வார்த்தை தவறிவிட்டாய் 15

வார்த்தை தவறிவிட்டாய் 15
0

அத்யாயம் – 15

இரவு சுவர்கோழியின் கூப்பாட்டையும் கடிகாரத்தின் டிக் டிக் சத்தத்தையும் தவிர வேறில்லை. அதற்கு
ஈடாக பிரகாஷின் மனசாட்சி குறை கூறியது. எவ்வளவு தைரியம் இந்த பூர்வஜாவுக்கு? எல்லாருக்கும்
முன்னாடி என் மனைவியைப் பார்த்து ஆயான்னு சொல்லுவா? எல்லாம் நான் தந்த இடம். அப்பறம்
என் பேச்சால நடந்த நிகழ்ச்சியை சரி செய்றதுக்குள்ள பெரும்பாடா போயிடுச்சு.

குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு ஹாலில் இறைந்து கிடந்த பொருட்களை ஒதுங்க வைத்தாள்
பானு.
“இதுக்காகத்தான் உனக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேன்” கண்டிப்பான குரலில் பேசிய
பிரகாஷை நிமிர்ந்து பார்த்தாள் பானுப்ரியா.
“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றிங்களா”
“எவளோ ஒருத்தி உன்னை ஆயான்னு கிண்டல் பண்ணுறா… நீ தேர்ந்தெடுத்த தொழில் சரியில்லை”
“இப்பதான் கொஞ்ச காலமா சரியான முடிவுகளை எடுத்துட்டு வரேன்”
“என்னடி சரியான முடிவெடுத்திருக்க… உனக்கும் உன் பிரெண்ட்ஸ்க்கும் மிஞ்சி மிஞ்சிப் போனா இதுல
மாசம் பதினஞ்சாயிரம் கையில் நிக்குமா? இதுக்கு மூணு பேரும் மாங்கு மாங்குன்னு உழைக்கிறிங்க”
“நாங்க மெதுவா வளர்வதைப் பத்திக் கவலைப் படல. ஆனா இதே இடத்தில் தேங்கிடாம
இருக்கணும்னு உறுதியா இருக்கோம்”
“சொன்னாக் கேளு பானு. நான் வெளிநாட்டில் இருக்கும்போது உனக்கும் ஒரு மாற்றம்
தேவைன்னுதான் இந்த டேகேர் ஆரம்பிக்கவே சம்மதிச்சேன். இனிமே எனக்கு சம்பளம் ரெண்டு
மடங்காகும். உன் வருமானத்தையும் சேர்த்து சம்பாதிப்பேன்”
“அது உங்க சம்பாத்தியம். உங்களோட சாதனை. இது என்னால முடிஞ்சது”
கோவத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாகப் பேசினான் “ அதென்ன என் சம்பாத்தியம் உன்
சம்பாத்தியம்னு… இத்தனை நாள்ல சம்பாதிச்சியோ இல்லையோ நல்லா வாய் பேசக் கத்துகிட்டிருக்க.
நான் சொல்றதைக் கொஞ்சம் காதைத் திறந்து வச்சுக் கேளு. நான் வேலை சம்பந்தமா மறுபடியும்
வெளிநாட்டுக்குப் போக வேண்டியது வரலாம். அங்க ரெண்டு மூணு வருஷம் தங்க வேண்டி
இருக்கலாம். அந்த சமயத்தில் கூட வர முடியாம நீ இப்படி ஒரு பிசினெஸ்ஸில் மாட்டிட்டு இருந்தா
சரிபட்டு வருமா?”
“எந்த நாட்டுக்குப் போனாலும் நீங்க மட்டும் போயிட்டு வாங்க. பழகின ஊர் தான் எனக்குக்
குழந்தைகளை வளர்க்க வசதி. நான் இங்கதான் இருப்பேன். என் பிசினெசை கவனிப்பேன்”
பிரகாஷின் வெளிநாட்டு வாழ்க்கை அஸ்திரமும் பலனளிக்காது போய்விட்டது. “என்ன பெரிய
பிஸினெஸ்… நாலு குழந்தைகளை மேய்க்கிறது ஒரு வேலையா… “ கோவத்தைத் தனித்துக்
கொண்டவன் இறைஞ்சும் குரலில் சொன்னான் “நீ சம்பாதிக்கிற பணத்தை இனிமே பாக்கெட் மணியா
எடுத்துத் தனியா தந்துடுறேன். உனக்கே உனக்குன்னு வச்சுக்கோ. ஆனா இந்த பிசினெஸ் வேண்டாம்.
