வார்த்தை தவறிவிட்டாய் 8

வார்த்தை தவறிவிட்டாய் 8
0

அத்யாயம் – 8

பெட்டியில் இஸ்திரி போடப்பட்ட சட்டைகளையும், பேன்ட்டையும் செட்டாக
அடுக்கி வைத்தாள் பானு.
“சோப்பு, சீப்பு, ஹேர் கிரீம் எல்லாம் இந்த கவர்ல சுத்தி வச்சிருக்கேன். உங்க பாடி
ஸ்ப்ரே தீர்ந்து போயிருச்சு. நீங்க உபயோகிக்கிறது ஸ்டாக் இல்லைன்னு

சொல்லிட்டான். அதை மட்டும் வெளிய வாங்கிக்கோங்க. வேற பிராண்ட்
போட்டுறாதிங்க. உங்களுக்கு அலர்ஜி வந்துடும்”
அக்கறையாக எடுத்து வைத்த மனைவியின் கையைப் பிடித்து கட்டிலில் அமர
வைத்தான்.
"நான் வர பத்து நாளாகும்… தனியா இருந்துப்பியா?"
"அம்மாதான் வரேன்னு போன் பண்ணாங்களே. இங்க ஒரு வாரம் இருந்துட்டு
அவங்க கூட ஊருக்குப் போயிட்டு வரேன்"
"நீ தனியா போனதே இல்லையேடி … பேசாம எங்கப்பாவை வர சொல்லு… அவர்
கூட ஊருக்குப் போயிட்டு வாங்க."
"வயசான எங்கம்மா தனியா வராங்க… ஆனா நீங்க என்னை அனுப்ப
மாட்டிங்கிறிங்க. அப்பறம் தனியா ஒரு காரியமும் செய்யத் தெரியலைன்னு
திட்டாதிங்க"
"உங்கப்பா இருந்த வரைக்கும் உங்கம்மாவைத் தனியா எங்கேயும் விட்டதில்லை"
எதுவும் சொல்லாதிங்க என்று கண்கலங்க அவன் வாயைப் பொத்திய
மனைவியைப் பார்த்து சிரித்தவன்.
“என்ன செய்யுறது மனசு கேக்கலையே. என் முட்டாள் பொண்டாட்டியைத் தனியா
ஊருக்கு பஸ் ஏத்தி விடக் கூட பயம்மா இருக்கு. தங்கமாட்டம் ரெண்டு
பிள்ளைகளை வேற அவ அழைச்சுட்டுப் போயிட்டு வரணுமே” சொல்லிவிட்டு
சிரித்தான்.
“அக்கறையைக் கூடத் திட்டித்தான் காமிக்கணுமா” கணவனின் சட்டை பட்டனைத்
திருவியபடி வெட்கப்பட்டாள் பானு.
"நான் ராட்சசந்தான்… கொடுமைக்காரன், சிடுமூஞ்சி. அப்படித்தான் உன்னைத்
திட்டுவேன். நான் உன்னைத் திட்டக் கூடாதா? உன்னையும் நம்ம பசங்களையும்
தவிர வேற யாரையும் திட்டிப் பாத்துறிக்கியா"
"உங்கம்மா அப்பா தம்பி"
"அவங்களைத் தவிர"
இல்லை என்று உதடுகளைப் பிதுக்கினாள்.
"நான் ஊருக்கு வரதுக்குள்ள ஏன்னு யோசிச்சு வை"
“இப்பயே சொல்லுங்களேன்”

