வார்த்தை தவறிவிட்டாய் 13

வார்த்தை தவறிவிட்டாய் 13
0

அத்யாயம் – 13

பிரகாஷ் பேருந்திலிருந்து இறங்கினான் ‘பானுவிடம் பேசி நாளாயிற்று. போன் வேலை செய்யவில்லை
என்றால் இந்த சாவித்திரி அம்மா அப்படியே விட்டுவிடுவார்களா… நான் பேசும்போது பானுவிடம்
அலைப்பேசியைத் தந்தால் என்ன? தினமும் பானுவிடம் ஊர்வம்பு பேச வீட்டுக்கு செல்கிறார்களே…
அப்போதாவது என்னை அழைக்க சொல்லலாமே’
வழக்கமாய் கோடை விடுமுறை ஆரம்பித்தவுடன் குழந்தைகளுடன் பானு ஊருக்குக் கிளம்பிவிடுவாள்.
இருபது நாட்கள் பல்லைக்கடித்துக் கொண்டு சொந்த பந்தங்கள் வீட்டுக்கு சென்று எல்லாருக்கும் பரிசுப்
பொருள்களை மொய் எழுதிவிட்டு வருவாள். வரும்போதும் ஒரு வருடத்துக்குத் தேவையான வற்றல்,
வடாம், மோர்மிளகாய், தாளிப்பு வடகம் எல்லாவற்றையும் தயாரித்து மாமியார் நாத்தனார் அம்மா
அனைவருக்கும் தயாரித்துத் தந்துவிட்டு தங்களது வீட்டுக்கும் மூட்டை கட்டிக் கொண்டு வருவாள்.
இந்த முறை ஊருக்குப் போகாதது பிரகாஷுக்கு ஒரே ஆச்சிரியம்.
உள்ளூர சிறிது சந்தோஷமாய் கூட இருந்தது. வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் இருப்பார்களே.
பூர்வஜாவுடன் கழித்த நாட்களை சுட்டிக் காட்டிக் குத்திக் காட்டும் மனசாட்சியை குழந்தைகளிடமும்
மனைவியிடமும் அதிக நேரம் செலவழித்து ஈடுகட்டி விடலாம். அவனது தப்பு யாருக்கும்
தெரியாமலேயே மறையட்டும். இனி நான் புதிய மனிதன். தலைகீழாக மாறிவிட்டிருந்த வீட்டைக்
கேள்வியாகப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பிரகாஷ்.
“அப்பா” என பாய்ந்தோடி அணைத்தாள் சின்னவள் ஷ்யாமா. முதல்முறையாய் பார்ப்பது போல்
அவளைத் தூக்கி முத்தமாரி பொழிந்தான். அவன் மனது கொல்லாமல் கொன்றது. வீட்டினரின் முகம்
பார்க்கவும் துரோகம் மனதை உறுத்தியது.
“போங்கப்பா உங்க கூட டூ… டென் டேஸ் ஊருக்குப் போனிங்க. நான் தினமும் எண்ணிட்டே
இருந்தேன் தெரியுமா…”
“சாரிம்மா… நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். உங்களை விட்டுட்டு இனிமே போக
மாட்டேன்… ஓகேயா”
“பாட்டி சண்டை போட்டுட்டு ஊருக்குப் போயிட்டாங்க. அம்மா கூட அழுதுட்டே இருந்தாங்கப்பா… “
என்று தகவல் சொன்ன பாமாவுக்கு முத்தம் தந்துவிட்டு, பானுவை அவன் கண்கள் தேடின. மாமியார்
சண்டை போட்டு அழ வச்சுட்டாங்களா. அதுதான் இவளுக்கு உடம்பு சரியில்லாம போச்சா.
“கோவிலுக்குப் போயிருக்கா… இதோ வந்துடுவா” என்று தகவல் தந்தார் சாவித்திரி.
வீட்டின் ஒரு அறை நர்சரி போல் கலர்புல்லாய் மாறியிருக்க, “என்னது இது?” என்றான் மகள்களிடம்.

“பப்லுக்காகப்பா… இன்னும் ரெண்டு வாரத்தில் இன்னும் ரெண்டு பாப்பா வரப் போகுது” என்றனர்
இருவரும்.
“யாரது பப்லு…” என்று அவன் கேட்கும்பொழுதே பானு வீட்டில் நுழைந்தாள்.