பாரு அந்த பூர்வஜா கூட உன்னை ஆயான்னு கிண்டல் பண்றா… எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்தது
தெரியுமா?”
சோபாவைப் பிடித்துக் கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்தாள் பானு. அவள் முகத்தில்
உணர்வுகள் மாறி மாறி வந்து போயின.

“அவளை மாதிரி ஒரு தரங்கெட்டவ சொன்னதை நினைச்சு நான் ஏன் கவலைப்படணும்”
திகைப்பில் முணுமுணுத்தான் “பானு”
“மேய்க்கிறதுக்கு குழந்தைகள் என்ன ஆடா இல்லை மாடா? குழந்தைகளைப் பராமரிக்கிறது
உங்களுக்கு சுலபமான வேலையா தெரியுதா? இங்க ரூம்ல அடிச்சு சாப்பாடு போட்டு, டிவி பாக்க விட்டு
அனுப்புறோம்னா நினைக்கிறிங்க? தினமும் வீட்டில் செய்த சிறுதானிய உணவுகளைத் திம்பண்டமா
தரேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் சொல்லித் தரோம். வெள்ளிக்கிழமை சாவித்திரி மாமி
சுலோகம் கிளாஸ் எடுக்குறாங்க. திங்கள் நேத்ரா டான்ஸ் கிளாஸ் சொல்லித்தரா. செவ்வாய்
நூர்ஜஹான் கிராப்ட் சொல்லித்தரா. புதன் கராத்தே கிளாஸ், வியாழன் மாரல் வகுப்பு இப்ராஹிம்
அங்கிள் சொல்லித்தரார். இதைத்தவிர தினமும் கால்மணி நேரம் யோகா கிளாஸ் சதாசிவம் மாமா
மேற்ப்பார்வையில் குழந்தைகள் கண்டிப்பா பண்ணணும்னு ஒரு ரூலே இருக்கு. இப்ப நான்
சம்பாதிக்கிறது கையளவு இருக்கலாம். ஆனால் எங்ககிட்ட வர குழந்தைகளுக்கு ஒரு நல்ல
அடித்தளத்தை போடுறோம். கல்வி வியாபரமாகிட்ட இந்த காலத்தில் எங்கள் வயத்து பிழைப்புக்காக
செய்யும் தொழிலும் நன்மையைத் தர்றோம். எனக்கு சோறு போடுற தொழிலைப் பத்தி யாரு கேவலமா
பேசினாலும் என்னால பொறுத்துக்க முடியாது. அவ கேவலமா பேசினதுக்கு என் வேலை
காரணமில்லை. நீங்க தந்த இடம்தான் காரணம்.”
பானுப்ரியா இவ்வளவு நீளமாகப் பேசிப் பிரகாஷ் கேட்டதில்லை. “ஏன் இவ்வளவு டென்சன் ஆற
பானு”
“நானா டென்சனாறேனா… கட்டின கணவன், நான் சகோதரியா மதிச்சவளோட ஜோடி போட்டு
சுத்துறதைக் கண்ணால பார்த்தும் ஏன்னு உங்க சட்டையைப் பிடிச்சு உலுக்காம வந்தேன் பாருங்க…
எனக்கு டென்சன் ஜாஸ்திதான். இன்னி வரைக்கும் மனசுக்குள்ள தினம் தினம் செத்து பொம்மையா
நடமாடிட்டு இருக்கேன் பாருங்க… நான் ஆத்திரக்காரிதான்”
“பா…னு”
“ஆமாம் பானுதான். ஆனா உங்க பொண்டாட்டி பானுப்ரியா எப்ப உங்க துரோகத்தை பார்த்தாளோ
அப்பவே செத்துட்டா”
இதற்குள் சுதாரித்திருந்தான் பிரகாஷ் “நீ பார்த்தது எதுவும் பொய்யில்லை. நான் செய்த துரோகத்தை
சாரின்னு ஒரு வார்த்தையால் சரி படுத்திட முடியாது. இருந்தாலும் நான் கேட்டே ஆகணும். ஒரு
சபலத்தில் தப்பு பண்ணிட்டேன். பூர்வஜா மாதிரி ஒருத்தி என் மனசைக் கலைக்க முயற்சி
செய்திருந்தாலும் நான் சலனப் பட்டிருக்கக் கூடாது. அந்த சமயத்தில் என் அறிவு படிப்பு எல்லாம்
எனக்குத் தெளிவைத்தரல. இந்த வயசிலும் என் பின்னாடி ஒருத்தி என் பார்வைக்காக சுத்திட்டு
இருக்கா, நான் என்ன சொன்னாலும் செய்வான்னு ஒரு கிக். அது தந்த கர்வம் என் கண்ணை
மறைச்சுடுச்சு. விழிப்பு தட்டினப்ப எங்க உறவு ரொம்ப தூரம் போயிடுச்சு. அவ உன்னை டைவேர்ஸ்
செய்துட்டு அவளைக் கல்யாணம் செய்துக்க வற்புற்தினப்பத்தான் சூழ்நிலையோட பயங்கரம் புரிஞ்சது.