“மத்தவங்க மேல காமிக்கிற கோவம் எரிச்சல் எல்லாம் வேற விதமானது. உன்
மேலையும் குழந்தைங்க மேலயும் காமிக்கும் கோவம் உரிமைல வரது. என்
மனைவியும் என் பொண்ணுங்களும் எல்லாத்திலையும் பெஸ்ட்டா இருக்கணும்னு
நினைக்கிறேன்”
“இருக்கோமா…”
உதட்டைப் பிதுக்கியவன் “குழந்தைகளை கொண்டு வந்துடுவேன். உன்னை…
கஷ்டம்தான்… வேற வழியில்லை இனிமே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றான்.
எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஆயிரம் முறைகள் பானுவுக்கு
சொல்லிக் கொடுத்துவிட்டு, தவ்லத் வீட்டில் நாசரிடமும், நேத்ராவீட்டில் அவளது
தாத்தாவிடமும் பார்த்துக் கொள்ளச் சொன்னான். மும்பை செல்லும் விமானத்தில்
ஏறும்முன் கண்கலங்க நின்ற மனைவியையும் குழந்தைகளையும் கண்டு மன
உறுத்தலோடு கிளம்பினான்.
ஐந்து நாட்கள்தான் மும்பையில் வேலை. இது தெரிந்த பூர்வஜா தானும்
வருவதாக அடம் பிடிக்க, ஒரு வழியாய் சமாதானப்படுத்தி மீதி ஐந்து நாட்களும்
பூர்வஜாவுடன் கழிக்க ஒத்துக் கொண்டான். வழக்கமாய் ஒன்றிரண்டு நாட்கள்
மட்டுமே பூர்வஜாவுக்குத் தந்தவன் இன்று நாலைந்து நாட்கள் ஒதுக்கினான்.
இனியாவது என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் குடும்பத்துக்கு உண்மையாய்
நடக்க முயல வேண்டும். இந்த முறை அவளிடம் தெளிவாகப் பேசி, லம்பாக ஒரு
தொகையைக் கொடுத்து இந்த உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று
உறுதியாய் எண்ணியபடியே மனைவிக்கும் குழந்தைகளுக்கும் டாட்டா
காட்டினான். அவனது சேமிப்பான நான்கு லட்சம் பணம் பூர்வஜாவுக்கு நஷ்ட
ஈடாய் சேர பத்திரமாய் அவனுடன் பயணம் செய்தது.
"பானு ஊருக்கு எடுத்து வச்சுட்டியா" வினவியபடியே சாவித்திரி வந்தார்.
"எங்க மாமி"
"நல்லா கதையைக் கெடுத்த போ… நம்ம அப்பார்ட்மெண்ட்ல குடியிருந்தாளே
சூசன். அவ கல்யாணத்துக்குப் போகணுமே"
"இங்க பெசன்ட் நகர்ல தானே"
"இல்லடி பெங்களூர்லல கல்யாணம்"
"ஐயோ சுத்தமா மறந்துட்டேன். அவர்கிட்ட சொல்லவே இல்லை மாமி"
"அடிப் போடி இங்க இருக்கு பெங்களூர். காலைல சதாப்தில ஏறினா பதினோரு
மணிக்கு போய்டலாம். சாய்ந்தரம் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு,
ராத்திரி பஸ் பிடிச்சு மறுநாள் விடியுரப்ப வந்துடலாம்"

"ஊர் சுத்தி பாக்கலையா… அங்க புடவை டிசைனெல்லாம் சூப்பரா இருக்குமாம்"
செவ்வந்தி ஆசையுடன் சொன்னார்.
"அதுக்கெல்லாம் நேரம் இருக்காது"
சுவாரஸ்யம் குறைந்து விட்டது செவ்வந்திக்கு "என்னால அலைய முடியாது…
நான் வரல… பானு நீ வேணும்னா போயிட்டு வா"
"சரி நீ, நேத்ரா, நான், தவ்லத் நாலு பேரும் போயிட்டு வந்துடலாம்"
"ஹை தவ்லத் அக்கா வராங்களா… ஆச்சிரியமா இருக்கு"
"எனக்கே நம்ப முடியலடி… நாசர் போயிட்டு வர சொல்லிட்டான். துணைக்கு
வேணும்னா யாசிமை கூட்டிட்டு போலாமா?"
"பொண்ணுங்க வெளிநாட்டுக்கே தனியா போய்ட்டு வர்றாங்க. அஞ்சு மணி நேர
தூரத்தில் இருக்குற பெங்களூர் போறதுக்கு இந்த ஒல்டீஸ் என்னமா பில்ட் அப்
கொடுக்குதுங்க" என்று அலுத்துக் கொண்டாள் நேத்ரா.
"அம்மா யாராவது ஜென்ட்ஸ் கூடப் போனா பாதுகாப்புன்னு தான் நாசர் அண்ணன்
உங்க கூட போக சொன்னான். அதுதான் நேந்தரங்கா சாரி நேத்ராக்கா
வர்றாங்களே… அப்பறம் நான் எதுக்கு?"
"ஆமாம் ஆன்ட்டி, பய்யன் நான் துணைக்கு வரப்ப உங்க பொண்ணு யாஸிம்
எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ்?" பழிப்பு காட்டினாள் நேத்ரா.
சென்னையுடன் ஒப்பிடும் போது இதமான வெயில்தான் பெங்களூரில். முதன்
முதலாக தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்துக்கு வந்த பானுவும் தவ்லத்தும்
எல்லாவற்றையும் ஆச்சிரியமாய் பார்த்தனர்.
"மாமி, என்ன அழகு… என்ன அழகு ஒவ்வொருத்தியும் பெங்களூர் தக்காளிப்
பழமாட்டம் இருக்காங்க. நாசர்க்கு இங்கேயே பொண்ணு பாத்துடலாமா?"
"உங்க ஆம்பூர் அண்ணன் காதுல மட்டும் விழுந்துச்சு நம்ம எல்லாத்தையும்
கட்டி வச்சு உதைப்பார்"
"தவ்லத் உங்க அண்ணன் பொண்ணு பேரு கூட என்னவோ சொன்னியே… "
"நூர்ஜஹான்"
"அவளுக்கு என்னடி நூத்துக்கு நூறு மார்க் போடுற அளவுக்கு நல்ல பொண்ணு.
உங்கண்ணன் வேற வருஷத்துக்கு ஒருதரம் கல்யாணம் பேச வந்துடுறான். பேசி
முடிச்சுட வேண்டியதுதானே"
"அங்கதான் மாமி பிரச்சனையே. நாசர் காலேஜ் ரெண்டாவது வருசத்தோட
படிப்பை நிறுத்திட்டானா… நூரு பன்னெண்டாவதுல தொள்ளாயிரம் மார்க்

