வார்த்தை தவறிவிட்டாய் 2

வார்த்தை தவறிவிட்டாய் 2
0

அத்யாயம் - 2

முக்கண்ணனின் நெற்றிக்கண்ணாய் ஒளிவீசிய ஆரத்தியில்
முத்து மூக்குத்தியும், ரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும், வைர
வைடூரியமும் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும்,
காதினில் கம்மலும் சந்தன அலங்காரத்தில் அருள் பாலித்த செந்நிற கையில்
பொன்நிறக் கங்கணமும், ஜெகமெல்லாம் ஒளிவிடும் முகமும் கொண்ட அத்தி
வரதனின் தங்கையவளின் சிவசக்தி ரூபத்தில் தன்னையே மறந்து கரைந்து
விட்டிருந்தாள் பானுப்ரியா.

மண்டபத்திலிருந்து கணீரென்று ஒலித்த உமையாளின் குரல் அவளை
நினைவுலகத்துக்கு கொண்டு வர, ஆரத்தியை ஒற்றிக் கொண்டு உமையாளின்
சொற்பொழிவைக் கேட்பதற்கு வாகாக மண்டபத்தின் ஓர் ஓரத்திலிருக்கும்
தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.
"இப்பல்லாம் காலைல கல்யாணம் பண்ணிக்கிறதும் சாயந்தரம் அதை
முறிச்சுக்குறதும் சாதாரணமா போயிடுச்சு. சாடிஸ்ட் கணவனையோ
மனைவியையோ கல்யாணம் பண்ணிட்டு, நிஜமாவே துன்பப்படுறவங்களுக்கு
விவாகரத்து பெரிய வரம்.
ஆனா சிலபேர் விவரம் புரியாம நடக்கும்போது மனசே பதறுது. கல்யாணதப்ப
ஏதோ மந்திரத்தை சொல்ல சொன்னாங்க, நாங்களும் அப்படியே திருப்பிச்
சொன்னோம், தாலி கட்டினோம், எல்லாரும் அட்சதை தூவினாங்கன்னு வெறும்
சடங்குகளை அனுசரிக்கிறதோட நிறுத்திக்கிறோம். அதோட அர்த்தத்தை
புரிஞ்சுக்க விரும்புறதில்லை.
நம்ம உச்சரிக்கிற மந்திரம் எல்லாம் வெறும் ஸ்லோகங்கள் இல்லை. அவை
எல்லாம் சத்தியங்கள்.
ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டிட்டு கூட்டிட்டு வரதை பெரிய தியாகம் செய்த
மாதிரி யாராவது சொன்னா எனக்கு சிரிப்புத்தான் வரும். உன்னைக் கல்யாணம்
செய்தவுடனே அவள் தன்னோட பேரை மாத்திக்கிறா. இனிமே அந்தப்பெண்
இன்னாரோட மகள்னோ, இவனோட தங்கைன்னோ அடையாளம் காமிக்கப்
படுறதில்லை. உன்னோட மனைவியாகத்தான் உலகத்தால் பாக்கப்படுறா.
அவ பொறந்து வளந்த வீட்டை மறந்துட்டு உன் வீட்டுக்கு வரணும். அம்மா,
அப்பா, உடன் பொறந்தவங்க எல்லாரும் இனிமே அவளுக்கு அன்னியர்தான்.
அவளோட அம்மாகூட உங்க ரெண்டு பேருக்கு மத்தில மூணாம் மனுஷிதான்.
சொல்லப்போனா இந்தத் திருமணத்தின் மூலமா தனி நபரா சுத்திட்டு இருந்த ஒரு
வாலிபனுக்கு குடும்பத் தலைவன்னு சமூகத்தில் மரியாதை கிடைக்குது. அந்தப்
பெண்ணுக்கு, முதலில் புகுந்த வீட்டு புது சொந்தங்களோட அனுசரிச்சுப்
பழகணும், பொறந்த வீட்டில் எவ்வளவு செல்லமா வளந்திருந்தாலும், உன் வீட்டில்
ஒரு மனைவியா, தாயா, மருமகளா, அண்ணியா இப்படி பலவிதமான
ரோல்களிலும் முகம் சுளிக்காம வேலை பாக்குறா.
அவ உன் குழந்தையை சுமக்குறா, பிரசவத்தில் உயிர் போகும் வேதனையைத்
தாங்குறா. அப்படிப் பிறக்கும் குழந்தைகள் கூட உன்னுடைய மகன் மகளாத்தான்
அடையாளம் காணப்படுறாங்க. கண்ணும் கருத்துமா பிள்ளைகளை வளர்த்து
ஆளாக்குறா. அவளோட அழகு இளமை சக்தி, சம்பாதிக்கிற மனைவியாயிருந்தா
பணம் எல்லாத்தையும் உனக்காகவும் உன் சந்ததிக்காகவும் செலவழிக்கிறா.