பெங்களூர் கல்லூரியில் அவளோட பொண்ணுக்கு படிக்க பீஸ் கட்டிட்டு அப்படியே என் தொடர்புக்கு
முடிவு கட்டிட்டு வந்தேன்”
அவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள் பானு
“எவ்வளவு அழகா உங்கத் தவறை மறைக்க நினைக்கிறிங்க… முட்டாள் பொண்டாட்டியை சுலபமா
ஏமாத்திடலாம்னு எண்ணம்… அந்த எண்ணம் தந்த தைரியம்…

நான் இப்படித்தான்… நீங்க அடிக்கடி குத்திக் காட்டுற மாதிரி கொஞ்சம்
அசடுதான். என்னோட குணம் தெரிஞ்சு வெறுத்தா கூட பரவல்ல. இல்லாத
புத்திசாலித்தனத்தை இருக்குற மாதிரி காமிச்சு என்னால வேஷம் போட
முடியாது. நம்ம மனசுக்கு நெருக்கமா இருக்கவங்க கிட்ட உன்னால நடிக்க
முடியுமா? என் அம்மாகிட்ட, அப்பாட்ட, என் குழந்தைங்ககிட்ட எப்படி என்னால
நடிக்க முடியாதோ அதே மாதிரி உங்க கிட்டயும் என்னால வேஷம் போட
முடியல.
நம்ம ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரங்க. எங்க குடும்பத்தை நல்லா தெரிஞ்சவர்
நீங்க. என்னைப் பத்தி கல்யாணத்துக்கு முன்னமே உங்களுக்கு கண்டிப்பா
தெரிஞ்சிருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்கு நான் பொருத்தமானவன்னு
கணிச்சிருப்பிங்க. அப்பயே பிடிக்கலைன்னு சொல்லிருந்தா நானும் வேற
யாரையாவது கட்டிருப்பேன். நீங்களும் உங்க மனசுக்கேத்த மகராசியா கல்யாணம்
செய்துட்டு சந்தோஷமா குடும்பம் நடத்திருக்கலாம். இதையெல்லாம் விட்டுட்டு,
ஊரார் முன்னாடி கூடவே இருப்பேன். கூடவே வருவேன்னு சத்தியம்
செஞ்சிங்களே. இப்ப வார்த்தை தவறிட்டிங்களே.
நீங்க எவ்வளவோ படிச்சுருக்கலாம், பெரிய பட்டமெல்லாம் வாங்கிருக்கலாம்.
ஆனா ஒரு சாதாரணமான ஆள் கூட கொடுத்த வாக்கைக் காப்பாத்துற
நாணயஸ்த்தனா இருக்கான். நீங்க… “ கைகளால் காற்றில் பெரிய பூஜ்ஜியத்தை
வரைந்துக் காட்டினாள்.
விக்கித்து நின்ற பிரகாஷை சட்டை செய்யாமல் எழுந்து சமையலறையில்
கழுவிக் கவிழ்த்திருந்த பாத்திரங்களை அடுக்கி வைத்தாள்.