பத்து நாட்களில் மிகவும் இளைத்திருந்தாள். குளித்து முடிந்த கூந்தல். எலுமிச்சை மஞ்சள் நிறத்தில்
இலைப்பச்சை பூக்கள் இறைத்த புடவை. சமீபத்தில் சீராக்கப் பட்டப் புருவம். வழக்கமாய் வைக்கும்
எட்டணா பொட்டுக்கு பதில் சிறிய கோபி. அதன் மேல் சந்தனம் என்று தோற்றத்தில் மாற்றங்களுடன்
நின்ற பானுவை வித்தியாசமாகப் பார்த்தான். பிரகாஷைக் கண்டவளின் கண்களில் ஆச்சிரியமா
அதிர்ச்சியோ இல்லை. மாறாக ஒரு உறுதி. ஏதாவது ஒரு செயலில் முழு ஈடுபாட்டோடு
இறங்கியவர்களுக்கே அந்த மாதிரி பார்வை சாத்தியம்.
“உடம்புக்கு என்ன பானு… ஏன் இப்படி இளைச்சுட்ட… உங்கம்மா சண்டை போட்டாங்களாமே
குழந்தைங்க சொன்னாங்க. அதை நெனைச்சு கவலைப்பட்டியா… அதுதான் உடம்புக்கு முடியலையா“
என்ற அவனது அக்கறைக்கு பதில் சொல்லாமல்.
“உங்களுக்கு பிளாஸ்க்ல காபி போட்டு வச்சுட்டுத்தானே போனேன். குடிச்சிங்களா?” என்றாள்.
பிளாஸ்க்கில் இருக்கும் காபியை அவனுக்கு கப்பில் ஊற்றித் தந்தவள், “ஹாட் பேக்கில் டிபன் செஞ்சு
வச்சிருக்கேன். குளிச்சுட்டு, சாப்பிடுங்க… டயர்ட்டா இருப்பிங்க… ரெஸ்ட் எடுங்க… சாயந்தரம்
பேசலாம்” என்றாள்.
மாலை தெரிந்த ஒருவரின் குழந்தையைப் பார்த்துக் கொள்ள சம்மதித்திருப்பதாக கணவனிடம்
சொன்னாள்.
“அதுக்கு ஏன் டேகேர்… பணம் வாங்கிட்டு பார்த்தேன்னா பெரிய கமிட்மெண்ட் ஆயிடும் பானு“
“நீங்க வேலைக்கு போயிருக்கும் நேரத்தில் தான் பார்த்துக்குறேன். நம்ம வீட்டில இருக்குற அறையில்
செய்றதால வழக்கமா செய்யும் வீட்டு வேலைக்கு ஒரு தொந்தரவும் வராது”
“அதுக்கு சொல்லலடி… ஏற்கனவே இளைச்சு களைச்சுத் தெரியுற… இதில் ஏன் வீணா தொந்தரவை
இழுத்துப் போட்டுக்குற”
“நீங்க மறுக்க மாட்டிங்கன்னு நம்பிக்கைல பப்லுவோட அம்மாவுக்கு அவனைப் பாத்துக்கிறதா
சொல்லிருக்கேன். ”
“இப்ப முடியலன்னு சொல்லிடு”
“முடியாது… ஒரு வார்த்தை தந்தோம்னா அதை நிறைவேத்தணும். இல்லைன்னா அதை
சொல்லிருக்கவே கூடாது” முதல் முறையாக அவனிடம் தீவிரமாய் பேசியவளை வியப்போடு
பார்த்தான்.
“ஆல்ரைட்… பப்லுவை மட்டும் பாத்துக்கோ… ஆனால் ஒரு உதவியாத்தான் பாத்துக்குற… இப்படிப்
பணம் சம்பாதிக்கணும்னு அவசியமில்லை”
“என்ன அவசியமில்லை… பப்லுவை பாத்துக்குற சமயத்தில் மத்த குழந்தைகளையும் பாத்துக்க மூணு
பேர் இருக்கோம். எங்க நேரத்துக்கும் உழைப்புக்கும் பணம் வாங்குறோம். இதில் தப்பென்ன இருக்கு.
நான் எதையும் இலவசமாவோ உதவியாவோ செயுறாப்ல இல்லை. இந்த உலகத்தில் ‘இரக்கம்
காட்டுறவன் இளிச்சவாயன். அக்கறை காட்டுறவன் அடிமுட்டாள். மரியாதை தருபவன் முழுமுட்டாள்.