ஆனால் உங்க பேமிலி ட்ரீல ஆணுக்கு தரப்படுற இடம் பெண்ணுக்குத்
தரப்படுறதா. இல்லைன்னு தான் சொல்லணும்.
எங்கேயோ பொறந்து யாராலோ உனக்காக போஷிக்கப்பட்டு, தன்னோட
எல்லாத்தையும் உனக்கே தந்துட்டு ஒரு நாள் எரிஞ்சு ஒரு பிடி சாம்பலா மாறி
நம்ம கண்ணுல இருந்தும் நினைவில இருந்தும் மறைஞ்சுடுறா… இதில் யார்
யாருக்காக தியாகம் பண்ணுறான்னு சொல்லுங்க பாக்கலாம்.

சரி அதை விடுங்க, நம்ம பேசிட்டு இருந்த கல்யாணம் என்ற தலைப்பில்
தொடருவோம். இந்த காலத்தில் காதல் கல்யாணம் சகஜமாயிடுச்சு. ஆணும்
பெண்ணும் முன்னமே அறிமுகப் படுத்திக்கிறாங்க. ஆனா அந்த காலத்தில பாதி
பொண்ணுங்க கல்யாணத்தன்னைக்குத்தான் தாலி கட்டினவன் முகத்தையே
பாப்பாங்க. நீங்க அந்தக் காலத்தை சேர்ந்தவராயிருந்தா என் கேள்விக்கு பதில்
சொல்லுங்க பாக்கலாம். கல்யாணத்துக்கு முன்ன உங்களைப் பத்தி உங்க
மனைவிக்கு ஒண்ணுமே தெரியாது. அப்பறம் எதை நம்பி தாலி ஏறினதும் உங்க
கூட வந்தாங்க… உங்க மேல இருந்த ஒரு நம்பிக்கையின் பேரில்னு
வைச்சுப்போமே… அந்த நம்பிக்கை உங்க உத்தியோகத்திலோ, பத்து பேரை அடிச்சு
போடுற உங்க பலத்திலோ இல்லை பதவிசான உங்க குணத்திலோ வந்ததில்லை.
அதில்லாம வேறப்படி… அவங்க உங்க பின்னாடியே வந்தது நீங்க தந்த
வாக்குக்காகத் தான்…
எப்ப வாக்கு தந்தேன்னு திகைச்சு போய் பாக்காதிங்க. ஸ்துல சரீரம், சூட்சம
சரீரம், காரண சரீரம்ன்னு மூன்று விதமான சரீரங்கள் உண்டு. தாலில நீங்க
போடுற ஒவ்வொரு முடிச்சும் ஒவ்வொரு முடிச்சும் ஒவ்வொரு சரீரத்தை
குறிக்குதுன்னு சொல்லுவாங்க. சுருக்கமா சொன்னா மனசு, வாக்கு, காயம்(உடல்)
மூணிலும் உனக்கு உண்மையா இருப்பேன்னு தாலி கட்டி அந்தப் பெண்ணுக்கு
உறுதி தரிங்க.
அதுமட்டுமில்லாம சப்தபதின்னு ஏழு அடிகள் எடுத்து வைக்கும் சடங்கும் சில
இடங்களில் இருக்கு. அப்ப சொல்லப்படும் மந்திரங்களோட பொருள் என்னன்னா
நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருப்போம்,
ஒரு ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குவோம்,
வளத்தை பெருக்குவோம்,
சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வோம்,
சந்ததிகளைப் பெருக்குவோம், அவங்களை பத்திரமா பாதுகாப்போம்,
ஒரு தோழமையோட கடைசி வரை இருவரும் ஒருத்தருக்கொருத்தர் துணையா
இருப்போம்,
முக்கியமா துரோகம் செய்யாம உண்மையா இருப்போம்ன்னு ஏழு அடி எடுத்து
வைக்கும் போதும் ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு சத்தியம் செய்யுறிங்க.