என்று பிரகாஷை பூர்வஜாவுடன் பார்த்தாளோ அன்றிலிருந்து அவனை விலக்கி
இருக்கிறாள். அவனை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி தனக்கென்று ஒரு
வட்டம் போட்டு வாழ்கிறாள். பூர்வஜாவை முற்றிலும் தவிர்க்க எண்ணி
வெளிநாடு சென்ற பிரகாஷ் தன் மனைவி தன்னைவிட்டு வெகு தொலைவு
சென்றதை உணராமலேயே போய்விட்டான். தன் நிலைமையை எண்ணித்
தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
சமையலறையில் லைட்டை ஆப் செய்துவிட்டு ஹாலில் தனக்கு விரித்திருந்த
பாயில் அமர்ந்தாள் அவன் மனைவி. தூங்குவதற்கு முன் வழக்கம் போல்
தெய்வத்தை வணங்கினாள். திருத்தமான அந்த முகத்தில் தெரிந்த தேஜஸைக்
கண்டு ஒரு அடி தள்ளி மண்டியிட்டு அவளருகே அமர்ந்தான். கண்ணைத் திறந்த
பானுவின் முன் அவனது முகம் கலக்கத்தோடு தெரிந்தது.
“பானு… பெரிய தப்பு பண்ணிட்டேன்… ஆனா இனிமே சத்தியமா இந்த மாதிரி
தவறு நடக்காது. நீ என்னை விட்டுப் போயிட மாட்டியே”

விரக்தியாய் ஒரு புன்னைகையை சிந்தியவள் “நான் எங்க போவேன். எனக்கு
எங்க போக்கிடம் இருக்கு. இவளுக்கு சப்போர்ட் இல்லை… நம்மளப் பத்தித்
தெரிஞ்சா அதிகபட்சம் என்ன செய்வா ஓ’ன்னு அழுவா… கைவிட்டுடாதிங்கன்னு
கெஞ்சுவா… இதையெல்லாம் சுலபமா சமாளிச்சுடலாம்ன்னுங்குற திமிர்லதானே
இப்படி ஒரு வேலையை செய்துட்டு வந்திங்க”
தலை குனிந்தான். சில நிமிடங்கள் மயான அமைதி. சற்று நேரம் கழித்துக்
கேட்டான் “என் கூடவே இருப்பல்ல…”
தீர்மானமாய் அவனைப் பார்த்தாள். “ நான் உங்க கூடவேதான் இருப்பேன். ஆனா
இந்த வீட்டுலையேதான் இருப்பேன். இந்த வீட்டை வாங்க எவ்வளவோ
செஞ்சிருக்கேன். நான் ஏன் இதை விட்டு வெளிய போய் கஷ்டப்படணும்? ஆனா
உங்ககூட வெளிநாட்டுக்கெல்லாம் வர மாட்டேன். சமையல், சாப்பாடு, துவைச்சுப்
போடுறதுன்னு உங்களுக்குத் தேவையானது எல்லாத்தையும் கடைசி வரை
நான்தான் செய்வேன். ஏன்னா நம்ம கல்யாணத்தப்ப நான் உங்க கூடவே
இருக்கேன்னு வாக்களிச்சிருக்கேன்.
நம்ம ரெண்டு பேரும் காதலைப் பகிர்ந்துக்கலாம், உணவைப் பகிர்ந்துக்கலாம்,
ரசனையை பகிர்ந்துக்கலாம், நம்மளோட பலத்தையும் பலவீனத்தையும்
அறிந்சுட்டு ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கலாம். இன்னைல இருந்து நம்ம
ரெண்டு பேரும் இரண்டு உடல்களா இருந்தாலும் ஒரே மனசா மாறிட்டோம்.
நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்து குழந்தைகளைப் பெத்துக்கலாம், சகல
சௌபாக்யத்தையும் அடையலாம்னு சத்தியம் செய்துட்டு நீங்க வேணும்னா
வார்த்தை தவறலாம் ஆனா நான் வார்த்தை தவற மாட்டேன்.
எப்ப உங்களையும் பூர்வஜாவையும் அவ்வளவு நெருக்கமா பார்த்தேனோ அப்பயே
நான் செத்துட்டேன். இப்ப இங்க நிக்கிறது வெறும் கூடுதான். உணர்ச்சிகள்
இல்லாத மரத்துப் போனக் கூடு. உங்க துரோகத்தைப் பாத்ததிலிருந்து உங்க
மேல எனக்கிருந்த நம்பிக்கை போயிடுச்சு. கூடவே இருக்கேன்னு ஆயிரம் பேர்
முன்னாடி அக்கினி சாட்சியா வாக்களிச்சுட்டு அதை அப்படியே மறந்த உங்களை
நானும் என் குழந்தைகளும் எப்படி நம்புறது?
