வார்த்தை தவறிவிட்டாய் 4

வார்த்தை தவறிவிட்டாய் 4
0

அத்யாயம் – 4

மலையம்பட்டி தென்தமிழகத்தில் சிறு மலைக்குன்றின் கீழ் அமைந்த அழகான
கிராமம். விவாசயத்தையே ஆதாரமாய் கொண்ட மக்கள். பத்து தெருவே நிறைந்த
அந்த கிராமத்தில் பெரும்பாலும் உறவுமுறைகள் நிறைந்திருப்பர். அங்கு காலம்
காலமாய் வசிக்கும் குடும்பங்களில் சற்று பெரிய மனிதர் பானுப்ரியாவின் தந்தை,
குணசேகர். இரண்டு ஏக்கர் மட்டுமே வைத்து விவசாயம் செய்து வயிற்றை நிரப்ப
வேண்டிய நிலை சந்திரப்பிரகாஷின் குடும்பத்துக்கு.
மேலூர் பள்ளியில் ஆயிரத்தைம்பது மதிப்பெண் பெற்றுத் தேறிய மூத்த மகன்
சந்திரப் பிரகாஷுக்கு தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் தேடி வர,
கட்டணத்தை நினைத்து கலங்கியவர்களுக்குக் கை கொடுத்து உதவினார்
குணசேகர். அது அவன் கல்லூரி படித்து முடிக்கும் வரை நீண்டது.
பணம் வாங்க சங்கடப்பட்ட பிரகாஷுக்கு தனது முயற்சியால் வங்கியில்
கல்விக்கடன் பெற்றுத் தந்தார் குணசேகர். ஆரம்பத்தில் தன் இனத்தை சேர்ந்த
ஒரு நல்ல பையனுக்குப் படிப்புதவி செய்வதாகத்தான் குணசேகரின் எண்ணம்
இருந்தது. அதைத்தவிர இந்த உதவியால் போனசாய் அவரது நல்ல பெயர்
உயர்ந்தது.
ஒவ்வொரு வருடமும் தேறி வரும் லட்சக்கணக்கான பொறியியல்
பட்டாதாரிகளில் ஒருவனாய் வெளிவந்தான் சந்திரபிரகாஷ். விரிவுரையாளராய்
பணிபுரிய ஆரம்பித்தான். வாங்கிய சொற்ப சம்பளத்தில் பெரும்பகுதி வீட்டுக்கே
செலவு செய்ய வேண்டிய நிலை.
சிலவருடங்கள் பணிபுரிந்ததும் அவனது திறமை கண்டு அவன் பணிபுரிந்த
கல்லூரி நிர்வாகமே எம்.ஈ படிக்க உதவி செய்தது. படிக்கும் தம்பி,
கல்யாணத்துக்கு நிற்கும் தங்கைகள். கடமைகளே அவன் கண் முன் அணிவகுத்து
நிற்க, காதல் சொன்ன பெண்களை நாசூக்காய் விலக்கினான். இருந்தாலும் அவன்
மனதில் மனைவியாய் வரப்போகும் பெண்ணைப் பற்றிய கற்பனைகள்
நிறைந்திருந்தன.
பிரகாஷும் நண்பர்களும் விளையாட்டாய் பேசும்பொழுது மனைவியாய்
வரப்போகும் பெண்ணைப் பற்றிய பத்து பாய்ன்ட் பட்டியல் ஒன்றினைப்
போட்டிருந்தனர்.
1)அழகாய் கண்ணுக்கு நிறைவாய் இருக்க வேண்டும்.
2)மனதறிந்து நடக்க வேண்டும்
3) எனது பெற்றோர்களுக்கு மரியாதை தர வேண்டும்.
4)நன்றாய் சமைக்க வேண்டும்.
5)குடும்பப் பாங்காய் மனதை நிறைக்க வேண்டும்.
6)வேலைக்குப் போக வேண்டும்.
7)பொருளாதாரப் பிரச்சனைகள் மட்டுமின்றி எந்த பிரச்சனையையும் சுலபமாகக்