வாங்கிருக்கா… படிக்கணும்னு சொன்னா போலிருக்கு. எங்கண்ணன் நாசரை விட
அதிகம் படிக்க வச்சா அவ கல்யாணம் கட்டிக்குவாளோ மாட்டாளோன்னு
பயந்துட்டு மாட்டேன்னுடுச்சு. போன வருஷம் ரெண்டுத்துக்கும் கல்யாணம்
பண்ணிடலாம்னு பாத்தா இவன் இப்ப கல்யாணம் வேண்டாம் நூரு
ஆசைப்பட்டபடி டிகிரி வாங்கினதும் கல்யாணம் பேசலாம்னு சொல்லிட்டான்"
"உங்கண்ணன் ஒத்துகிட்டாரா"
"அண்ணன் சம்மதிக்கல அதுக்கு நம்ம மார்க்கம் பெண்களின் உடலுக்கு திரையிட
சொன்னதே தவிர, அறிவிற்கு திரையிட சொல்லவில்லை …
ன்னு ஒரே போடா போட்டுட்டான். அண்ணனுக்கு வழியில்லை"
"பச்… அந்தக் கடுவன் பூனைக்குள்ள இப்படி ஒரு நல்ல மனுஷனா… ஆன்ட்டி
படிச்சு முடிச்சதும் அந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு
சொல்லிட்டா"
"அதே கவலைதான் எனக்கும். அவ டிகிரி படிச்சா, அவளைவிட உசத்தியா படிச்ச
மாப்பிள்ளையா கேப்பாளேன்னு எடுத்து சொன்னேன்… அப்ப அவ உன்னோட
மருமகள்-ன்னு ஆண்டவன் எழுதலன்னு நினைச்சுக்கோன்னு சொல்லிட்டாண்டி"
ஒரு மணி நேரமாய் தொடர்ந்த கார் பயணத்தில் சலிப்புற்ற சாவித்திரி
"ஏண்டி அந்தப் பத்திரிக்கைல எங்க கல்யாணம்னு பாரு. கிட்டத்தட்ட மான்டயா
வந்துடுச்சு இன்னும் ஒரு மணி ட்ராவல் பண்ணா மைசூர் போயிடலாம்
போலிருக்கு"
"மாண்டையா போற வழிலன்னுதான் சொன்னா பாட்டி"
"எங்காவது நிறுத்தி சாப்பிட்டுட்டு போயிடலாமா… நான் சுகர் டேப்லெட் வேற
போடணும்"
"டன் பாட்டி… ஆனா இன்னைக்கு நம்ம எல்லாரும் நல்ல ரெஸ்டாரன்ட்ல
சாப்பிடுறோம். தவ்லத் அண்ட் பானு நீங்க ரெண்டு பேரும் எனக்கு தோசை
வேணும், சாம்பார் அப்பளத்தோட மீல்ஸ் வேணும்னு தகராறு பண்ணா இங்கேயே
இறக்கி விட்டுட்டு போயிடுவேன்"
வாகனசாரதி பக்கத்தில் இருந்த உணவுவிடுதிக்கு காரை செலுத்தினார். அவர்கள்
உணவுண்ட இடத்துக்கு அருகிலேயே ஒரு பெரிய நட்சத்திர விடுதியும் இருந்தது.
பெங்களூரை விட்டு எத்தனையோ மையிலுக்கு அப்பாலிருந்த அந்த விடுதி
குடும்பத்துடன் தங்கும் வசதியும், நீச்சல் குளமும், உணவு விடுதியுமாய்
நால்வரையும் ஆச்சிரியப்படுத்தியது.
"பெங்களூர்ல இருக்குற ஐடி ஆளுங்க எல்லாரும் வாரக் கடைசியான இந்த மாதிரி
விடுதிக்கு வந்து பொழுதை கழிப்பாங்க. உள்ளேயே விளையாடுற இடம், சாப்பாடு,
பியூட்டி பார்லர், ஏன் கடைங்க கூட இருக்கு. பணம் மட்டும் இருந்தா போதும்.