புருஷன் கைவிட்டா, அழகான பூர்வஜாவக் காப்பாத்த உங்களை மாதிரி ஆண்கள்
நாக்கை தொங்கப் போட்டுட்டு நிப்பிங்க. ஆனா என்ன மாதிரி அசடுங்க
புருஷனைப் பிரிஞ்சா, அம்மா வீட்டுல கூட படியேற விட மாட்டாங்க.
குடும்பம்ன்னு சொல்லுற கூட்டில் இருந்து முதல் அடியை எடுத்து வைக்கத்தான்
தைரியம் தேவை. அந்த தைரியம் உங்களுக்கு வந்துடுச்சு. இனிமே உங்க
சுயநலத்துக்காக எங்களை உதறக் கூடத் தயங்க மாட்டிங்க. அப்படி
உதறிட்டிங்கன்னா என் ரெண்டு பொண்ணுங்களை வச்சுட்டு நான் எங்க போய்
நிப்பேன். அதைப் பத்தி மட்டும்தான் யோசிச்சேன். நாய் படாதபாடு பட்டு என்னை

ஸ்திரப்படுத்திக்கிட்டேன். இப்ப நீங்க விட்டுட்டு போனா கூட நாங்க மானத்தோட
பொழைச்சுப்போம்"
விக்கித்துப் பார்த்தான் சந்திரப் பிரகாஷ். தான் அசட்டுப் பட்டம் கட்டி ஏளனமாய்
பேசும் மனைவி எவ்வளவு மனோதைரியத்துடன் வாழ்க்கையை எதிர்த்துப்
போரிட்டிருக்கிறாள். பூர்வஜா மேல் இரக்கம் என்று சொல்லியே எனது தகாத
உறவுக்கு சப்பைகட்டு கட்டினேனே. எனது சபலம் என் மனைவியை இன்னொரு
பூர்வஜாவாய் மாற்றத் துணிந்ததே. நினைக்கும்போதே அருவருப்பால் கூசியது
அவன் மனம். அவன் மனைவி அறிவு மட்டாய் இருக்கலாம், கண்ணை சுண்டி
இழுக்கும் அழகு இல்லாதவளாய் இருக்கலாம். ஆனால் எப்பேர்பட்ட நிலையிலும்
அடுத்தவளின் கணவனுக்குத் தூண்டில் போடும் ஈன புத்தி படைத்தவளில்லை.
அவன் சபல புத்தியுடைவன்தான் ஆனால் அவன் பானுவோ மாசில்லாத பொன்.
" என் அன்பையும் காதலையும் இழந்தது உங்களுக்குப் பெருசில்லை. ஏன்னா
பணமும் பதவியும் இருக்குற உங்களுக்குக் காதலை அள்ளித்தர ஏராளமான
பூர்வஜாங்க இருக்காங்க. ஆனா உங்க வப்பாட்டியோட பொண்ணுக்குத் தத்துத்
தகப்பனா இருந்த நீங்க உங்க சொந்த பிள்ளைங்களுக்குத் தகப்பனா இருக்கத்
தவறிட்டிங்களே…
மோகம் உங்க கண்ணை மறைச்சது. என் கண்ணை திறந்துடுச்சு. சரி குப்பையை
கிளறினா நாத்தம் தான் மிஞ்சும். அதை பொறுத்துக்குற அவசியம் எனக்கில்லை.
நடக்கப் போறதை பேசலாமா… என்னால ஒரு வழித்துணையா உங்க கூட நிக்க
முடியுமே தவிர, என் காதலையோ நம்பிக்கையையோ உங்க மேல செலுத்த
முடியாது. சரியா சொல்லப்போனா அடுத்த வேளை சாப்பாடு நீங்கதான்
போடணும்னு நிலைமை வந்தா என் பிராணனே போய்டும். இழந்த காலத்தை
எப்படி திரும்பப் பெறப் போறீங்க. உங்க பொண்ணுங்க அன்பை எப்படி
மீட்டெடுக்கப் போறிங்க. என்கிட்டே வார்த்தை தவறின நீங்க, நம்ம குழந்தைகள்
உங்க மேல வச்சிருக்க நம்பிக்கையிலயாவது இடறாம இருங்க”
அசையாமல் அமர்ந்திருந்தான் பிரகாஷ். மனதில் அன்பை மட்டுமே சுமந்த அந்த
அழகுத் தாய் படுத்த ஐந்தாவது நிமிடம் உறங்கிவிட்டாள். குற்றமுள்ள நெஞ்சுடன்
அவளை வெறித்தபடி அமர்ந்திருத்த பிரகாஷ் தன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட
இமாலயப் பிளவை சரி செய்யும் வழி தெரியாமல் கல்லாய் உறைந்திருந்தான்.
