வார்த்தை தவறிவிட்டாய் 7

வார்த்தை தவறிவிட்டாய் 7
0

அத்யாயம் - 7

குழந்தைகளுக்குத் தேர்வு விடுமுறை தொடங்கிவிட்டது. ஊருக்கு செல்ல
வேண்டும். ஆனால் பிரகாஷுக்கு பாம்பே செல்ல வேண்டிய வேலை இருந்தது.

"பானு உங்களை உங்கம்மா வீட்ல விட்டுட்டுப் போகட்டுமா?"
மறுத்து வேண்டாம் என்று தலையசைத்தாள்.
பானுவின் தந்தை குணசேகர், இவளுக்குத் திருமணம் செய்த கையோடு
மண்ணுலகிலிருந்து விடைபெற்றுவிட்டார். அவள் தாய் செவ்வந்தி , இவர்
ஆண்பிள்ளை குடும்பத்தின் வாரிசு என்றும் பெண்பிள்ளை செலவு என்றும்
எண்ணும் பத்தாம்பசலி. பானுவுக்கு ஒரு முழம் பூ வாங்கித்தந்தால் கூட
“பொண்ணைப் பெத்தாலும் பெத்தேன் அவ காதில் போட்டிருக்குற கம்மல்,
கழுத்தில் இருக்கும் செயின், கைவளை இதுமட்டுமில்லாம ஒரு முழம் பூ கூட
நான்தான் வாங்கித் தரவேண்டியிருக்கு” என்று பத்து பேரிடமாவது
சொல்லிவிட்டுத்தான் தருவார்.
சுருக்கமாக சொன்னால் விளம்பரப் பிரியை. மகளுக்கு செய்யும் சீரைக் கூட
விலைபில்லுடன் கண்காட்சியாய் ஊருக்குக் காட்டிவிட்டுத்தான் செய்வார்.

தாய் எவ்வழியோ மகனும் அவ்வழி. பானுவின் அண்ணன் அவளைக் கல்லூரியில்
படிக்க வைத்ததைக் கூடத் தண்டச் செலவுக் கணக்கில் எழுதுபவன். ரெண்டு

பொண்ணப் பெத்திருக்கா இதுங்களுக்கு தாய்மாமன் சீரு வேற செய்யணும் என்று
கடுப்பாகவே சத்யபாமாவையும், ஷ்யாமாவையும் பார்ப்பான். பானுவிடம் ஓரளவு
தன்மையாக நடந்துக் கொள்கிறான் என்றால் அதற்கு முழுக்காரணம்
சந்திரப்பிரகாஷின் படிப்பும், வேலையும் அதனால் சொந்தக் காரர்களின் மத்தியில்
பிரகாஷுக்கு இருக்கும் பெயருமே…

பானுவின் அண்ணிக்கு பானு என்றாலே ஒரு காய்ச்சல். வாய் பேசத் தெரியாமல்
அமைதியாய் இருப்பவளை வாட்டி எடுப்பாள். பானு பள்ளியில் படிக்கும்போதே
அவளது அண்ணனுக்குத் திருமணமாகிவிட்டது. வீட்டுக்கு வந்த மகராசிக்கு
வீட்டின் இளவரசியைக் கண்டாலே பற்றி எரிந்தது. சமையலுக்கு மிளகாயை
அம்மியில் அரைத்துத்தா என்பாள். வேலைக்காரி இல்லை வீட்டைக் கூட்டித்
துடை என்று கட்டளையிடுவாள்.

பானுவுன் தந்தை குணசேகர் மருமகளைக் கண்டிக்க முடியாது. அதன்பின்
அவருடன் நேருக்கு நேர் சண்டை போட ஆரம்பித்துவிடுவாள். மருமகள்
மகனுடன் வம்பு வளர்க்க அவர் தயாராக இல்லை. பின் உள்நாட்டுக்
கலகமாகிவிடும். அதனால் பானுவைப் பாட்டி வீட்டில் படிக்க அனுப்பிவிட்டார்.
திருமணம் வரை பானுவை வெளியே தங்க வைக்க வேண்டும் என்ற ஒரே
காரணத்துக்காகவே ப்ளஸ்டூ தாண்டாத அவளது குடும்பத்தினர் கல்லூரியில்
பட்டப்படிப்பு வரை படிக்க வைத்தனர்.

