனக்கு ஏன்மா
தீயோட விளையாட ஆசை”
“அண்ணா, அண்ணா… ஒரு ஆளை கொலை பண்ணனும். அதுக்குத்தான் அவனைப் பாக்கப்
போனேன்” என்ற நேத்ராவின் பதிலால் அங்கிருந்த அனைவருக்கும் திகைப்பு.
“ஆமாம்… அந்த பூர்வஜாவைக் கொலை பண்ணனும்… எங்களால முடியாது. அதனாலதான் கூலிப்படை
வச்சு முடிக்கலாம்னு முடிவு செஞ்சோம்”
“செஞ்சோம்ன்னா…” என்றார் தவ்லத்.
“நானும் யாஸிமும்…” என்றாள் தயங்கியபடி.
அவள் கீழே விழுந்த வேகத்தில் அவள் கையிலிருந்த கைப்பையும் கீழே விழுந்து திறந்திருக்க,
அதிலிருந்து நேத்ராவின் நகைகள் கீழே சிதறி பானுவின் கால்களில் பட்டது… அத்துடன்
ரொக்கமாய் பணத்தாள்களும். கேள்வியாய் பார்த்தவர்களுக்கு
“எனக்கு வாங்கின நகையும், யாஸிம் காலேஜ் பீஸ்க்கு நீங்க வீட்டில் வச்சிருந்த பணமும்” என்ற
அவளின் பேச்சைக் கேட்டு பேச்சிழந்தனர் அனைவரும்.
“பூர்வஜாவை ஏன் கொலை பண்ணனும்” நிதானமாய் கேட்டான் நாசர்.
“எனக்காக ஏண்டி இப்படி ஒரு ரிஸ்க் எடுக்குற, அசடு” என்று கண்ணீருடன் அவளைக் கட்டிக்
கொண்டாள் பானு.
“நீ வேலைக்கு போகல, சம்பாத்தியம் இல்ல, அம்மா வீட்டு ஆதரவு கூட உனக்கு இல்லை. அவளைக்
கொலை பண்ணிட்டா அண்ணன் மறுபடியும் உன்கூட சந்தோஷமா இருப்பாரில்ல…” என்று
தேம்பினாள் நேத்ரா.
நடந்ததை நாசருக்கு மெதுவாய் சொன்னார்கள் சாவித்திரியும், தவ்லத்தும்.
“அப்ப நீங்களே முடிவு செய்துப்பிங்க… எங்களை மாதிரி ஆளுங்ககிட்ட கலந்து ஆலோசிக்கணும்னு
கூட உங்களுக்குத் தோணல” குற்றம் சாட்டினான்.
“பானுக்கா… இங்க வந்து உக்காருங்க” என்று அவனுருகே இருந்த நாற்காலியைக் காட்டினான். மறுத்து
பேசாமல் அமர்ந்தாள்.
“இனிமே என்ன செய்யப்போறிங்க”
தெரியவில்லை என்று தலையாட்டினாள் பானு.

“எங்க எல்லாருக்கும் உங்க மேல பிரியம்தான். அதையும் தாண்டி இப்ப உங்க மேல இருக்குற
இரக்கம்தான் இந்த அளவுக்கு ஒரு செயலை செய்ய நேத்ராவையும் யாசிமையும் தூண்டி விட்டிருக்கு”
நிறுத்தினான்
“பலவீனமானவங்க மேல அடுத்தவங்களுக்கு இரக்கம் வர்றது சகஜம்தான். உங்களுக்கு இரக்கம் மட்டும்
போதுமா? இல்லை உங்க லைப்ல இந்த கஷ்டமான சமயத்தை கடக்குற பலம் வேணுமா”

“அக்கா… நேத்ரா சொன்ன மாதிரி உங்களை யாரும் அரவணைச்சு பாதுகாக்கப் போறதில்ல. அண்ணன்
தனியார் வேலைல இருக்கார். அவரை விட்டுப் பிரிஞ்சா, அந்தப் பொம்பளை இங்க சவுகரியமா வந்து
உக்காந்துப்பா. சொசைட்டில இந்த மாதிரி தலை நிமிர்ந்து வாழணும்னு தானே திட்டம் போட்டு அவ
உங்க வாழ்க்கைல விளையாடிருக்கா… அவ எதிர்பாக்குறதை அப்படியே தூக்கித் தரப் போறிங்களா?”