கையாளத் தெரிந்த தைரியமுள்ள பெண் வேண்டும்.
8)மாமனார் வீடு கௌரவமானதாக இருக்க வேண்டும்.
9)மனைவி கணவனுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
10) நாலு உலக விஷயங்களைத் தெரிந்தவளாய், தன்னுடன் சரிக்கு சமமாய்
உரையாடத் தெரிந்தவளாய் இருக்க வேண்டும்.
மொத்தத்தில் எனக்கு அமைந்த மனைவியைப் பார்த்து என் நண்பர்கள் எல்லாம்
பொறாமைப்பட வேண்டும்.
இப்படி ஒரு ஆசை. இது பல ஆண்களுக்கும் இருக்கும் இயல்பான கனவுகள்.
ஆனால் கனவுகள் எல்லாமும் பலித்துவிடுமா? அதுதானே கேள்வி.
பிரகாஷின் தங்கைக்கு நெடுஞ்சாலைத் துறையில் வேலை பார்க்கும் எஞ்சினியர்
வரன் வந்தது. ஆனால் அவர்களது எதிர்பார்ப்பை செய்யும் அளவுக்குப்
பணமில்லை. அதனால் அவன் தகப்பன் ஒரு அருமையான யோசனையோடு
வந்தார். பேசாமல் பானுவைத் திருமணம் செய்துக் கொண்டால் மகனுக்கு வரும்
சீர்வரிசையை அப்படியே மகளுக்கு மாற்றிவிடலாம்.
குணசேகர் தன் மகள் பானுப்ரியாவுக்கு வரன் பார்க்கத் தொடங்கியபோது
பிரகாஷின் ஜாதகம் பொருந்தி இருந்தது. தெரிந்த குடும்பம் என்பதால் அவருக்கு
வெகு திருப்தி. இருவத்தி இரண்டு வயது பானுப்ரியாவை முப்பது வயது
பிரகாஷ்க்கு திருமணம் முடிக்க சம்மதம் கேட்டு தூது அனுப்பினார்.
பிரகாஷ் யோசிக்க சிறிது அவகாசம் வேண்டியிருந்தான். அவனுக்கு இந்த
சம்மந்தத்தின் மேல் பெரிதாய் ஆர்வமில்லை. பானுப்ரியா மேலூரில் அவளது
பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தாள். விடுமுறைக்கு வீட்டுக்கு வருபவளைப்
பார்த்திருக்கிறான். பளீரென பார்ப்பவர் கண்களைக் கவராதவள். மாநிறம், உயரம்
கூட ஐந்தடி இரண்டு அங்குலம்தான் என்று பிரகாஷின் தங்கை
சொல்லியிருந்தாள். முகம் களையாக இருக்கிறது என்று அவனது பெற்றோர்
சொன்னாலும் அவனது மனது சமாதானமாகவில்லை.
சொல்லப்போனால் சந்திரப்பிரகாஷின் பத்து பாய்ன்ட் பட்டியலில் முதல்
பாய்ண்டிலே பானுப்ரியா தோல்வியைத் தழுவியிருந்தாள். அதை
வெளிப்படையாக சொல்லி மறுக்க மனமின்றி அவகாசம் கேட்டான். சிறிதுநாள்
கழித்து அவர்களே புரிந்து கொண்டு விலகி விடுவார்கள் என்று நினைத்தான்.
இப்போது வேறு வழியில்லை. இவனிடமிருந்து பதில் வராததால் பானுவின்
வீட்டில் மற்ற வரன்களின் ஜாதகத்தை அலச ஆரம்பித்தனர். பிரகாஷின்
தங்கைக்கு வந்த மாப்பிள்ளை வீட்டிலும் பானுப்ரியாவின் ஜாதகத்தை கேட்டு
வாங்கிச் செல்லவும் பிரகாஷின் வீட்டில் கிலி பிடித்தாட்டியது.

