விகாரி வருடமும் அபிராமி தரிசனமும்

விகாரி வருடமும் அபிராமி தரிசனமும்
0

புதுப்பொழிவு புதுத்தொடக்கம் உண்மையில் புத்தாண்டு புத்துணர்வுடன்தான் எனக்கு தொடங்கியது.இந்த சித்திரை விகாரி வருடம்.திருக்கடையூர் அபிராமி சன்னதியில் என் அப்பா அம்மாவிற்கு சஷ்டியப்தபூர்த்தியுடன் தொடங்கியது இந்நாள்தான்அபிராமி அம்பாளின் ஆசியுடனும் காலையில் கோவில் மணியோசையின் சப்தத்திலும ஆரம்பமானது.அருமையான தரிசனம் கிட்டியது.என் சித்தியையும் சித்தப்பாவையும தான் நான் அம்மா அப்பா என்றுதான் அழைப்பேன்.என் மகனும் மகளும் தாத்தாவின் சஷ்டிக்கு சிறப்பு விருந்தினர்கள்.உண்மையை சொல்லப்போனால் உண்மையில் என்னை பெறாத தாய்தந்தைதான் அவர்கள்.அவர்களுக்கு பெண்பிள்ளையில்லை எனவே என்னை மகளாகவே வளர்த்தனர்.நான் அவர்களின் மகளாகத்தான் ஊரில் அனைவருக்கும் தெரியும் .எனக்கு 3 வயதாகும்போதே எங்கள் ஊரிலிருந்து பள்ளியில் சேர்வதற்காக என் பாட்டி வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை,பாட்டி,தாத்தா என அனைவரின் அன்பிலும் வளர்ந்தேன்.வீட்டிற்கு முதல்குழந்தை என்பதால் அனைவருக்கும் நான் செல்லம்.ஜனித்தது ஒரு தாய்வயிற்றில் என்றால் வளர்க்கப்பட்டது மற்றொரு தாயினிடத்தில்.என் அம்மா அப்பா தேவகியும் வசுதேவரும் என்றால் என்னை வளர்த்த தாய் தந்தை யசோதை நந்தகோபராய் என் சித்தியும் சித்தப்பாவும்.இந்த பாசப்பிணைப்பு அத்தனை வலியது.வருடத்தொடக்கம் அவர்களின் சஷ்டி என்பது பெருமகிழ்ச்சி.என்னவருடன் இந்த வருடம் வருடப்பிறப்பு கொண்டாட இயலவில்லை என்பது மட்டும்தான் மனதில் சிறிய கவலை.அந்த அபிராமி கோவிலின் வரலாறு அத்தனை அழகானது.திருக்கடையூர் 47வது சிவஸ்தலமாகும் சரபோஜி மன்னர் மிகுந்த தெய்வபக்தி மிக்கவர் அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
மன்னர் வருகையைக்கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சுப்பிரமணிய ஐயரை பார்த்தவருக்கு அவர் தியானம் செய்வதைப்பார்த்து ஏதோ மனதில் குழப்பம் ஏற்பட இவர் யாரென்று மற்றவர்களிடம் கேடக.இவர் துர்சக்திகளை எண்ணி ஏதோ தவமிருக்கிறார் என்றனர்.அவரை நெருக்கிய சரபோஜி மன்னர் அவரை சோதிக்கும் பொருட்டு இன்று என்ன திதி என்று கேட்க அம்பாளின் ஒளிமிகுந்த முகத்தை தியானத்தில் கண்டவர் பௌர்ணமி என்றார்.
பின்னர் தியானத்திலிருந்து திரும்பியவருக்கு தான் அமாவாசைதிதியை தவறாக பௌர்ணமி என்று கூறியதை நினைத்து வருந்தினார் ஏற்கனவே அம்பாளை சாஸ்திர நெறிப்படி வணங்கும் தன்னை பித்தன் என்று கூறுகிறார்கள்.இன்று அம்பாளை தியானித்த வண்ணம் அவள் மேல்கொண்ட பக்திக்கும் இழுக்கு தந்துவிட்டேனே என வருந்தினார்.பின்னர் அன்று விரகுகள் வைத்து தீமூட்டி அதன் மேல் பல அடுக்குகளாக100 கயிறுகளை உரியாக்கி அதன்மேல் அமர்ந்து கொண்டாராம் .தாம் அபிராமி அம்பிகையின் மேல்கொண்ட பக்தி உண்மையானால் பக்தி மிகுதியால் தான் சொன்ன சொல்லை அந்த அபிராமி உண்மையாக்குவாள் என்று அபிராமி அந்தாதி பாட ஆரம்பித்தார் ஒவ்வொரு அந்தாதிக்கும் ஒரு உரிகயிறு அறுக்கப்பட்டது எழுபத்தியெட்டாம் கயிறு அறுபடும்போது தன் பக்தனுக்காக மனமிறங்கிய அபிராமி அன்னை தன் தாடகத்தை (மூக்கில் அணியும் அணிகலன்) தூக்கி வீசினாள் அந்த அமாவாசையன்று அந்த தாடகத்தின் ஒளியானது வானில் பௌர்ணமியாய் ஒளிவீசியதாம்.அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள் சுப்பிரமணிய ஐயரின் பக்தியைக்கண்டு.மேலும் அத்தனை பாடல்களையும் அபிராமி அம்பாளின் முன்னிலையில் அவர் பக்தியோடு மனமுவந்து பாடியதால் “அபிராமிபட்டர்” என்ற பட்டமும் அபிராமித்தாயினால் அளிக்கப்பட்டது.அந்த கோவிலில் அபிராமி பட்டருக்கென தனிசிலை இருப்பது சிறப்பு.அம்பாளின் அனுக்கிரகத்தோடு நாள் இனிமையாய் தொடங்கியது.உண்மையான பக்திக்கு என்றும் பங்கமில்லை என்பது இந்த கோவில் வரலாற்றின் மூலம் அறியலாம்சஷ்டியும் முடிந்தது அம்பாளின் அனுக்கிரகமும் கிட்டியது.இந்த புத்தாண்டின் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட இறைவன் புத்துணர்ச்சி தந்து வழிநடத்திட முயற்சியோடு நாம் முயன்றால் நாம் செய்ய இயலாதது எதுவுமில்லை.

1 Like