உதவி செய்றவன் பிழைக்கத் தெரியாதவன்’ இப்படி விதவிதமா விளக்கம் வச்சிருக்காங்களே. நான் முழு
முட்டாளாவோ இல்லை அடி முட்டாளாவோ இருக்க விரும்பல”

மூச்சு விடாமல் பேசிய மனைவியின் உறுதியான பேச்சில் பிரகாஷ் வாயை மூடிக் கொண்டான்.
பிரகாஷ் தனது ஆராய்ச்சியை மும்பையில் ஒரு வருடம் தங்கி முடிக்க வேண்டி இருந்தது. படிப்பில்
கவனம் செலுத்துவதால் குடும்பத்தை அழைத்து செல்ல முடியாது. இந்த டேகேர் பானுவுக்கும் ஒரு
மாற்றமாக இருக்கும் என்றெண்ணி சம்மதித்தான்.
யாஸிமுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியது. தொண்ணூறு சதவிகிதத்தில்
தேறியவனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரகாஷ்,
"யாஸிம், உனக்கு பி.ஆர்க் சீட் சொல்லி வச்சிருக்கேன். அடுத்த வாரம் சேர
ரெடியா இரு"
பிரகாஷ் வேலை பார்ப்பது மிகப்பெரிய கல்லூரியாயிற்றே அதில் இடம் கிடைக்க
நிறைய நன்கொடை கேட்பார்களே எப்படி மறுப்பதேன அறியாமல் திருதிருவென
விழித்த அவன் குடும்பத்தாரிடம்
"எனக்கு ஒரு சீட் உண்டுங்க… என் தம்பி, தங்கை இல்ல என் குழந்தைகளுக்கு
பயன்படுத்திக்கலாம். அதைத்தான் யாஸிமுக்கு சொல்லி வச்சிருக்கேன்" என்று
பதிலளித்தான்.

சின்னக் குழந்தைக்களை மதியம் உணவூட்டித் தூங்கப் பண்ணினார்கள்
சாவித்திரியும், தவ்லத்தும். மாலை பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு
சிற்றுண்டியாக காரமில்லாத கொண்டைக்கடலை சுண்டலும், வெல்லப்பாகு
காய்ச்சிய பிடி கொழுக்கட்டையும் செய்தாள் பானு. முடிந்த அளவு வீட்டில் செய்த
பொருட்களையே உணவாகக் கொடுப்பதென்று முடிவு செய்திருந்தனர்.

"ஏண்டி பானு உன் வீட்டுக்காரரைப் புரிஞ்சுக்கவே முடியல. நாங்க
கேக்காமலேயே யாசிமுக்கு சீட் வாங்கித் தரார். நீ கேக்காமலேயே துபாய் சங்கிலி
வாங்கித் தரார். பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லித்தரேன்னு வீட்டையே
கலக்குறார். நீ டேகேர் வேலைல பிசி ஆனப்பறம் வைக்கிறதை சாப்பிட்டுக்கிறார்.
நம்ம அன்னைக்குப் பாத்தது அவர்தானா இல்லை அவர் மாதிரி யாரோவா?"

"அவர்தான்க்கா… நம்ம பப்லுவோட அப்பா மூலமா துப்பறியும் நிறுவனத்தில்
விசாரிக்க சொன்னேன். அவங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருந்திருக்கு. நம்ம
ஊகிச்ச மாதிரி அவரை வளைச்சுப் போடத்தான் பூர்வஜா என் மூலமா அவர்
கல்லூரிலையே வேலை வாங்கிருக்கா… இன்னொரு விஷயம் இப்ப கொஞ்ச
நாளா அவங்களுக்குள்ள போக்குவரத்து இல்லை. அவ முயற்சி செய்தாலும் இவர்
விலகுறார். மொபைல் நம்பரை மாத்திட்டார். வீட்டு போன் நம்பரைக் கூட அடம்
பிடிச்சு மாத்திட்டார். அவங்க ரெண்டு பேருக்கு நடுவில என்னமோ பிரச்சனை. "

“எப்படியோ அந்தக் பிசாசைத் தலைமுழுகிட்டு உன் கூட நல்லபடியா வாழ்ந்தா
சரி” என்றார் தவ்லத்.
சாவித்திரி பிரகாஷைப் பற்றிய தன் பார்வையை பகிர்ந்தார்.
"நேத்து ராத்திரி ஒரு டிவி நிகழ்ச்சி பார்த்தேன்டி. ஒரு உளவியல் டாக்டர்
மனிதர்களோட குணாதிசியத்தைப் பத்தி அலசினார். அதில் நம்ம பிரகாஷைப்
பொருத்திப் பார்த்தேன்.