படித்து முடித்த சிறிது நாளிலே சந்திரப்பிரகாஷ் - பானுப்ரியா திருமணம் நடந்தது.
எஞ்சினியர் மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டு சொந்த பந்தத்தில் பெயரோடு
வலம் வந்த பானுவை அவள் அண்ணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனாலும் ஆண்கள் அருகிலில்லாத சமயம் பானுவை ஏதாவது ஜாடை
மாடையாகப் பேசுவாள். பானு காதிலே வாங்கிக் கொள்ள மாட்டாள்.

பானுவுக்கு, தந்தை உலகை விட்டு மறைந்ததும், அம்மாவுக்காக பிறந்தவீடு
செல்வது ஒரு கடமையாகி விட்டது.
செல்லவில்லை என்றால் "எங்க வீட்டுக்கெல்லாம் நீங்க வருவிங்களா" என்ற
குத்தலையும், சென்று தங்கினாலோ "ஒவ்வொரு வேளைக்கும் மூணு
குடும்பத்துக்குள்ள வடிச்சுக் கொட்ட வேண்டியிருக்கு" என்ற சுடுசொல்லையும்
தாங்க வேண்டும்.
பானு பிறந்த வீட்டுக்கு செல்வதற்கும் மற்றொரு காரணமும் இருந்தது.

"பானு ஏற்கனவே உன் வீட்டுக்காரர் கோவக்காரர். பொறந்த வீட்டுக்கு நீ வந்து
போயிட்டு இருந்தாத்தான் உனக்கும் ஒரு சப்போர்ட் இருக்குன்னு உன் மாமியார்
வீட்டுல மரியாதை தருவாங்க. உங்க அண்ணி வாய்க்கு பயந்து வரதை
நிறுத்திட்டா… உன்னை என்ன செஞ்சாலும் கேக்க நாதியில்லைன்னு ஆயிடும்.
ஜாக்கிரதை" என்று அவள் தாய் செவ்வந்தி படித்துப் படித்து சொல்லியிருந்தார்.

தாய் தந்தையர் பேச்சுக்குத் தலையசைத்தே பழகியிருந்த பானுவும் அப்படியே
இன்றளவும் நடந்து வருகிறாள்.
வருடம் ஒருமுறை முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் பத்து நாட்கள்
பல்லைக் கடித்துக் கொண்டு தாய் வீட்டில் கழித்துவிட்டு மலையம்பட்டியிலேயே
இருக்கும் மாமியார் வீட்டில் பத்து நாட்கள் இருந்துவிட்டு ஓடி வந்துவிடுவாள்.
அந்த இருவது நாள் இடைவெளியில் நேத்ராவும் ஊருக்குச் சென்று தன்
பெற்றோருடன் சென்னைக்கு வந்துவிடுவாள். நால்வர் அணியுடன் நேத்ராவின்
தாய் அமுதவல்லியும் சேர்ந்துக் கொள்ள ஐவரும் இனிமையாகப் பொழுதைக்
கழிப்பார்கள்.
செவ்வந்தி தன் மகள் பானுப்ரியாவை வேறு குடும்பத்தின் மருமகளாய்
பார்த்தாலும், வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை.
அவருக்கும் மருமகளுக்கும் சண்டை வரும்போது தாய் பானு வீட்டுக்குக் கிளம்பி
வந்துவிடுவார். பத்து நாட்கள் கழித்து கோவம் ஆறிவிடும். ஊருக்குக் கிளம்புவார்.
ஊரில் உறவு முறைகளிடம் சென்னை சென்றதுக்கு "பானு பாவம் பிள்ளையை
வச்சுட்டு கஷ்டப்படுறாளேன்னு உதவி செய்யப் போனேன்" என்று காரணம்
சொல்வார்.
சுருக்கமாய் சொல்லப் போனால் பானுவைத் தனது மகளாகப் பார்க்கிறாரா
இல்லை ஒரு இளிச்சவாயை தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறாரா என்ற
எண்ணம் நியாயவாதிகளுக்குத் தோன்றும். இப்படியெல்லாம் சில தாய்
இருப்பார்களா என்று கேட்காதீர்கள். அபூர்வமாய் இப்படியும் சில அன்னையர் குல
திலகங்கள் இருக்கின்றனர். பானுவிடம் இருக்கும் சில நல்ல குணங்கள் அவளது
பாட்டியின் வளர்ப்பினால் வந்திருக்கலாம்.