“அந்தப் பொண்ணுக்கு என்னடா குறை. பிஎஸ்ஸி படிச்சிருக்கு, நல்ல வசதியான
குடும்பம், வீட்டுக்கு ஏத்த பொண்ணு. அவங்க உனக்குப் பொண்ணு தரேன்னு
சொன்னதுக்கே நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் வயிரெறியுரானுங்க”
ஆதங்கத்தில் கடிந்துக் கொண்டனர் குடும்பத்தினர்.
சிறிது நேரம் எடுத்து யோசித்தவனுக்கு அவன் எதிர்பார்த்ததைவிட சற்று அழகு
குறைவு எனும் ஒரு குறையைத் தவிர பானுப்ரியா அந்த அளவுக்கு மோசமான
தேர்வாகப் படவில்லை. சம்மதம் என்று அவன் தலை அசைய பிரகாஷின் மனம்
மாறிவிடக்கூடாதென்ற அச்சத்தில் மின்னல் வேகத்தில் திருமணத்தை முடித்தனர்
அவன் குடும்பத்தினர்.
சந்திரபிரகாஷின் வீட்டிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்திலேயே அவன் வேலை
பார்த்த கல்லூரி இருந்ததால், திருமணம் முடிந்து சில வருடங்கள் கூட்டுக்
குடும்பமாய் வாழ்ந்தனர். மனைவியின் பதவிசான குணத்தால் அவனுக்கு
மாமியார் நாத்தனார் சச்சரவு, சண்டை என்ற வழக்கமான கூட்டுக் குடும்பத்
தொந்தரவு இல்லை. சத்யபாமா பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து, ஷ்யாமா
கைக்குழந்தையாக இருந்தபோது சென்னையிலிருக்கும் கல்லூரியில் கணிசமான
சம்பளத்துடன் அசோசியேட் ப்ரபசராய் வேலை கிடைக்க, குடும்பத்துடன்
சென்னைக்குக் குடி பெயர்ந்தான். கல்லூரியில் வேலை பார்த்தபடி முனைவர்
பட்டத்துக்காக ரெஜிஸ்டர் செய்தான்.
வேலை, படிப்பு என்று பிஸியாய் நகர்ந்த சென்னை நாட்கள் சமீபகாலமாய்
பிரகாஷின் ஆழ்மனதில் புதைந்திருந்த ஏக்கங்களை வெளிக் கொண்டு
வந்திருந்தன. கொஞ்ச நாட்களாய், பிரகாஷ் வாழ்வில் கட்டாயம்
முன்னேறிவிடுவான் என்று தெரிந்தே குணசேகர் படிக்க பொருளுதவி செய்து,
மறுக்கமுடியாத இக்கட்டான நிலையில் நிறுத்தி, தன் மகளைத் தலையில்
கட்டிவிட்டதாய் மனதில் படுகிறது. அவர் இந்த மாதிரி நிலையில் நிறுத்தி
இருக்காவிட்டால் தான் ஆசைப்பட்ட குணங்களுடன் தனக்குத் தகுந்த பெண்ணை
மணந்திருக்கலாம் என்று சாத்தான் வேதம் ஓதுகிறது.
மனதின் குரங்காட்டத்தால் பிரகாஷுக்கு பானுப்ரியாவின் கவனக்குறைவு
பொறுப்பில்லாத்தனமாய் மனதில் பட்டது. மாங்கு மாங்கு என அவள் உழைப்பது
திட்டமிடாமல் வேலை செய்யும் முட்டாள்தனமாய் எரிச்சல் மூட்டியது.
தோற்றத்தில் அக்கறை எடுக்காமல் இருப்பது அழகற்றவளாய் அவன் கண்ணை
உறுத்தியது. ஒரு முறைக்கு பல முறை சொல்லியும் அவள் சிறு சிறு
குறிப்புக்களைக் கூட மறந்து நிற்கும் மடமங்கையாய் தோன்றினாள்.
குழந்தைகளும் அதே போல வளர்கிறார்களே என்ற ஆத்திரம் கண்ணை மறைக்க
வாய்க்கு வந்தபடி பேசினான்.
அவன் என்ன பேசினாலும் அமைதியாய் உள்வாங்கிக் கொள்ளும் மனைவியாய்
அமைந்துவிட்டதால் அவன் வார்த்தைகள் சில சமயம் அளவுக்கு மீறியே

சென்றன. ஒருவர் மனதைப் புண்படுத்திய வார்த்தைகள் மன்னிக்கப்படலாம், ஒரு
போதும் மறக்கப்படுவதில்லை என்பதை இவனுக்கு யார் எடுத்து சொல்லப்
போகிறார்கள். படிப்பு பண்பைத் தர வேண்டும். நிதர்சனத்தை விளக்க வேண்டும்.
பிரகாஷுக்கோ படிப்பும், வெளியுலகத் தொடர்பும் காதல் மனைவியை
மற்றவர்களுடன் ஒப்பிட்டு மனைவியின் பால் அதிருப்தியை வளர்த்து அவன்
கட்டிக்காத்தப் பண்பை மறைக்கச் செய்தது.