பூர்வஜா இளமையின் கடைசிப் படியில் இருக்கா… அவளுக்குத் தேவை
சமூகத்தில் பாதுகாப்பும், கௌரவமான வாழ்க்கையும். இதுக்காக அவ என்ன
வேணும்னாலும் செய்வா… இந்த மாதிரி பெண்கள் கல்யாணமான ஆண்களைத்
தேர்ந்தெடுக்கக் காரணம் இருக்கு. திருமணமாகாத ஆண்களுக்கு எந்த வயசிலும்
மவுசு இருக்கு. அவங்க இந்தப் பெண்களைத் திரும்பிப் பார்க்கணும்னு
அவசியமில்லை. அப்படியே திரும்பிப் பார்த்தாலும் யூஸ் அண்ட் த்ரோதான். இதை
நல்லா புரிஞ்சுவ பூர்வஜா.
நடுத்தர வயசில் ஆண்கள் தங்கள் துறையில் முன்னேறி ஸ்தரமான இடத்தில்
நங்கூரம் போட்டாப்பில உக்கார்ந்திருப்பாங்க. தங்களது கேரியரைத்
தொடங்கும்போது மாங்கு மாங்குன்னு உழைச்ச மாதிரி இந்த சமயத்தில் உழைக்க
வேண்டியதில்லை. அவங்களோட அனுபவத்தால வேலைகளை அனாயசமா
செய்துட்டு போய்டுவாங்க. இவங்க ஓய்வு நேரத்தில் பழசையெல்லாம் நினைவு
படுத்திக்கப் பார்ப்பாங்க. மலரும் நினைவுகளை அசைபோடும் ஆசையில் பழைய
நண்பர்களைத் தேடி ட்விட்டர் பேஸ்புக்ன்னு ரவுண்ட் அடிப்பாங்க. இதனால்தான்
நடுத்தர வயசுக்காரங்களை க்ளப் மாதிரி இடங்களில் நிறைய பார்க்கலாம்.

சிலபேருக்கு மனசு புதுப் புது த்ரில்லை எதிர்பார்க்கும். மறந்து போன ஏக்கங்கள்
சபலமா மாறித் தலை தூக்கும். அந்த சமயத்தில் அவங்க மனைவி வீடு
குழந்தைகள்ன்னு மற்றவற்றில் கவனம் செலுத்துறதால கணவனோட செலவு
செய்யும் நேரம் கம்மியாவே இருக்கும். இந்த சபலக்காரனுங்க சந்தர்ப்பம்
கிடைக்காத வரைக்கும் யோக்கியனுங்கதான். உன் ஆத்துக்காரருக்கு சந்தர்ப்பம்
அவரைத் தேடி வந்து மடியிலேயே விழுந்திருக்கு. உபயோகப் படுத்திருக்கார்.
இருந்தாலும் அடி மனசில் குடும்பத்துக்கு துரோகம் செய்றோம்னு குத்திட்டே
இருந்திருக்கும். இயல்பா கொஞ்சம் நல்ல குணம் இருக்குறதால சுய அலசலில்
இறங்கி இந்தத் தப்பிலிருந்து விடுபட்டிருப்பார்.
ஆனால் பூர்வஜாட்டருந்து தப்பிக்கிறதுக்கு அவர் மனசு விரும்பினாலும் அவ
விட்டிருக்க மாட்டா. அவர் ஒரு நாள் வரலைன்னாலும் ஏதாவது சாக்கு வச்சு
வீட்டுக்கே வந்து நிக்கிறவ, ஒரே இடத்தில் வேலை பாக்கும்போது எவ்வளவு
குடைசல் தந்திருப்பா? கிட்டத்தட்ட சனியனை தோளில் சுமந்த மாதிரிதான்.
மனசோடயும் அவனோடையும் ஒரு போராட்டத்துக்கு அப்பறம்

விடுபட்டிருப்பார்ன்னு தோணுது. இதை யாருக்கும் தெரியாமலேயே புதைச்சு
வச்சுடலாம்னு நினைச்சிருப்பார். நம்மகிட்ட வசம்மா மாட்டிகிட்டார்"
"ஐயோ மாமி இன்னமும் குழப்பிட்டிங்களே, பானு நீயாவது சொல்லேண்டி உன்
வீட்டுக்காரர் ஹீரோவா வில்லனா?"
"உங்களுக்கு ஹீரோ, என் கணவரா ஜீரோ" என்றாள் பானு.