மெரினாவின் ஆர்ப்பரிக்கும் ஓசையில் பாமாவும், ஷ்யாமாவும் விளையாடுவதை
பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தான் பிரகாஷ். தீபாவளிக்குப் புதுத் துணிகள் எடுக்க
மகள்களுடன் வந்தவன் அவர்கள் ஆசைப்பட்டதால் கடற்கரைக்கு அழைத்து
வந்திருந்தான். பானுப்ரியா மாலை பலகாரம் செய்ய வேண்டும் என்ற சாக்கினைச்
சொல்லி வீட்டிலேயே இருந்துவிட்டாள். தவிர்க்க முடியாத காரணமாயிருந்தால்
மட்டுமே பானு கணவனுடன் வெளியே செல்வாள். இப்போதும் அவர்களையே
தனக்கும் புடவையை வாங்கி வரும்படி சொல்லிவிட்டாள். ஒன்பதாம் வகுப்பு

படிக்கும் பெரியவளிடம் வம்பு வளர்த்தபடியே விளையாண்டாள் சின்னவள்
ஷ்யாமா.
“அப்பா சுண்டல் வேணும். மொளகா பஜ்ஜி வேணும்” என்று தொணத்தினாள்
ஷ்யாமா.
“வெளிய கண்டதை சாப்பிடாதே வயிறு கெட்டுடும்” எச்சரித்தாள் சத்யாபாமா.
“முன்னாடில்லாம் அம்மாகூட பீச் வருவோம்லப்பா… ஒவ்வொரு தடவையும்
ஒவ்வொரு பலகாரம் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க. நம்ம எல்லாரும்
கடலைலைல நனைஞ்சுட்டு, ஸ்வீட்,காரம் சாப்பிட்டுட்டு ட்ரெஸ் எல்லாம்
வாங்கிட்டு போவோமே…” நினைவுகளில் அமிழ்ந்தாள் ஷ்யாமா.
“இப்பல்லாம் ஏம்பா நம்ம குடும்பத்தோட வெளிய வரதே இல்ல.” தகப்பனைக்
கேட்டாள்.
“லூசு, அப்ப அம்மா ப்ரீயா இருந்தாங்க. எல்லா நேரத்தையும் நமக்காக
செலவளிச்சாங்க. இப்ப எவ்வளவு பிஸியா இருக்காங்க.
அப்ப கூட டிபன் செஞ்சுட்டு லேட்டா கிளம்புவாங்கள்ளப்பா. நீங்க அசடு
அசடுன்னு திட்டுவிங்களே. இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாங்கப்பா… நம்ம
அம்மாவா இதுன்னு ஆச்சிரியமா இருக்கு. பெருமையாவும் இருக்கு…” கண்களில்
ஆச்சிரியத்துடன் சொன்னாள் மூத்தவள் சத்யபாமா.
“போடி அந்த அசட்டு அம்மாவைத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. அவங்கதான்
எப்போதும் நம்ம கூடவே இருப்பாங்க. இவங்க எப்போதும் பிஸியா இருக்காங்க”
“அதுக்காக எப்போதும் அம்மா அப்பாட்ட திட்டு வாங்கிட்டே இருக்க முடியுமா…
நீங்க சொல்லுங்கப்பா… உங்களுக்கு எந்த அம்மாவைப் பிடிச்சிருக்கு”
“எனக்கு என் மனைவி எப்படி இருந்தாலும் பிடிக்கும்” என்று பதிலளித்தவனை
ஓவெனக் கத்திக் கிண்டல் செய்தனர் இருவரும்.
அவனுக்கும் அந்த அசட்டு மனைவி திரும்ப வேண்டும் என்று ஆசையாக
இருந்தது. பிரகாஷின் குரலிலேயே அவனது கோவத்தை கண்டு கொண்டு
சமாதனம் செய்யும் பானு, அவனது பரிசுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கும்
பானு. அவன் மேல் ஒவ்வொரு வினாடியும் அன்பைப் பொழியும் பானு இனிமேல்
திரும்ப வருவாளா என்று மகள்களைப் போலவே அவனுக்கும் ஏக்கமாய்
இருந்தது.