தாய் வீட்டைப் பற்றிக் குறைவாக கணவனிடம் சொன்னால் உனக்குத்தான்
கேவலம் என்று போதிக்கப் பட்டிருந்ததால் பானு வாய் விட்டுப் பிரகாஷிடம்
சொல்வதில்லை. அவள் சொல்லாமலேயே பிரகாஷுக்கும் பானுவுக்கு ஊருக்கு
போவது மனமகிழ்ச்சியைத் தருவதில்லை என்று புரிந்தது. அதனால் ரொம்பவும்
வற்புறுத்த மாட்டான். அவன் வீட்டுக்கு வரும்போது பானு வீட்டில் இருக்க
வேண்டும். அதைத்தான் அவனும் விரும்பினான். மாலை டிபனும், இரவு உணவும்
பானு கையால் உண்டால்தான் அவனுக்குப் பிடிக்கும். ஏதாவது வெற்றியை

அடைந்துவிட்டால் உடனே பானுவிடமும் குழந்தைகளிடமும் பகிர்ந்துக் கொள்ளத்
துடிப்பான். கணவனின் சாதனையைக் கண்டு பெருமையால் பூரிக்கும் பானுவின்
முகத்தைக் காண அவனுக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு கணவனுக்கும் தன்
மனைவியின் மனதில் சாதனை நாயகனாகத் தோற்றமளிக்கத் தானே
விரும்புவான்.
பானுவின் அசட்டுத்தனம் கோபமூட்டினாலும் அதற்காக அவளை பிரியவோ
வெறுக்கவோ பிரகாஷால் முடியாது. அவன் பானுவைத் திட்டினாலும் மற்றவர்கள்
யாரும் அவளை மரியாதைக் குறைவாக நடத்த அனுமதிக்க மாட்டான். பூர்வஜா
பானுவைப் பற்றி ஏதாவது குறைவாக சொன்னால் வார்த்தைகளால் குதறி
விடுவான். அதனாலேயே ஆசைநாயகி என்ன முயன்றும் அந்த பந்தத்தை
உடைக்க முடியவில்லை.
அவனுக்கு பானுவைப் பிடித்தது. ஆனால் பூர்வஜாவின் நெருக்கமும் அதனால்
ஏற்பட்ட மயக்கமும் நிலவை மறைத்த மேகம் போல அவன் நெஞ்சமெங்கும்
நிறைந்திருந்தது. பல நேரங்களில் தவறிழைத்த மனது தூக்கமின்றி தவிக்கும்
நேரத்தில், மேகம் விலகி அவன் செய்துக் கொண்டிருக்கும் தப்பை அவன்
மனசாட்சி குத்திக் காட்டும். கணவன் பால் அதீத நம்பிக்கையுடன் அவன் தருவது
மலரோ முள்ளோ வாய்பேசாது பெற்றுக் கொண்டு நிம்மதியாய் உறங்கும்
பானுவைக் கண்டு அவன் உள்ளம் கனியும்.
அப்போதெல்லாம் தன்னைத் தானே கேட்டுக் கொள்வான் " நல்ல மனைவி,
சமத்துக் குழந்தைகள்… இந்த மாதிரி ஒரு குடும்பம் அமையாதான்னு அவனவன்
ஏங்குறான்… நீ ஏண்டா பிரகாஷ் இப்படி இருக்க… அந்த பூர்வஜாதான் உன் மேல
வந்து விழுந்தான்னா நீ ஏன் வளைஞ்சு கொடுக்குற. இனிமே அந்தப் பிசாசைத்
திரும்பிக் கூடப் பாக்கக் கூடாது. சம்பளம் கம்மியா கிடைச்சாக் கூடப் பரவல்ல
ஊர் பக்கமே ஏதாவது வேலை பார்த்துட்டுப் போய்டலாம்" என்று முடிவு
செய்வான். கல்லூரியிலும் பூர்வஜாவைப் பார்ப்பதையே தவிர்ப்பான். அதைப்
புரிந்துக் கொள்ளும் அவள், எப்படியாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு
பிரகாஷைக் கண்டு கண் கலங்கும்போது அவனை அறியாமலேயே அந்தக்
கண்ணீரைத் துடைக்க அவன் கைகள் பரபரக்கும்.