ஒன்றிரண்டு மாதங்கள் செய்வாள் பிறகு அலுத்து விடும் என்றெண்ணிய பிரகாஷுக்கு
ஆச்சிரியமூட்டும் விதமாக முழு மூச்சுடன் தொழிலில் ஈடுபட்டாள் பானு. வீட்டில் சில சவுகரியக் குறைவு
ஏற்பட்டாலும் தன்னுடைய கடமையை செவ்வனவே செய்தாள். ஆனால் அலுத்துக் களைத்து அடித்துப்
போட்டாற்போல் உறங்கும் மனைவியைப் பார்க்க பிரகாஷுக்கு பரிதாபம் தோன்றியது. அதே சமயம்
ஒவ்வொரு நாளும் அவளது ஒவ்வொரு திறமையும் அவன் கண்ணுக்குத் தென்பட்டன.
உடம்பு சரியில்லாமல் நான்கு நாட்கள் வீட்டில் இருந்தான் பிரகாஷ்.
“நீங்க சொல்றது எல்லாம் சரி… ஆனா நாலாயிரம்னு யாரோ தப்பான தகவல் தந்திருக்காங்க. நாங்க
உணவுக்குத் தனியா பணம் வாங்குறோம். சில குழந்தைகளுக்கு அம்மாக்களே வீட்டில் உணவு தயார்
செய்துத் தந்துடுவாங்க. டயாப்பர் தந்துடுவாங்க. அதனால அதுக்கெல்லாம் அவங்ககிட்ட பணம்
வாங்குறதில்லை. உங்க குழந்தையை ராத்திரி எட்டு மணி வரைக்கும் யாரவது ஒருத்தர் தங்கிப்
பாத்துக்கணும். சோ நான் சொன்ன தொகை மிக நியாயமானதுதான். இந்த விண்ணப்பப் படிவத்தை
எடுத்துட்டுப் போங்க. நாலு இடத்தில் விசாரிச்சுட்டு திருப்தியானவுடனே சேருங்க. இங்க சேர்கிறதா
இருந்தா மறக்காம உங்க குழந்தைக்கு உணவு அலர்ஜி, குடும்ப மருத்துவர் போன் நம்பர். இதெல்லாம்
மறக்காம நிரப்பிக் கொண்டுவாங்க” என்றாள் பானு அந்தப் பெண்மணியிடம்.
வரவேற்பறையில் அமர்ந்து நடந்ததை கவனித்த பிரகாஷுக்கு பானுப்ரியாவின் மறுபக்கத்தை
வியப்பளித்தது. “என்னடி இவ்வளவு கண்டிப்பா பேசுற… “ என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்
“இந்த அசடுக்கு ஏமாற மட்டும்தான் தெரியும்னு நெனச்சிங்களா” என்று கேள்வி கேட்டாள்.
மேலும் தொடர முடியாது ரமா பப்லுவை அழைத்துச் செல்ல நுழைந்தாள்.
“நன்றி ரமா… உங்க சிபாரிசால் ஒருத்தங்க குழந்தையை சேர்க்க வந்திருந்தாங்க… நீங்க தந்த அதே
கட்டணத்தைத் தான் தருவேன்னு வாதாடுனாங்க. இந்த டேகேரில் என் தோழிகளும் சமமான
பங்குதாரர்கள். உங்களுக்கும் பப்லுவுக்கும் மட்டும்தான் ஸ்பெஷலா பீஸ் கம்மி பண்ணிருக்கோம். உங்க
சிபாரிசில் வரும் எல்லாருக்கும் கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை. இவங்க இப்படி கேட்கிறதால்
அடுத்த வருடம் உங்களோட கட்டணத் தள்ளுபடியையும் ரத்து செய்ய வாய்ப்பிருக்கு” என்று
இனிமையான குரலில் அவளைக் கண்டித்தாள்.
‘உன் சிபாரிசுக்கு நன்றி, உனக்காக போனாப் போகுதுன்னு கம்மியாப் பணம் வாங்குறேன். அதே
பணத்தை உன் பிரெண்டு கிட்டயும் வாங்க முடியாது. இப்படி ஊர் முழுசும் பீஸ் பத்தி பேசிட்டு
இருந்தேன்னா அடுத்த வருஷம் உன் கட்டணத்தையும் அதிகப்படுத்திருவேன்’ இதை எவ்வளவு அழகாக
அந்தப் பெண்ணின் மனம் புண்படாத விதமாக சொல்கிறாள். மனைவியை முதல் முறையாக
மரியாதையாய் பார்த்தான் பிரகாஷ்.