புது ஜவுளிகள் எடுத்தார்கள். பானுவுக்குப் பார்த்துப் பார்த்து மாம்பழ நிறத்தில்
அழகான பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்தான். குழந்தைகளின் மூடை சரி
செய்ய ராயர்கடையில் உணவு வாங்கித் தந்தான். பின் பானுவுக்கு பிடித்த உணவு
வகைகளை பார்சல் வாங்கினான்.

வீட்டில் அம்மாவிடம் துணிகளைக் கடைவிரித்தனர் மகள்கள். “நீயும்
வந்திருக்கலாம்மா”
“வேலை இருந்துச்சுடா… இன்னொருதரம் வரேன்” சமாதனப் படுத்தினாள் பானு,
அந்த இன்னொருதரம் இதுவரை வந்ததில்லை என்று மனதில் நினைத்தான்
பிரகாஷ். அவள் புடவையை எடுத்துக் கொண்டதே பெரிய சந்தோஷத்தைத்
தந்தது. அவர்கள் உறவில் ஏற்பட்ட விரிசலுக்குப் பின் அவனது அன்பளிப்புக்களை
நாசுக்காய் மறுத்துவிடுவாள். அதனால்தான் இந்த முறை மறுக்க முடியாமல்
குழந்தைகள் மூலமாய் கொடுத்தான். அவள் பெற்றுக் கொண்டதே அவன் மனதில்
சாரல் அடித்தது.
இரவு குழந்தைகள் உறங்கியதும், அறையிலிருந்து வெளியே வந்த பானு
பிரகாஷின் முன் நோட்டுக்களை எண்ணி வைத்தாள். சொல்லாமலேயே
புடவைக்கான பணம் என்று பிரகாஷுக்குத் தெரிந்தது. அடிபட்ட பார்வை
பார்த்தவன் அந்த இடத்தை விட்டு எழுந்தான்.
“இந்த பணத்தை நீங்க எடுத்துக்கலைன்னா எனக்கு சேலை வேண்டாம்” உறுதியாக
சொன்னாள்.
“உனக்கு சேலை வாங்கித் தரக் கூட எனக்கு உரிமையில்லையா”
ஆதங்கப்பட்டான்.
“இல்லை… “ என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு அவனை நேர்ப்பார்வை
பார்த்தாள்
உனக்கும் எனக்கும் இடையில்
விரிசலின்றி விசாலமாய் ஓர்
இடைவெளி
அது காற்றால் மட்டுமே நிரம்பட்டும்
வெஞ்சினம் கொண்ட கடுஞ்சொற்களால் வேண்டாம்
சொல்லால் கொல்லும் வித்தை
உன்னுடைமையாகவே இருக்கட்டும்
நெந்நீர் ஊற்றின் இடையேயும்
துளிர்க்கும் திறமை எனக்குண்டு
சொல்லாமல் சொல்லி சாதனைப் பெண்ணாய் நிற்கும் பானுப்பிரியாவின் நிமிர்வு கண்டு புன்னகை
புரிந்தான்.

“உன் சுயமரியாதையை மதிக்கிறேன். ஆனா நான் திரும்பத் திரும்ப உன் கிட்ட வந்துட்டேதான்
இருப்பேன். தப்பு செஞ்ச இந்த அசட்டுப் புருஷனுக்கு அவன் மனைவி திரும்ப வேணும். வார்த்தை
தவறின இந்தப் பொய்யனுக்கு பொண்டாட்டியோட அன்பு கொள்ளை கொள்ளையா வேணும்.
அதுக்காக விக்ரமாதித்தன் மாதிரி திரும்பத் திரும்ப முயற்சி செய்வேன்.”
வார்த்தை தவறியவனின் மன்னிப்பு ஏற்கப்படுமா? பிரகாஷுக்கு அவனது பானுக்குட்டியின் அன்பு
திரும்பக் கிடைக்குமா? முடிவைக் காலத்தின் கைகளில் ஒப்புவித்துவிட்டு உங்களைப் போல் நானும்
ஆவலுடன் காத்திருக்கிறேன்.