யோசிக்க ஆரம்பித்தாள் பானு. மதியம் முழுவதும் அவளை யோசிக்க விட்டார்கள். மாலை பானுவின்
வீட்டில் தவ்லத்தின் குடும்பமும், நேத்ராவின் குடும்பமும் குழுமியது. தொண்டையை செருமிக் கொண்டு
நாசரின் தந்தை இப்ராஹிம்ஆரம்பித்தார்.
“விஷயத்தைக் கேள்விப்பட்டேன்மா. அதிர்ச்சியா இருந்தது. பிரகாஷை விட்டு விலகத்தான் நினைப்ப.
அதுதான் நியாயம் கூட. நம்பிக்கை துரோகம் அவ்வளவு கொடுமையானது. துரோகம் செஞ்சவங்க கூட
மீதி நாட்களைக் கழிக்கிறது அதைவிடக் கொடுமையானது.
இருந்தாலும் நீ விபரீதமான முடிவுக்கு போயிடக்கூடாதுன்னு அக்கறைல சில விஷயங்களை நினைவு
படுத்துறேன்மா… இப்படி சொல்றதுனால ஆண்வர்க்கத்துக்கு ஆதரவா பேசுறேன்னு நினைக்காதே.
பிரகாஷைப் பிரிஞ்சா ரெண்டு குழந்தைகளையும் நீங்கதான் வளக்கணும். அவங்களுக்கு இதே மாதிரி
சிறந்த படிப்பையும் வசதியையும் உங்களால தர முடியுமா? முதல்ல உன்னையும் பாதுகாத்து உன்
குழந்தைகளையும் பாதுகாக்கணும்.அதுக்குத் தெம்பிருக்கா? பிரகாஷ் உங்களுக்கு துரோகம் செய்தது
தப்புத்தான். ஆனா அவர் ஒரு நல்ல தகப்பனா இருந்திருக்கார். குழந்தைகள் மேல உயிரையே
வச்சிருக்கார். அவரோட குழந்தைகளை பிரிச்சுட்டு எவளோ ஒருத்தியோட குழந்தைக்கு தகப்பன்
ஸ்தானத்தில் உக்கார வைக்கலாமா?”
சதாசிவம் தொடர்ந்தார்.
“நீ பிரிஞ்சாலும் கொஞ்சநாள் பணம் தந்துட்டு அப்பறம் தர முடியாதுன்னு சொல்லிட்டா என்ன செய்வ?
உன்னால குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சுத் தர முடியுமா?
நாங்க உன்னைப் பாத்து அனுதாபப்படலாம், நீ கவலைப் படும்போது ஆறுதலா
இருக்கலாம். ஆனா அவங்கவங்க வலியை அவங்கவங்கதான் எதிர்கொள்ளணும். எப்படி
எதிர்கொள்ளப் போற… என்ன செய்யணும்னு பிரகாஷ் வரதுக்குள்ள யோசிச்சு முடிவெடு. எதுவா
இருந்தாலும் நாங்க பக்கபலமா இருப்போம். உடலுழைப்போ பொருளுதவியோ எங்களால முடிஞ்சா
அளவுக்குக் செய்றோம்”
அவர்களின் பேச்சே பானுவுக்கு தனித்தெம்பைத் தந்தது.
“ஒரு ஆள்கிட்ட நான் கேள்வி கேக்கணும். கேட்டுட்டு வந்து என் முடிவை சொல்லுறேன்” என்றாள்.