சாப்பாட்டினை எடுத்து வைத்து சாப்பிட கணவனை அழைத்தாள் பானு. அவளது கைகளைப் பிடித்து
அமரவைத்தவன் “பானு நீ ரொம்ப அறிவாளிடி. உன்னை வீட்டுக்குள்ள அடைச்சு வச்சு
அசடாக்கிட்டேன். உன்னை நான் சரியான பாதையில் செலுத்தல. உனக்கு நல்ல கணவனாவும்
இல்லை. இப்ப சொல்லு… உனக்கு நான் என்ன செய்யணும்…”

புன்னகைத்தாள் பானு “குழந்தைகள் பராமரிப்பு தொடர்பா ஒரு கோர்ஸ் படிக்கணும். அந்த ஒரு வாரமும்
பாமாவையும் ஷ்யாமாவையும் பாத்துக்கிறிங்களா”
பாதியாய் எடை குறைந்து, தன்னம்பிக்கையால் மின்னிய மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன்
“கண்டிப்பா” என்றான். அவனது பார்வை மாறுவதைக் கண்ட பானுப்ரியா… “எனக்கு தூக்கம் வருது”
என எழுந்து சென்று விட்டாள்.
“பிள்ளைக மேல காமிக்கிற அக்கறை என் மேல இல்ல”
முன்பு கணவனது உரிமையைத் தானாக எடுத்துக் கொள்ளும் பிரகாஷுக்கு இப்போது கேட்கக் கூடத்
தயக்கமாக இருந்தது. அவளைத் திட்டுவது கூட அறவே நின்று விட்டது. சொல்லப் போனால் அவனை
விட அவள் பிசியாகிவிட்டாள். இவளைப் பார்த்தால் வேறு யாரோ ஒரு பெண்மணி போல்
தோன்றினாள்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும் இதைப் போலத்தான் பிரகாஷுக்கும். போன முறை பூர்வஜாவுடன்
கழித்த நாட்கள் அவள் மேலிருந்த மயக்கத்தை ஓரளவு விரட்டியது எனலாம். அவளுக்கு
அவன்மேலிருந்த வெறியும், பானுவின் மேலிருந்த பொறாமையும் பிரகாஷுக்கு நன்றாகவே புரிந்தது.
பெங்களூர் பயணத்தின் போது நடந்த சம்பவத்தில் பிரகாஷின் மோகம் நன்றாகவே தெளிந்தது.
பெங்களூர் பயணத்தின் போது அழகுக்கலை சம்மந்தப்பட்ட படிப்புக்காக பூர்வஜாவின் மகள்
சுப்ரஜாவுக்கு புகழ் பெற்ற கல்வி நிலையத்தில் இரண்டு லட்சம் பணம் கட்டி இடம் வாங்கித் தந்தான்.
சுப்ரஜாவுக்குப் படிப்பு சுட்டுப் போட்டாலும் வரவில்லை. பத்தாவது முடிக்கவே பதினேழு
வயதாகிவிட்டது. பனிரெண்டாவது படிக்க முடியாது அழகுக்கலை படித்துவிட்டு பியூட்டி பார்லர்
ஆரம்பிக்கப் போகிறேன் என்று சண்டை போட்டாள். அந்தக் கோர்ஸ் மகளை சேர்க்க வேண்டும்
என்பதற்காகத்தான் பூர்வஜா பெங்களூர் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்தது. அங்கு இன்பமாகக்
கழித்த பொழுதுகள், லட்சக்கணக்கில் வாரி இறைக்கப் பட்ட பணம் ஆகியவை பூர்வஜாவுக்கு
பிரகாஷின் வாழ்க்கையில் தான் மட்டும்தான் எல்லாம் என்ற உறுதியான எண்ணத்தைத் தந்தது.
பானுவையும் குடும்பத்தையும் மறக்கடித்து மயக்கத்தில் ஆழ்த்தி விட்டதாகவே நம்பினாள்.
மயக்கத்தைப் பயன்படுத்தி பானுவை டைவர்ஸ் செய்துவிட்டுத் தன்னை மணந்து கொள்ளுமாறு
நேரடியாகவே வற்புற்த்த ஆரம்பித்தாள்.
“உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியல. உங்க கூடவே நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.