எல்லாம் வாங்கலாம்" என்று கூடுதல் தகவலும் தந்தார் டிரைவர். அவரையும்
அங்கேயே சாப்பிட சொல்லிவிட்டு சென்றார்கள்.
உணவு பிரமாதமாய் இருந்தது. இருவது வயதிலிருந்து எழுவது வயது வரை
இருந்த அந்த நண்பர் குழாமை அங்கிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தபடி சென்றனர்.
"ஏண்டி நேத்ரா, ஒரு காப்பி எம்பது ரூவா போட்டிருக்கானே அநியாயமா இல்ல"
புலம்பிக் கொண்டே சாப்பிட்டார் தவ்லத்.
"அநியாயம்தான் ஆன்ட்டி. இந்த செலவுக்கு ஈடு செய்ய அடுத்த வாரம் புல்லா
நீங்க சாப்பிடக் கூடாது… சரியா"
வாயடித்தாலும் அனைவருக்கும் நேத்ராவே பில் கட்டினாள். தடுத்தவர்களிடம்
"இது என்னோட பிறந்தநாள் ட்ரீட். ஒவ்வொரு பிறந்தநாளும் அம்மா அப்பாவைப்
பாக்க ஊருக்குப் போய்டுறேன். அதனாலதான் முன்னாடியே தந்துட்டேன்" என்று
அடக்கினாள்.
கையைக் கழுவிவிட்டு புடவையில் துடைத்த தவ்லத்தை கடிந்து கொண்டு டிஷு
பேப்பரைத் தந்தாள்.
"எவ்வளோ பேப்பர வீணாக்குற, மரத்தை வளர்ப்போம்ன்னு…" பேசிய தவ்லத்
அதிர்ச்சியுடன் பாதியில் நிறுத்தினார். அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் வழியே
பக்கத்திலிருந்த விடுதியின் வாசல் தெரிய அங்கு நின்ற காரிலிருந்து
கொஞ்சியபடி இறங்கியது பானுவின் கணவன் போல் அல்லவா இருக்கிறான்.
கைகளில் ஷாப்பிங் செய்த பைகளுடன் விலையுர்ந்த டிசைனர் சேலை,
அதற்கென்றே தேர்ந்தெடுக்கப் பட்ட பேன்சி நகைகள், தங்க நிறத்தில் தோலோடு
பொருந்தித் தெரிந்த கைக்கடிகாரம் என்று இறங்கிய பெண் யாரென்றே
தெரியவில்லை தவ்லத்துக்கு. ஆனால் ஐந்து வருடமாய் தினமும் பார்க்கும்
பிரகாஷ் அன்றாடம் அணியும் உடைகளைத்தான் அணிந்திருந்தான்.
"டீ நேத்ரா… பானு வீட்டுக்காரர் மா…" வார்த்தைகள் வெளிவராமல் தவிக்க,
"அ… அண்…ண…னேதான் ஆன்ட்டி" என்றாள் நடுங்கிய குரலில்
"இருக்…கா…துடி… அவரு… டெல்…லி" குரலிலேயே அப்படி இருந்துவிடக்கூடாது
என்ற பயமும் இருந்தது.
"கூட இருக்குறது அக்காவோட ப்ரெண்ட் பூர்வஜா" அதிர்ச்சி விலகாமல்
சொன்னாள் நேத்ரா.
"இருக்காது நம்ம தப்பா பாத்திருப்போம்… இதை பானுகிட்ட சொல்லக் கூடாது…
என்ன" அழுகையை முந்தானையில் அடக்கியபடி சொல்ல
திரும்பியவர்கள் கல்லாய் சமைந்து மூச்சு விடக் கூட மறந்து நின்ற பானுவின்
மீதும் சாவித்திரி மீதும் இடித்துக் கொண்டார்கள்.