நான் ப்ரோகிதப்படி திருமணம் செய்துக்கல அதனால எனக்கிது செல்லாதுன்னு
சொல்லும் அறிவாளிகளே… எந்த முறைப்படி திருமணம் செய்துட்டாலும் எல்லார்
முன்னாடியும் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் உறுதிமொழி தர்றிங்கல்லையா
அதோட பொருள் என்னன்னு உங்களுக்கே தெரியுமே.
நம்ம மதத்தில் மட்டுமில்லாத மத்த மதத்திலும் இந்த மாதிரி சத்தியங்களை
பெரியவங்க முன்னாடி செய்து அந்தப் பெண்ணை உன் வாழ்க்கை துணையா
ஏத்துக்குற வழக்கம் இருக்கு.
சத்தியம் என்பது வெறும் வார்த்தைகள் தான் ஆனால் அதை பெரியவங்க
முன்னாடியும் தெய்வத்து முன்னாடியும் சொல்லும்போது அதன் சக்தியே வேற.
அதனால் வார்த்தைகளை தரதுக்கு முன்னாடி ஒரு தரத்துக்கு பத்து தரம்
யோசிங்க. தப்பில்லை. ஆனால் உங்க சுயநலத்துக்காக கல்யாணம் செய்துட்டு
அப்பறம் வார்த்தைகளைத் தவறிராதிங்க. அது மகா பாவம் மட்டுமில்லை
உங்களையே நம்பி பிறந்த பிள்ளைகளுக்கு நீங்க செய்யும் மிகப் பெரிய துரோகம்"
முத்தாய்பாய் சொல்லி தனது ஆன்மீக உரையை முடித்தார் உமையாள்.
சிலிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள் பானுப்ரியா.
உரை முடிந்து புளியோதரைப் பிரசாதத்தை வாங்கி வந்தனர் பாட்டி சாவித்ரியும்
பேத்தி நேத்ராவும்.
"பானு கிளம்ப மனசே வரலையா?" தொன்னையில் தந்த புளியோதரைப்
பிரசாதத்தை, கையோடு எடுத்துவந்திருந்த டிபன் பாக்ஸில் போட்டவாறே
கேட்டார் சாவித்திரி.
"உன் பொண்ணுங்க புளியோதரைன்னா பிடிச்சு சாப்பிடும். இதைத் தந்துடலாம்"
என்றவாறே கிளம்பினர். வெளியில் ஆட்டோ பிடித்தனர்.
"இன்னைக்கு ‘ரோஜாவின் நிறம் சிவப்பு’ சீரியல் என்ன ஆச்சோ தெரியலையே.
நேத்தி பாக்யாவ மாடிலருந்து கீழ தள்ளிவிட்டாளே அந்த வில்லி" சாவித்திரியின்
கவலை அவருக்கு.
"இன்னைக்கு கடைசி படிக்கு உருண்டு விழுந்திருப்பா… ஒவ்வொரு படிக்கும்
ஒவ்வொரு சீன் ப்ளாஷ்பேக் வைச்சுருப்பாங்க" கிண்டலாய் சொன்னாள் நேத்ரா.
அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளவில்லை பானு. "கல்யாணத்தில்
இவ்வளவு அர்த்தம் இருக்குன்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் மாமி.
நான் ஏதோ இனிமே இவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவின்னு
சொந்தக்காரங்க கிட்ட சொல்லத்தான் கல்யாணம் பண்ணுறாங்கன்னு நெனச்சேன்"
"அதுவும் ஒரு காரணம்ன்னு வச்சுக்கோயேன். அந்த காலத்தில் ஜானவாசம்ன்னு
மாப்பிள்ளை பையனை ஊர்வலம் கூட்டிட்டு போவாங்க. அது எதுக்குன்னு
நினைக்கிற… இந்தப் பையன்னுக்குத்தான் எங்க வீட்டுப் பொண்ணைத்

தரப்போறோம்… இவனைப் பத்தின விரும்பத்தகாத தகவல்கள் இருந்தா எங்ககிட்ட
சொல்லுங்கன்னு சொல்லத்தான்" சொல்லிவிட்டு சிரித்தார் சாவித்திரி.
"அக்கா… பாட்டி சொல்லுறதை நம்பாதே. அப்பப்ப ரீல் சுத்துவாங்க" காதில் நேத்ரா
முணுமுணுக்க. நிஜமா பொய்யா என்பதைப் போலப் பார்த்தாள் பானு.
அதற்குள் அப்பார்ட்மெண்ட் வந்திருக்க, தவ்லத் வீட்டை நெருங்கும்போதே ஓடி
வந்து காலைக் கட்டிக் கொள்ளும் பிள்ளைகளை எதிர்பார்த்த பானுவிடம் தவ்லத்
பதட்டமாய் சொன்னார்
"பானு உன் வீட்டுக்காரர் இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டார்டி… வந்த சூட்டோட
நீ வீட்டில இல்லைன்னதும் கோவம்னு நினைக்கிறேன். உன் பொண்ணுங்களை
கூட்டிட்டுப் போய்ட்டார். வீட்டுக்கு ஓடு"
கூட செல்ல முயன்ற நேத்ராவை கைபிடித்து நிறுத்தினார் தவ்லத் "ஏய் அவ
பாத்துப்பா… நம்ம கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்".