பானுதான் அதுக்குத் தடையா இருக்கா… அவ உங்களுக்கு ஏத்தவ கிடையாது பிரகாஷ்… பேசாம
அவளை விவாகரத்து செய்துடுங்க… நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்”
திடுக்கிட்டு எழுந்தான் பிரகாஷ் “ பூர்வஜா நடக்குற கதையா பேசு”
“ஏன் நடக்காது… எல்லாம் விவாகரத்து கொடுப்பா… அதுக்கு முதல் படியா, நீங்க அவகிட்ட ஒவ்வொரு
செயல்லயும் அவள் ஒரு மக்கு, ஒண்ணுக்கும் ப்ரோஜனமில்லாதவன்னு காமிங்க. அவளே உங்களுக்குத்
தான் மேட்ச் இல்லைன்னு நினைக்கணும். அப்பறம் ஒரு நாள் நானே உங்க வீட்டுக்கு வந்துடுவேன்.
நம்ம உறவை நான் அவகிட்ட சொல்லி டைவேர்ஸ்க்கு சம்மதிக்க சொல்லுவேன். அப்படியும் சம்மதிக்க
மாட்டேன்னு அடம் பிடிச்சா காசு பணம் ஒரு பைசா அவளுக்குத் தரக் கூடாது. அஞ்சு பைசா சம்பாதிக்க
வழியில்லாதவ, அவளுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பாட்டுக்கு என்ன செய்வா? வேற வழியில்லாம
பொறந்த வீட்டுக்கு வண்டியைக் கட்டுவா… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்”
பிரகாஷ் எனும் தகப்பனை விழித்தெழச் செய்தது தெரியாமல் தொடர்ந்தாள். அப்பப்பா
ஆசைநாயகிக்கெல்லாம் தங்களது இருள் உறவின் மேல் எவ்வளவு நம்பிக்கை. இருளில் தொடங்கி
கரைந்து வெளிச்சத்தில் கூசிப் போகும் உறவுக்கே இவ்வளவு உரிமை இருந்தால், மனைவிக்கு எவ்வளவு
உரிமை இருக்கும். அவன் வாரிசுக்கு சமூகத்திலும் அவன் இதயத்திலும் எந்த மாதிரியான இடம்
இருக்கும்.
சிகிரெட்டை வாயில் பொருத்திக் கொண்டவன் “என் குழந்தைங்க படிப்பு”

“கிராமத்தில் ஸ்கூல் எல்லாம் ப்ரீதான். மாசம் அஞ்சாயிரமோ பத்தாயிரமோ அனுப்பிடலாம். அப்பறம்
பொண்ணுங்களுக்குக் கல்யாண வயசு வந்ததும் யாரவது சொந்தக்காரப் பையனைப் பாத்துக்
கல்யாணம் செய்து வச்சுடலாம்”
“ஆமாம் கிராமத்து ஸ்கூல்ல மதியஉணவு உண்டு. அந்தக் காசு மிச்சம்தான். அப்பறம் வளர்ந்தவுடனே
சொந்தக்காரப் பையன்னா கம்மியா எதையாவது போட்டுத் துரத்தி விட்டுடலாம்”
“பானுவோட அண்ணனுக்கே ரெண்டு மகன் இருக்காங்கள்ள…” எடுத்துக் கொடுத்தாள்.
பானுவின் அண்ணன் மகன்கள் இருவரும் படிப்பு வராமல் எட்டாவதோடு பள்ளிக்கு டாட்டா
காட்டிவிட்டார்கள். ஒருவன் மாடுகளைப் பார்த்துக் கொள்கிறான். மற்றவன் ஊர் சுற்றுகிறான்.
இவர்கள் ப்ரபசர் பிரகாஷின் மருமகன்கள். பத்து வயது கூட நிரம்பாத பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை
பார்த்திருக்கிறாள். பத்தாவதில் பத்து கோட்டடித்த சுப்ரஜாவுக்கு இவன் தகப்பன் ஸ்தானத்தில் நின்று
கல்லூரியில் இடம் வாங்கித் தரவேண்டும். பெற்றோர் செய்த வினை பிள்ளைகளைச் சேரும். நான்
பாதை மாறியது என் மக்களின் வாழ்க்கைக்கா கொள்ளி வைப்பது? இவளிடம் அந்த அளவுக்கு மயங்கி
இருப்பதாய் நினைக்கிறாளா
“என் வீடு கூட பானு நகையை முன்பணமா கட்டித்தான் வாங்கினது. அவளை வீட்டை விட்டுத் துரத்தி
விட சொல்லுற…” அவள் மனதில் புதைந்திருக்கும் வக்கிரத்தை வெளிக் கொண்டுவந்து, அவளைப் பற்றி
முழுவதுமாகப் புரிந்துக் கொள்ள பிரகாஷ் முயற்சி செய்வது புரியாமல் மேலே பேசினாள்
“அதெல்லாம் தகுதிக்கு மீறின விஷயத்தை அடைய ஆசைப்பட்டதுக்கு அவ கொடுத்த விலை. அதுக்காக
நம்ம நன்றிக் கடன் படணும்னு அவசியம் கிடையாது”
“உன் கணவன் உன்னைக் கல்யாணம் செய்துக்க வரதட்சணை தந்தான்னு பானு சொல்லிருக்கா. அந்த
மாதிரியா…” இருளில் பிரகாஷின் முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளைப் பார்க்க முடியாது போனது
பூர்வஜாவுக்கு.
“எக்சாட்லி… இங்க பாருங்க பிரகாஷ். கால்ல போடுற செருப்பு கூட அளவு சரியில்லைன்னா பிரச்சனை
தருது. அப்ப சரியான அலைவரிசைல இல்லாதவங்க வாழ்க்கைல இணைஞ்சா ஒவ்வொரு நொடியும்
நரகம்தான். நான் அதை உணர்ந்துதான் விலகிட்டேன். அதனாலதான் எனக்குப் பொருத்தமான
அழகோடையும் தகுதியோடையும் நீங்க கிடைச்சிங்க… “
“அப்ப என்னை விட்டு விலகினா பானுவுக்கும் உனக்குக் கிடைச்ச மாதிரியே அவளைப் புரிஞ்சு
கிட்டவன் கிடைப்பான்னு சொல்ல வர்ற”
“அவளுக்கா… அவளுக்கு என்ன தகுதியிருக்கு அதுக்குப் பொருத்தமா ஆள் கிடைக்க… “
குழந்தைகளை விரட்ட சொன்னது பிரகாஷுக்கு கண்மண் தெரியாத கோவத்தை உண்டாக்கியிருந்தது.
அப்பா அப்பா என அவன் காலை சுத்தும் ஷ்யாமாவையும் பாமாவையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்டு,
இவளையும் இவ மகளையும் கூட்டிட்டு வந்து உக்கார வைக்கணுமா. மனைவிக்குத் துரோகம்
செய்தவனால் குழந்தைகளை நிர்க்கதியாய் நினைத்தே பார்க்க முடியவில்லை. யாரு கொடுத்த
தைரியத்தில் இந்த மாதிரி பேசுறா… எல்லாம் என்னால், என் சபலத்தால்… பூர்வஜாவின் வார்த்தைகளே
அவர்களது உறவுக்குத் தீ வைத்தது.
“என்ன தகுதி இல்லை பூர்வஜா…” என்றான் உஷ்ணக் குரலில்.
“அது…”
“உன்னை விட அதிகமாவே படிச்சவ, அவளுக்கு என்ன பண்பில்லையா, குழந்தைகளை சரியா
வளக்கலையா, இல்லை பெரிய குடும்பத்தில் பிறக்கலையா…

அடுத்தவ புருஷனை விரட்டி விரட்டி வளைச்சுப் போட்ட நீ… என் மனைவியோட தகுதியைப் பத்திப்
பேசக் கூடாது.
அவளுக்குத் தகுதி இல்லைதான். என்னை மாதிரி சபல புத்திக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டு தகுதி
குறைஞ்சுடுச்சு. உன்னை மாதிரி நம்பிக்கை துரோகியை நம்பினத்தில் சுத்தமா தகுதி போயிருச்சு.
உன் பொண்ணு படிக்க லட்சக்கணக்கா பீஸ் கட்டணும். ஆனா என் பிள்ளைங்களை வீட்டை விட்டு
வெளிய தொரத்தணும். மனசெல்லாம் விஷமாடி உனக்கு.
உன் கூட இருக்குற தொடர்புக்குத்தான் அப்பப்ப பணம் தந்து கழிச்சுடுறேன். உன் தகுதி இதுதான்.
இந்த அசிங்கத்துக்கு தெய்வீகக் காதல்ன்னு சொல்லிக் காதலைக் கொச்சை படுத்தாதே.
இன்னொரு வார்த்தை என் குடும்பத்தைப் பத்திப் பேசின… உன்னை ஒழிச்சுக் கட்டிருவேன்
ஜாக்கிரதை”
உடனே கிளம்பிவிட்டான். “எப்ப இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்துச்சோ இனிமே நம்ம தொடர்பு நீடிக்க
வேண்டாம்”
திரும்பிக் கூடப் பார்க்காமல் பஸ் ஏறினான் பிரகாஷ்.